மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

APK9கட்டுரை காதை

9.சேரனை வாழ்த்தினார்

“காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி! 80
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க!”, எனக்

“குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்,அறநெறியால் உண்டான முதிர்ந்த வெற்றி என்னும் சிறப்பும் உடையவன்,வாழ்க!கடல் இடையில் இருக்கும் தீவில் வாழும் எதிரியின் கடம்பு என்னும் காவல் மரத்தை அழித்து அவர்களை வென்ற காவலன் வாழ்க!பொலிவு பெற்ற இமய மலையின் உச்சியில் வில்லைப் பொறித்த வேந்தன் வாழ்க!குளிர்ச்சியான பொருநை ஆற்றையுடைய பொறையன் எனும் மலைநாட்டை உடையவன் வாழ்க!மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் மன்னன் வாழ்க !”,என சேரனை வாயார வாழ்த்தினார் பராசரன்.

குறிப்பு

 1. கொற்றம்-வெற்றி
 2. விறல்-மேம்பாடு.
 3. கடம்பு-கடம்ப மரம்
 4. விடர்-மலை முடியில் உள்ள சரிவு,மலை
 5. தண்-குளிர்ச்சி
 6. பொறையன்-மலைநாட்டை உடையவன்(பொறை-மலை)

10.சிறுவர்கள்

kak6

குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் 85
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி,
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்;
“குண்டப் பார்ப்பீர்!என்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்”,எனச்

சுருண்ட முடியும்,குடுமியும்,மழலை பேசும் செவ்வாயும்,தளர்ந்த நடையும் உடைய சிறுவர்கள்,தங்கள் சுற்றத்தாரை பிரிந்து வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது,தங்கள் ஊருக்கு வந்து சேரனை வாழ்த்திய பராசரனைக் கண்டு அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“பிராமணச் சிறுவர்களே!என்னோடு இணைந்து வேதம் ஓதுங்கள்.அப்படி ஓதினால்,என்னுடைய சிறு மூட்டையில் இருக்கும் பொருட்களை நீங்கள் பரிசாக எடுத்துக் கொண்டு செல்லலாம்”,என்று அவர்களை நோக்கி கூறினார் பராசரன்.

குறிப்பு

 1. குழல்-சுருண்ட முடி
 2. குடுமி-உச்சியில் வைத்த தலைமுடி
 3. ஆயம்-சுற்றம்
 4. சிறாஅர்-சிறிய தலையையுடைய சிறுவர்கள்.
 5. சூழ்தர-சூழ்ந்து கொள்ள
 6. தமர்-சுற்றத்தார்,உறவினர்
 7. குண்டப் பார்ப்பீர்-பிராமணச் சிறுவர்களே
 8. பொதி-மூட்டை
 9. போமின்-செல்லுங்கள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>