10.கல்லை எங்கிருந்து எடுக்க வேண்டும்?
ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்,
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்.
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்,
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்
தன் நாட்டிற்கு வந்த பத்தினிக் கடவுளை வழிபடும் முறைகளை அறிய சேரன் செங்குட்டுவன் தங்களைப் பார்த்தவுடன்,”அழியாத தன்மையுடைய பொதிய மலையில் எடுக்காமல்,நம் சின்னமான வில்லைத் தன் தலையில் கொண்டிருக்கும் மிகப் பெரிய மலையான இமய மலையில் கல்லை வெட்டிக் கொண்டு வருவதே,கடவுள் வடிவம் வடிக்கத் தகுதியுடையதாகும்.அந்தக் கல்லை,பெரிய ஆறான கங்கையிலும் காவேரி நீரிலும் முறையாக மூழ்கி நீர்ப்படை செய்ய வேண்டும்”,என்றார்கள் புலவர்கள்.
குறிப்பு
- ஒற்கா மரபு-அழியாத தன்மை
- பொதி-பொதிய மலை
- வியன்பேர்-மிகப் பெரிய (வியன்-மிகுந்த;பேர்-பெரிய)
- கற்கால்-கல்லை வெட்டுதல் (கால் கொள்ளுதல்-வரைந்து அடித்தெடுத்துக் கொள்ளுதல்)
- புனல்-நீர்
- குன்றம்-மலை
- நீர்ப்படை-கற்களை புனித நீரால் நீராட்டுவது
- தகவு-தகுதி
11.சேரன் சொன்னது
பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு,
முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்,
மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று 125
அறிஞர்கள் சொன்னதைக் கேட்ட சேரன்,’பொதிய மலையில் கல்லைப் பெயர்த்துக் கொண்டு வந்து,பழைய நீர்ப்பெருக்கினை உடைய காவேரித் துறையில் நீர்ப்படை செய்வது,வீரப் பெருமையுடைய,நீண்ட வாள் ஏந்திய எங்கள் சேரர் குலத்தில் பிறந்தவர்களுக்குப் பெருமை சேர்க்கும் செயலா ?அப்படி இல்லை அல்லவா!’,என்றார்.
குறிப்பு
- முதுநீர்-பழைய நீர்
- வரூஉம்-வருகின்ற
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in