மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

APK9கட்டுரை காதை

11.வார்த்திகன் மகன்

kak7
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்,
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது,
உளமலி உவகையோ டொப்ப வோதத்;
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95
முத்தப் பூணூல்,அத்தகு புனைகலம்,
கடகம்,தோட்டொடு கையுறை ஈத்துத்,
தன்பதிப் பெயர்ந்தன னாக

பெருமை மிகுந்த சிறப்புடைய வார்த்திகன் என்பவனின் மகனும் அங்கு இருந்தான்.அவன் ஆல் அமர் செல்வனான தட்சிணாமூர்த்தியின் பெயர் கொண்டவன்.தாய்ப்பால் வாசம் வீசும் சிவந்த வாயையுடைய அந்தச் சிறுவன், தன்னைப் போன்ற இளையவர் போல மழலை மாறாத தளர்ந்த சொற்களை உடையவன்.ஆனாலும்,வேதத்தின் ஒலி சிறிதும் வழுவாமல்,பரசுரனின் உள்ளத்தில் நிறைவான மகிழ்ச்சி ஏற்படுமாறு,அவனோடு சேர்ந்து ஓதினான்.

மிகுந்த அறிவுடைய அவனின் ஆற்றலைக் கண்டு பராசரன் வியந்து பாராட்டினார்.முத்துவடமாகிய பூணூலும்,அதைப் போலத் தகுதி வாய்ந்த ஆபரணங்களும்,கடகம் என்னும் கைவளையும்,தோடு முதலிய நகைகளை அவனுக்குப் பரிசாகத் தந்துவிட்டுத்,தன் ஊருக்குச் சென்றார்.

குறிப்பு

 1. சீர்த்தகு-பெருமை வாய்ந்த (சீர்-பெருமை)
 2. ஆல்-ஆலமரம்
 3. ஆலமலர் செல்வன்-தக்கிணாமூர்த்தி,தட்சிணாமூர்த்தி
 4. பால்நாறு-பால் மணம் கமழும் (நாறு-மணக்கும்)
 5. படியோர்-ஒத்தவர்
 6. விளி-ஓசை
 7. வழாஅது-வழுவாது,வழுவாமல்
 8. உளம்-உள்ளம்
 9. மலி-நிறைந்த
 10. உவகை-மகிழ்ச்சி
 11. தக்கிணன்-தக்கிணாமூர்த்தி,தட்சிணாமூர்த்தி
 12. மிக்கோன்-பெரியோன்
 13. அத்தகு-அழகு பொருந்திய
 14. கடகம்-கைவளை
 15. கையுறை-காணிக்கை
 16. பதி-நகர்

12.திருடனா?

-நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப் 100
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்,
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென,
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக

அந்தச் சிறுவன் நல்ல நகைகளை அணிந்து,அலங்காரம் செய்து கொள்வதை அந்த ஊர் மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வார்த்திகனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.அரசு வேலை செய்யும் இளைஞர்கள் சிலர்,”அரச நெறி தவறி,அரசனின் பொருளை திருடிய பிராமணன் இவன்”,என்று திருடர்களை இடும் சிறையில் அவனை அடைத்தார்கள்.

குறிப்பு

 1. நன்-நல்ல
 2. கலன்-அணிகலன்,நகை
 3. பொறாஅராகி-பொறுக்காதவர்களாய்
 4. படுபொருள்-திருடிய பொருள்
 5. வௌவிய-கவர்ந்த
 6. இடுசிறை-திருடர்களை வைக்கும் சிறை (இடு-வை)
 7. கோட்டம்-அறை

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>