வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 9)

kklogoகுன்றக் குரவை

11.பத்தினியைப் பாடுவோம் !

kundra1

என்றீங்கு,
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்,
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்!

முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்,
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம் 21

பாடுகம் வா,வாழி! தோழி!யாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே 22

பாடுற்றுப்,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே!
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே!23

வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே! 24

மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்ம,இவ் வூருமோர் பெற்றி!
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்.25

இந்தச் சிறு வீடுகளில் வாழும் மக்கள் அறிவில்லாதவர்கள் என்ற பழிச்சொல் இங்கே பெருகி இருப்பதை நான் எடுத்துக் கூறினேன்.அதைக் கேட்டுப் புலந்து வாடுகின்ற தனது உள்ளத்தை விட்டு விட்டுப் போன,விரிந்துப் பரந்த இடத்தை உடைய ‘வெற்பன்’ எனும் நம் குறிஞ்சி நிலத் தலைவன்,விரைந்து வந்து வரைந்து கொள்வான் என்பது போல இருந்தான்.

பெரிய மதுரை நகரத்திற்குத் தன் ஒரு மார்பின் முலையினால் தீங்கு இழைத்தவளின் காதல் தலைவனை.வானோர் சுற்றத்தாரோடு கூடிப் பலர் வணங்கும் அந்தப் பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலைமை ஒப்பற்றது!அதை இனி நாம் போற்றிப் பாடுவோம்.

தோழி! அரசனானவன் தன் ஆட்சி முறையிலிருந்து தவறினான்.அதனால்,கொடிப் பறக்கும் மாடங்கள் நிறைந்த மதுரை நகரே தீப்படுமாறு செய்தாள் அவள்.அவளை நாம் போற்றிப் பாடுவோம்.அப்படிப் பாடும்போது,’பெரிய மலையின் தலைவனான நம் காதலனுடன் மணக்கோலம் தருக’,என்று அத்தெய்வத்தை வேண்டிப் பாடுவோம் வா தோழி !

அவள் பெருமை வாய்ந்தவள்.பத்தினிப் பெண்களால் போற்றி வணங்கத்தக்கவள்.ஒப்பற்ற பாம்பின் படம் போல அல்குலினை உடையவள்.பசுமையுடைய நம் வயலில் இருக்கிறாள்.

அவள் கணவனை,வானத்தில் இருக்கும் தேவர்கள்,தானே கொண்டு வந்து அவளிடம் கொடுத்து,அவளைப் போற்றிப் புகழாமல் இருக்க மாட்டார்கள்.

வானத்தில் வாழும் தேவர்கள் வணங்கிப் போற்ற,காட்டில் நறுமணம் வீசும் வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண்ணாக நின்றாள்.அப்படி நின்றவள்,தன் கணவனோடு நிலையான வானுலக வாழ்க்கையையும் பெற்றாள்

அப்படி மீண்டவளை,பிறப்பு இல்லாதவளைப் போற்றி பாடும் பெருமை இந்த ஊருக்கும் இருக்கிறது.பொன்னால் செய்த ‘தொடி ‘ எனும் வளையல் அணிந்தப் பெண்கள்,தாங்கள் விரும்பிய காதலருடன் திருமணம் செய்து கொள்ளும் சிறப்பினை உடையதல்லவா இந்த ஊர் !

குறிப்பு

 1. அலர்-பலருக்கும் தெரியும்படி பழித்தல்
 2. புலர்-புலர்ந்து
 3. வாடு-வாடும்
 4. மலர்தலை-பரந்து விரிந்திருக்கும் உலகம்
 5. வெற்பன்-குறிஞ்சிநிலத் தலைவன்
 6. கோள்-கொள்ளுதல்
 7. இழைத்தாள்-செய்தாள்
 8. தமர்-சுற்றத்தார்
 9. பாடுகம்-பாடுவோம்
 10. யாம்-நாம்
 11. கூடல்-மதுரை
 12. ஏத்தி-போற்றி
 13. மணவணி-மணக்கோலம்
 14. வேண்டுதுமே-வேண்டுவோம்
 15. பாடு-பெருமை
 16. பரவி-போற்றி
 17. ஓர்-ஒப்பற்ற
 18. பைத்தரவு-பாம்பின் படம்(அரவு -பாம்பு)
 19. பைம்புனம்-பசுமையான புனம் (பைம்-பசுமை புனம்-நிலம்,காடு)
 20. உய்த்தல்-கொடுத்தல்
 21. உரை-புகழ்,புகழ்தல்
 22. அமரர்-தேவர்
 23. ஏத்த-போற்ற
 24. கான-காடு
 25. நறு-நறுமணம்
 26. வேங்கை-வேங்கை மரம்
 27. காரிகை-பெண்
 28. மறுதரவு-மீட்சி,மீண்டு வருதல்
 29. பெற்றி-நோன்பு,தன்மை,பெருமை

12.சேரன் வாழ்க!

kundra9
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டு,நம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே!

இப்படி,’கொண்ட நிலை’ என்னும் பாட்டைப் பாடி நாங்கள் ஆடும் குரவையைக் கண்டு,நம் காதலர் நம் வழிக்கு வந்தார்கள்.நம்மையும் மணந்தார்கள்.தனது வில் சின்னத்தை பொறித்த இமய மலையோடு,கொல்லிமலையையும் ஆண்ட குடநாட்டு மன்னன்,எப்போதும் வீரபானத்தை உண்டு களித்து,மகிழ்ச்சியுடன் என்றும் சிறப்பாக வாழ வேண்டும்!

குறிப்பு

 1. கொண்டுநிலை-ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டுகூறுதல்
 2. ஆனாது-அமையாது
 3. வைகல்-விடியல்,அதிகாலை

குன்றக் குரவை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>