வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

katchilogo1காட்சிக் காதை

6.சாத்தனார் கூறியது

APK1

மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65
தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும்
ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம்,
திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய்.

தீவினைச் சிலம்பு காரண மாக
ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70
வலம்படு தானை மன்னன் முன்னர்ச்
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்
செஞ்சிலம் பெறிந்து,தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி,
“அஞ்சி லோதி!” அறிகெனப் பெயர்ந்து,75
முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்

“அரிமா னேந்திய அமளிமிசை இருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன் 80

மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
“மன்னவன் செல்வுழிச் செல்க யான்”,எனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல், 85
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்

“கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று!” எனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று 90
ஒழிவின் றுரைத்தீண் டூழி யூழி
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத்

பூமித்தாய் ஆனந்தம் அடையுமாறு ஆட்சி நடத்தி வருக்குன்ற,நீண்ட வேலைக் கையில் வைத்திருக்கும் செங்குட்டுவனைக் கண்டு,கண்களில் மகிழ்ச்சியில் மயங்கிய சாத்தனாரும் அந்த இடத்தில் இருந்தார்.செங்குட்டுவனைப் பெரிதும் விரும்பிய,அருள் நிறைந்த தமிழ் மொழியின் ஆசிரியரான சாத்தனார்,’ஒளி நிறைந்த வளை அணிந்தவளான அந்தப் பெண்ணுக்கு நடந்த அனைத்தையும்,வலிமையையும் வெற்றியும் உடைய மன்னனே,நான் உனக்குக் கூறுகிறேன் கேள்!’,என்றுச் சொல்ல ஆரம்பித்தார் …

தீவினையின் கருவியாக அமைந்துவிட்ட சிலம்பின் காரணமாக,அழகிய தேர்ந்தெடுத்த வளையல் அணிந்த அந்தப் பெண்ணின் கணவன் இறக்க நேர்ந்தது.வெற்றிக்குக் காரணமானப் பெரும் படையை உடையப் பாண்டிய மன்னனின் முன்,தன்னிடம் இருந்த ஒற்றைச் சிலம்புடன் சென்று அந்தப் பெண் வழக்காடினாள்.விலை உயர்ந்த தன் சிலம்பை உடைத்துப் பாண்டிய மன்னனின் மனைவியின் முன்பாகக் கடுங்கோபத்தோடு அந்தப் மாபெரும் பத்தினி,’அழகிய சின்னக் கூந்தலை உடையவளே!என் ஆற்றலை அறிவாயாக’,என்றுச் சொல்லி,தன் ஒரு மார்பைக் கையால் திருகி எடுத்துச் சுழற்றியபோது,அதிலிருந்து எழுந்த தீயால்,பழைய நகரான மதுரை பெருநகரையே அவள் தீ மூட்டினாள்.

சிங்கத்தின் உருவம் சுமந்த அரசுக் கட்டிலில் இருந்த,திருமகள் விரும்பும் மார்புடைய பாண்டிய மன்னன் வீழ்ந்ததைக் கண்டு,பூங்கொத்துக்களால் செய்த மாலை உடையப் பெண்ணின் மிகுந்த துன்பத்தைக் காண முடியாமல் மயங்கினானோ என்று எண்ணி,அவனுடைய மலர் போன்ற திருவடிகளை வருடினாள் அவன் மனைவி கோப்பெருந்தேவி.கண்ணகி கோபத்துடன் கூறிய வீர வார்த்தைகளை அவள் தன் காதில் கேட்கவேயில்லை.எந்தவிதக் கலக்கமும் இல்லாமல்,கணவன் இறந்த பெரும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல்,’என் மன்னன் சென்ற இடத்திற்கு நானும் செல்வேன்’,என்றுக் கூறித்,தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடிச் செல்பவள் போல்,அந்த நொடியே தானும் அவனுடன் விழுந்து,உயிர் துறந்தாள்.

‘வெற்றி வேந்தனான பாண்டியனின் தவறிய செங்கோலின் தன்மை இது’,என உனக்குக் கூறுவது போல,கணவனை இழந்து தனிமை படுத்தப்பட்ட அந்தப் பெண், தன் சோழ நாட்டிற்குச் செல்லாமல்,உன் நாட்டிற்கு வந்து சேர்ந்தாளோ ?’,என்றுக் கேட்டு நடந்த அனைத்தையும் கூறி முடித்தார் சாத்தனார்.

‘இந்த உலகில் உங்கள் மேன்மை பொருந்திய வெற்றி ஊழிதோறும் வழி வழியாகச் சிறந்து விளங்கும்!,எனச் சேரனையும் முடிவில் வாழ்த்தினார்.

குறிப்பு

 1. தண்டமிழ்-குளிர்ச்சியான தமிழ்,அருள் நிறைந்த தமிழ் (தண்-குளிர்ச்சி,அருள்)
 2. ஒண்-ஒளி
 3. தொடி-வளை
 4. திண்-வலிமை,உறுதி
 5. திறல்-வலிமை,வெற்றி
 6. ஆய்தொடி-தேர்ந்தெடுத்த வளையல்,அழகிய வளையல்
 7. அரிவை-பெண்
 8. வலம்படு-வெற்றி உடைய (வலம்-வெற்றி)
 9. தானை-படை
 10. சேயிழை-பெண்
 11. செஞ்சிலம்பு-செழுமையான சிலம்பு
 12. வஞ்சினம்-கடுங்கோபம்
 13. அஞ்சிலோதி-பெண்ணின் அழகிய சின்ன கூந்தல் (அம்-அழகிய சில்-சிலவாகிய ஓதி-பெண்ணின் கூந்தல்)
 14. அறிகென-அறிவாய் என
 15. பெயர்ந்து-நீங்கி
 16. முதிரா-முற்றாத
 17. அரிமான்-சிங்கம்
 18. அமளிமிசை-கட்டில் மீது (அமளி-கட்டில் மிசை-மீது)
 19. திருவீழ்-திருமகள் விரும்பிய (திரு-திருமகள் வீழ்-விரும்பிய)
 20. தென்னர்-பாண்டியன்
 21. கோமான்-மன்னன்
 22. தயங்கு(தயங்கும்)-விளங்கும்
 23. இணர்-பூங்கொத்துக்கள்
 24. கோதை-மாலை
 25. பொறாஅன்-பொறுக்காதவன்
 26. தலைத்தாள்-தலைவன் முன்னிலை
 27. நெடுமொழி-வீர மொழி,ஒரு வீரர் தன் பெருமைகளைத் தானே சொல்வது
 28. கேளாள்-கேட்காமல்
 29. கொற்ற-வெற்றி
 30. கொடுங்கோல்-வளைந்த கோல்,நீதிநெறி தவறிய அரசாட்சி
 31. இற்று-இந்த தன்மை உடையது
 32. இறைக்கு-அரசனுக்கு
 33. உரைப்பனள்-உரைப்பவள்
 34. ஆங்கண்-அந்த இடத்தில்
 35. செல்லாள்-செல்லாதவளாய்
 36. நின்னாட் டகவயின்-உன் நாட்டு எல்லைக்குள் (நின்னாட்டு-உன் நாட்டு அகவயின்-எல்லையில்)
 37. ஒழிவின்று-ஒழிவு இல்லாமல்
 38. ஈண்டு-இங்கு,இவ்விடத்தில்
 39. ஊழி-முடிவு
 40. வலம்படு-வலிமை பொருந்திய (வலம்-வலிமை படு-பொருந்திய)

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>