வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

katchilogo1காட்சிக் காதை

12.சேரன் செங்குட்டுவன் சபதம்

kaatchi10
புன்மயிர்ச் சடைமுடி,புலரா வுடுக்கை
முந்நூல் மார்பின்,முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்.130

வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்
தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை 135
நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்
நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமொடு ஆங்கயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை
மேம்பட மலைதலும்,காண்குவல் ஈங்கெனக் 140

“சிறிய மயிரால் ஆனச் சிவந்த சடைமுடியும்,ஈரம் காயாத உடையும்,மூன்று நூல்களைக் கொண்ட பூணூல் அணிந்த மார்பும்,முத்தீ எனப்படும் மூன்று வகையான வேள்வித் தீகளான ‘ஆகவனீயம்,காருகபத்தியம்,தக்கிணாக்கினி’ போன்ற செல்வம் உடையவரும்,பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு,பூணூல் அணிந்தப் பின் இன்னொரு பிறப்புமாக இரு பிறப்புகள் உடைய அந்தணர்களுடன் பெரிய மலையான இமய மலையில் இருக்கும் அரசன்,இளம் வயதிலேயே இறந்துப் போன மாபெரும் பத்தினியை கடவுளாக வழிபடுவதற்கான சிலையை வடிக்க ஒரு கல்லைத் தருவானோ?”,என்று கேள்வி எழுப்பினான் சேர செங்குட்டுவன்.

“அவன் தரமாட்டான் என்றால்,அவனைத் தண்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

தங்கள் கருத்து வழி நின்று பயன்படாத மக்கள் வாழ்க்கையின் இயல்பை,பருவத்தைக் கழித்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டிக் கூறுவது முதுகாஞ்சி.தொன்மையான பரம்பரையில் பிறந்த முதிராச் செல்வியான பார்வதியைப்,பிறைசூடிய இறைவனான சிவபெருமானுக்கு அவர் தன் வீரத்தைக் காட்டிய பிறகு,அளித்தான் இமய அரசன்.அதைப் பற்றிச் சொல்வது மகட்பாற் காஞ்சி.தென்திசையில் உள்ள எங்கள் வஞ்சி நாட்டு முன்னவர்கள் இமய மலையில் வில் கொடியைப் பொறிக்கச் சென்ற போது,வடதிசையில் இருப்பவர்கள் எதிராக நின்று தடுக்கமுயன்று தோல்வி அடைந்ததைச் சொல்வது நீண்ட பெருங்காஞ்சி.இந்த மூன்று காஞ்சிகளையும் அவன் காண நேரிடும்.

நிலவின் தன்மையான கதிர்கள் படிந்த உயர்ந்த பெருமுடியான இமயத்தில் மலர்ந்த மந்தாரம் எனும் மந்தாரை மலரோடு,அந்த இடத்தில் அதன் அருகில் மலர்ந்த வேங்கை மலரோடும் தொடுத்த,பொலிவான வெற்றி மாலையை மேன்மை உண்டாகுமாறு நாம் சூடுவதையும் காண்போம்”,என்று சேரன் செங்குட்டுவன் சபதம் செய்தான்.

குறிப்பு

 1. புன்-புல்லிய,சிறிய
 2. புலரா-காயாத
 3. உடுக்கை-உடை
 4. முந்நூல்-மூன்று நூல்களைக் கொண்டபூணூல்
 5. முத்தீ-மூன்று வகையான வேள்வித் தீகளான,
  ஆகவனீயம்
  காருகபத்தியம்
  தக்கிணாக்கினி
 6. இரு பிறப்பாளர்-பூணூல் அணிவதற்கு முன் மனித தன்மை உடைய பிறப்பும்,பூணூல் அணிந்த பின் தெய்வத் தன்மை கொண்ட இன்னொரு பிறப்புமாக இரு பிறப்புகள் உடைய அந்தணர்கள்.
 7. மடவதின்-இளமையில் (மடம்-இளமை)
 8. பயவா-பயன் ஏதும் தராத
 9. மாண்பில்-பெருமை இல்லாத (மாண்பு-பெருமை;இல்-இல்லாத)
 10. (முது)காஞ்சி-மூத்தோர் இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துரைக்கும் நூல்
 11. முதுகுடி-தொன்மையானக் குடி
 12. முதிராச் செல்வி-முதுமை எய்தாத செல்வியான பார்வதி தேவி
 13. மகட்பாற் காஞ்சி-மறக் குடியில் பிறந்த பெண்ணை மணக்க விரும்பிய வேந்தன்,அந்தக் குடி மக்கள் அதை விரும்பவில்லை என்றால்,பெரும் படையோடு சென்று அவரோடு போர் புரிவதுண்டு.அந்த மறவர்களும் தங்கள் மானத்தை காப்பதற்காக அஞ்சாமல் எதிர்ப்பார்கள்.இந்த நிகழ்வை சொல்லும் புறத்துறை தான் மகட்பாற் காஞ்சி.
 14. பெருங்காஞ்சி-மறவர் தங்கள் ஆற்றலைப் போர்ப்படைக்கு நடுவில் வெளிப்படுத்துவதைக் கூறும் புறத்துறை.
 15. அலர்-மலர்
 16. மந்தாரம்-மந்தாரை மலர்
 17. ஆங்கயல்-அங்கு அருகில் (அயல்-அருகில்)
 18. விளங்கு-ஒளிர்தல்
 19. விறல்-வெற்றி
 20. மலைதல்-சூடுதல்
 21. காண்குவல்-காண்பேன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>