வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)

kklogoகுன்றக் குரவை

9.மணக்கோலம் தருக!
kundra8
வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து,
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்;வந்தால்,
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.15

கயிலைநன் மலையிறை மகனை! நின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 16

மலைமகள் மகனை !நின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்,
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே; 17

குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெருகநன் மணம்விடு பிழைமண மெனவே;18

வேலன் வந்து,வெம்மையான களத்தில் வெறியாடலையும் நிகழ்த்துவார்.அந்த நேரம்,அழகிய நகைகள் அணிந்த நம் வள்ளியோடு,ஆலமரத்தில் அமர்ந்த சிவபெருமானின் மகனான முருகன் நீல நிற மயிலின் மீது வருவான்.அவன் வந்தால்,பெரிய மலைக்கு உரிய குறிஞ்சி நிலத் தலைவன் எங்களுக்கு மணக்கோலம் தருக!’ என அவனை நாம் வேண்டுவோம்.

“நம் மலையான கைலாசதிற்கு இறைவனான சிவனின் மகனே!உனக்குரிய நிலா போன்ற நெற்றியையும்,மயிலின் சாயலும்,மடமையும் பொருந்திய எங்கள் மலைகுலப் பெண்ணான வள்ளியின் அசோக இலைப் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்.என் சுற்றத்தார் அயலில் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள்.அதை எல்லாம் ஒழித்து விட்டு,என் காதலனுடன் திருமணம் கூடுமாறு அருள் செய்வாய்”, என அவனை வேண்டுவோம்.

“மலைமகளின் மகனே !உன் நிலாப் போன்ற நெற்றியை உடைய ஒன்றும் அறியாத பெண்ணான வள்ளியின் குலமான,மலையில் வாழும் குறவர்களான பெண்களின் நிலையை உயரச் செய்யும் கடவுளின் இரு பாதங்களையும் வணங்குகிறோம்.எனக்கு,என் குறிஞ்சி நிலத் தலைவனுடன் பலர் அறிய திருமணம் செய்து வைப்பீர்கள் என நம்பி உன்னை வணங்குகிறோம்”,என்று தொழுவேன்.

“ஆறுமுகமுடைய ஒப்பற்றவனே! உன் துணைவியான குறமகள் வள்ளி இருக்கிறாளே,அவள் எங்கள் குலமகள்.அவளுடைய உன் திருவடிகளையும் தொழுகிறோம்.நீரத்துறையில் நின்று.உன் இரு திருவடிகளைப் பற்றிகொண்டவர்களுக்கு நன்றாக திருமணம் அமைய வேண்டும்.தவறான திருமணம் அவரை விட்டு விலக அருள வேண்டும்”,என்று வேண்டுவோம்.

குறிப்பு

 1. வேலனார்-வேலன்
 2. வெங்களம்-வெம்மையான களம்
 3. நேரிழை-சிறந்த நகைகள் (நேர்-அழகு இழை-அணிகலன்,நகை)
 4. ஆலமர் செல்வன்-ஆலமரத்தில் அமர்ந்த சிவன்(ஆல்-ஆலமரம்)
 5. வரும்-வருவார்
 6. மால்-பெரிய
 7. வெற்பன்-குறிஞ்சிநிலத் தலைவன்
 8. மணவணி-மணக்கோலம்
 9. வேண்டுதுமே-வேண்டுகிறோம்
 10. கயிலை-கைலாசம்,கைலாயம்
 11. நன்மலை-நல்ல மலை
 12. மதி-நிலா
 13. நுதல்-நெற்றி
 14. இயல்-சாயல்
 15. மடவரல்-ஒன்றும் அறியாப் பெண் (மட-மடமை,பேதமை)
 16. மலையர்-மலைவாணர்,மலைவாசிகள்
 17. செயலை-அசோக மலர்
 18. புரை-போன்ற
 19. தொழுதேம்-வணங்கினேன்
 20. குலமலை-சிறந்த மலை (குலம்-சிறப்பு)
 21. உறைதரு-உறைகின்ற
 22. இணையடி-இரண்டு பாதங்கள்(அடி-பாதம்)
 23. துறைமிசை-துறையில்
 24. அடிதொடுதல்-அடிதொட்டுச் சூளுறுதல்
 25. பிழை மணம்-அயலார் மணம்

10.அவனிடம் கூறியது

என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி,
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி! 19

கடம்பு சூடி,உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோ ளில்லை
கடம்பூண் தெய்வ மாக நேரார்,
மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே! 20

‘இவ்வாறு நாம் குரவைப் பாடும்போது,மறைவாக நின்று கேட்டுப் போனவனான,மணம் கமழும் அழகிய மாலைச் சூடிய மலை நாடன் முன் நின்று நான் திருவடிகளைக் கையால் தொட்டு வணங்கினேன்.அப்போது அவனிடம் நான் கூறியதைக் கேள்,தோழி !

கடம்ப மலர் மாலையைச் சூடி,வேலினைக் கையில் ஏந்தி,ஒரு பெண்ணிற்காக இந்த ஊருக்கு வந்தவனே!முருகனுக்கு உரிய ஆறுமுகமும் இல்லை!அழகிய மயிலும் இல்லை!குறமகள் வள்ளியும் இல்லை!செறிந்தத் தோள்கள் பன்னிரெண்டும் இல்லை! அதனால் பகை ஏற்கும் குமரத் தெய்வமாக உன்னை அனைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இந்தச் சிறு வீடுகளில் வாழும் மக்கள் அறிவில்லாதவர்கள் ..

குறிப்பு

 1. மறைநின்று-மறைந்து நின்று
 2. மன்றல்-மணம்,வாசனை
 3. கண்ணி-ஆண்கள் தலையில் சூடிக்கொள்ளும் பூமாலை.
 4. உடம்பிடி-வேல்
 5. செறிதோள்-செறிவான தோள்
 6. கடம்பூண்(டு)-கடமையாக மேற்கொண்டு (கடம்-கடமை),பகை ஏற்று(>கடம்-கடன்,பலி)
 7. மடவர்-அறிவில்லாதவர்கள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>