19.தெய்வத்தின் உறுதிமொழி
உம்மை வினைவந் துருத்த காலைச்,
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்! நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென,
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின்
அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் கேள் !”முன்வினை அதன் பயனை கொடுக்க வரும் போது,வளமை இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு செய்த தவமும் உதவியாக வந்து கைகொடுக்காது.நீண்ட,தழைத்த கூந்தலை உடையவளே !உன் கணவனை இன்றையிலிருந்து பதினான்கு நாட்கள் கழிந்த பின்,தேவர்களின் வடிவில் நீ காண்பாய்,அது மட்டுமல்ல இனி மானிட வடிவில் காண மாட்டாய்”,இவ்வாறு விதிமுறைகளைக் கண்ணகியிடம் சொல்லிய பின்,மதுராபதித் தெய்வம் மதுரை நகரைப் பற்றிய தீயை தணித்து சென்றது.
குறிப்பு
- உம்மை-முற்பிறவி
- செம்மை-வளமை
- இலோர்க்கு-இல்லாதவர்களுக்கு
- செய்தவம்-செய்த வினை
- வார்-நீண்ட
- ஒலி-தழைத்த
- நின்-உன்
- நாளகத்து-நாளளவு (அகத்து-உள்ளே)
- வானோர்-தேவர்கள்
- ஈனோர்-இந்த உலகத்தார்
- காண்டல்-காணுதல்
- இல்-இல்லை
- மா-பெருமை
- மாபத்தினி-மிகுந்த கற்புடையவள்
- ஈன்-இவ்விடம்
- அழல்-தீ
- வீடு-விடுதலை
20.கண்ணகி வெளியேறினாள்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக், 180
கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்,
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென,
“என் எண்ணம் முழுதும் நிறைந்த கணவனைக் காணும் வரை அமரவும் மாட்டேன்,நிற்கவும் மாட்டேன்!”,என்று கூறியவாறு,கண்ணகி,கொற்றவையின் கோயில் வாசலில்,தன் பொன் வளையலை கழட்டிவிட்டு,”கீழ்த்திசை வாசல் வழியாக என் கணவனுடன் இந்த மதுரைக்குள் நுழைந்தேன்,மேற்கு திசை வாசல் வழியாக என் கணவனை இழந்த வறியவளாக நான் வெளியேறுகிறேன்”,என வருந்தியவாறு,மதுரை நகரை விட்டு வெளியேறினாள்.
குறிப்பு
- கருத்துறு-கருத்தில் பொருந்திய ( உறு-பொருந்திய )
- இருத்தல்-அமர்தல்,இளைப்பாறுதல்
- இலன்-இல்லாமல்
- பொன்-பொலிவு
- தொடி-வளையல்
- பெயர்கு-செல்கிறேன் (பெயர்தல்-செல்லுதல்)
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in