மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

APK9கட்டுரை காதை

18.கோவலனின் முன்பிறவி

kak11

கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு,
வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும்,
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140
காம்பெழு கானக் கபில புரத்தினும்,
அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற,
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்,

அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து,
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு,
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் 150
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை,

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி !கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின் 155
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு,
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்

கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களங் காணாள், நீலி என்போள்,
அரசர் முறையோ? பரதர் முறையோ? 160
ஊரீர் முறையோ? சேரியீர் முறையோ ? என
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு;
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்,
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி,
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில், 165
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்,

எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே,
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ 170

“நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த “கலிங்கம்” என்னும் நல்ல நாட்டில்,ஒழுங்காகத் தொடுத்த “தார்” என்னும் மாலை அணிந்த வசு,குமரன் என்ற இரண்டு மன்னர்கள் இருந்தார்கள்.இவர்கள் முறையே,இனிய நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த சிங்கபுரத்திலும்,மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்திலும் செல்வ செழிப்புடன் அரசாட்சி செய்து வந்தார்கள்.அந்த இருவரும் அழையாத செலவத்தை உடைய உயர்ந்த குடியில் பிறந்த பங்காளிகள்.அவர்களிடம் உண்டான பகையால்,அந்த இருவர் நாட்டுக்கும் இடையான ஆறு காவதம்(சுமார் 72 மைல்) தூரத்தில் உள்ள இடைப்பட்ட நிலத்தின் எல்லா இடங்களிலும்,ஒருவரையொருவர் வெற்றி பெறுவதற்காகப் போர் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.இதனால் யாரும் அந்த வழியில் போவது இல்லை.

ஆனால்,அரிதான பொருள்களின் மேல் கொண்ட ஆசையால்,சிறந்த அணிகலன்களைச் சுமந்துக் கொண்டு,மறைந்து வாழ்பவர்களைப் போல யாருக்கும் தெரியாமல்,தன் காதலியோடு கபிலபுரத்தின் வியாபாரியான சங்கமம் என்பவன் சிங்கபுரத்திற்குச் சென்றான்.அழியாத வளமான புகழுடைய சிங்கபுரத்தில் ஒரு கடை வீதிக்குள் புகுந்து,தான் வைத்திருந்த அரிய அணிகலன்களை அவன் விற்றுக் கொண்டிருந்தான்.

தங்க வளையல்கள் அணிந்தவளே!முன் பிறப்பில்,உன் கணவனான கோவலன் கடுமையான வலிமை வாய்ந்த மன்னன் வசுவிடம் அரசு வேலை செய்பவனாக இருந்தான்.பரதன் என்னும் பெயரை கொண்ட அவன் ஆராய்ந்து முறை செய்தலே அறம் என்னும் விரதத்தைப் பின் பற்றாதவன்.கபிலபுரத்தின் மேல் மிகுந்த வெறுப்பையும் கொண்டவனாக இருந்தான்.அதனால்,சங்கமனை “பகைவரின் ஒற்றன் இவன்”,எனப் பிடித்துக் கொண்டு போய்,வெற்றி தரும் வேலுடைய மன்னனிடம் காட்டிக் கொன்றான்.

கொலைக்களத்தில் இறந்த சங்கமனின் மனைவியான “நீலி” என்பவள்,தான் உயிருடன் வாழ்வதற்கு இருப்பிடம் காணமுடியாமல் துடிதுடித்தாள்.”அரசரே முறையா?வியாபாரிகளே இது முறையா ? ஊரில் உள்ளவர்களே இது முறையா ?சேரியில் வாழ்பவர்களே இது முறையா?”,என்று கூறி,மன்றங்களிலும் தெருக்களிலும் சண்டையிட்டுச் சென்றாள்.பதினான்கு நாட்களுக்குப் பின்,”தன் கணவனை வணங்கற்குரிய நாள் இது”,என அவனை பலவிதமாகப் போற்றி,மலையுச்சியின் மீது ஏறி,ஒப்பற்ற உயர்ந்த வானத்தின் எல்லையில்,கொலை செய்யப்பட்ட தன் கணவனோடு தானும் இறந்து அவனுடன் ஒன்று சேரக் கருதி சென்று நின்றாள்.

நின்றவள்,”எனக்கு இப்படியொரு பெரிய துன்பம் செய்தவர்,எவராய் இருந்தாலும்,இது போன்ற பெருந்துன்பத்தை அடைய வேண்டும்”,என்று கூறியபடி விழுந்து இறந்தாள்.அவளின் குற்றமற்ற சாபத்தால்,இந்தத் துன்பத்தைக் கோவலனும்,நீயும் இந்தப் பிறவியில் அடைந்தீர்கள் !”,

எனக் கண்ணகியிடம் கோவலன் இந்தப் பிறவியில் அனுபவித்த துன்பத்திற்குக் காரணமான அவனின் முன் பிறவிச் செய்தியை கூறினாள் மதுராபதித் தெய்வம்.

குறிப்பு

 1. கடி-மணம்
 2. பொழில்-சோலை
 3. உடுத்த-உடுத்திய
 4. தீம்-இனிய
 5. புனல்-நீர்
 6. பழனம்-வயல்
 7. காம்பு-மூங்கில்
 8. கானல்-காடு
 9. அரைசு-அரசு
 10. ஆள்-ஆளும்
 11. தார்-மாலை
 12. வீயா-அழியாத
 13. திரு-செல்வம்
 14. விழுக்குடி-சிறந்த குடி
 15. இருமுக்காவதம்-6(2*3) காவதம்,சுமார் 72 மைல்.(காவதம்-சுமார் 10-12 மைல் தூரம்)
 16. யாங்கணும்-எல்லா இடத்திலும்
 17. செருவல்-போரில் வலிமை (செரு-பகை,போர் வல்-வலிமை)
 18. வென்றி-வெற்றி
 19. இன்மை-இல்லாமை
 20. தாயம்-உரிமை
 21. அரும்பொருள்-பெறுதற்கு அரிய பொருள்
 22. வேட்கை-விருப்பம்
 23. பெருங்கலன்-சிறந்த அணிகலன்
 24. கரந்துறைமாக்கள்-ஒற்றர் போன்றவர்கள் (கரந்து-மறைந்து உறை-இருப்பிடம் மாக்கள்-மக்கள் )
 25. சிங்கா-அழியாத (சிங்காமை-அழியாமை)
 26. வண்புகழ்-வளமான புகழ் ( வண்-வளமை )
 27. அங்காடிப்பட்டு-கடைத்தெருவில் புகுந்து (அங்காடி-கடைவீதி,கடைத்தெரு)
 28. பகரும்-விலைகூறி விற்கும்
 29. வாணிகன்-வியாபாரி
 30. பைந்தொடி-பொன் வளையல் (தொடி-வளையல்)
 31. வெந்திறல்-வலிமை வாய்ந்த (திறல்-வலிமை)
 32. கோத்தொழில்-அரசு வேலை
 33. கொல்வுழி-கொல்லும் போது(உழி-பொழுது)
 34. என்போள்-என்பவள்
 35. நிலைக்களம்-நிலைத்து வாழும் இடம்
 36. காணாள்-காணாதவளாய்
 37. பரதர்-வணிகர்,வியாபாரி
 38. மறுகு-தெரு,வீதி
 39. சேரி-பல குடிகள் சேர்ந்திருப்பது
 40. பூசல்-சண்டை
 41. எழுநாள் இரட்டி-பதினான்கு நாள்(ஏழுநாள்(7)*இரட்டி(2)=14 )
 42. மலைத்தலை-மலை உச்சி
 43. ஓர்-ஒப்பற்ற
 44. மால்-பெரிய
 45. விசும்பு-வானம்
 46. ஏணி-எல்லை
 47. கொலைத்தலை-கொல்லுதலையுடைய
 48. கூடுபு-கூடி
 49. எம்-என்
 50. உறு-மிக்க
 51. இற்று-இத்தகைய
 52. விழுவோள்-விழுகின்றவள்
 53. வழுவில்-தவறு இல்லாத(வழுவு-தவறு)
 54. பட்டனிர்-பெற்றீர்கள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>