வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

katchilogo1காட்சிக் காதை

3.எழுந்த ஒலிகள்

kaatchi3

குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், 25
தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும்,
நறவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும்,
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்,

கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும், 30
பயம்பில்வீழ் யானைப் பாக ரோதையும்,
இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்ப

குரவைக் கூத்து எனும் குன்றவர்களான குறவர்கள் ஆடும் குரவை எனப்படும் நடனத்தின் ஒலியும்,கொடிச்சியர் எனும் குறத்தியர் பாடும் பாடலும்,வெற்றிப் பொருந்திய ‘செவ்வேள்’ என்று அழைக்கப்படும் சிவந்த மேனி உடைய முருகனை வாழ்த்துகின்ற தேவபாணியின் பாட்டொலியும்,பெண்கள் உலக்கையால் உரலில் தினையைப் போட்டுக் குத்தும் போது பாடும் வள்ளைப் பாட்டின் ஒலியும்,புனத்தில் பறவை ஓட்டுபவர்கள் எழுப்பும் பாடல் ஓசையும்,தேன் கூட்டை உடைத்து,குறவர் எழுப்பும் ஆரவார ஒலியும்,பறை முழக்கம் போல நீர் விழும் அருவியின் பயன் மிகுந்த ஒலியும்,புலியுடன் போராடும் முகத்தில் புள்ளிகள் இருப்பதால் ‘புகர்முகம்’ என்று அழைக்கப்படும் யானையின் பிளிர் ஒலியும்,தழைத்துப் படர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள பரணின் மீது உள்ளவன் விலங்குகளைக் கலைக்கும் பறைமுழக்கத்தின் ஓசையும்,’பயம்பு’ எனும் யானைகளைப் பிடிக்க வெட்டப்படும் குழியில் விழுந்த யானையைப் பிடிப்பவர் எழுப்பும் ஆரவாரமும்,சேரனுடன் வரும் படையின் இயக்கத்தால் எழுந்த பேரொலியோடு கலந்து,மலையின் எல்லாப் பக்கமும் ஒலித்துக் கொண்டிருந்தன.

குறிப்பு

 1. கொடிச்சியர்-குறத்திகள்
 2. குரவைக் கூத்து-குன்றவர்களான குறவர்கள் ஆடும் குரவை எனும் நடனம்(குன்றவர்-குறவர் குரவை-நடன வகை)
 3. வென்றி-வெற்றி
 4. செவ்வேள்-சிவந்த மேனி உடைய முருகன்
 5. பாணி-தேவபாணி(தெய்வத்தைப் புகழும் கடவுள் வாழ்த்து பாடல்)
 6. குறுவள்ளை-மகளிர் உலக்கையால் உரலில் ஏதாவது பொருளைப் போட்டு குத்தும் போது பாடும் பாட்டு (வள்ளை-உலக்கை)
 7. புனம்-மலையை அடுத்து விளைநிலமாகப் பயன்படும் ஒரு பகுதி,கொல்லை
 8. விளி-ஓசை
 9. நறவு-தேன்
 10. ஓதை-முழக்கம்
 11. பயங்கெழு-பயன் பொருந்தும் (கெழு-பொருத்திய)
 12. பொரூஉம்-போராடும்
 13. புகர்முகம்-முகத்தில் புள்ளி உடைய யானை (புகர்-புள்ளி)
 14. மீமிசை-உயர்ந்த பரண் (மீ-மேலிடம் மிசை-மேல்)
 15. சேணோன்-உயரமான இடத்தில் இருப்பவன் (சேண்-உயரமான)
 16. பயம்பு-யானை பிடிக்க வெட்டப்படும் குழி
 17. அரவம்-சத்தம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

 1. K.Ramachandran says:

  vanchi kaandam ….vanchi
  ( chera’s capital)= Thiru vanchi kalam ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>