வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

katchilogo1காட்சிக் காதை

14.வில்லவன் கோதை

kaatchi12

‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்,
நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்,
கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155

கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர்
பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர்,
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம், 160

எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்,
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது,கடுங்கட் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய 165

இதுநீ கருதினை யாயின்,ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம், 170

தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற்,கயல்,புலி,
மண்டலை யேற்ற வரைக வீங்கென

“உன் வெற்றி பல ஆண்டுகள் தொடரட்டும்!”,என வாழ்த்தி,செங்குட்டுவனின் அமைச்சரான வில்லவன் கோதை என்பவன்,மன்னனுக்குத் தன் கருத்தை கூறத் தொடங்கினான்.

“உன்னைப் போன்ற மன்னர்களான பாண்டியனும்,சோழனும்,உன்னோடு பகைத்துக் கொங்கர் இடத்தில் ரத்தத்தால் சிவந்த போர்க்களத்தில்,தங்களின் மீனக்கொடியையும்,புலிக்கொடியையும் உன்னிடம் தந்துவிட்டு ஓடினார்கள்.ஆனாலும்,அப்போது அந்தச் செய்தி எட்டுத் திசையிலும் நிற்கும் யானைகளின் காதுகளைக் கூட சென்றுச் சேர்ந்தது.

கொங்கணர்,கலிங்கர்,கொடிய கன்னடநாட்டார்,வங்களர்,கங்கர்,பல வேலுடைய கட்டியர் முதலியோர்,வடக்கில் உள்ள ஆரியரோடு போரிட வந்துபோது,வலிமையான நம் தமிழ்ப் படை போராட புகுந்து அந்த நாளில்,நீ ஆடிய யானை வேட்டைகள்,எங்கள் கண்களில் இருந்து என்றும் மறையாதவை!

கங்கை எனும் பெரிய ஆற்றில்,விரைந்து வரும் கடுமையான நீர் பெருக்கில்,எங்கள் கோமகளை நீ நீராட்டிய அந்த நாள்,ஆரிய மன்னர்கள் ஆயிரம் பேரை எதிர்த்து நீ ஒருவனாய் நின்ற உன் போர்க்களத்தின் வெப்பத்தை,என்ன என்று சொல்வேன்!பயம் என்பதே இல்லாத எமன்,போர்களக் காட்சியை அவர்கள் உயிரை பறிப்பதற்காகவே கண் விழித்துக் காண்பது போலத்தானே அந்தக்காட்சி இருந்தது!”,என்று சேரன் செங்குட்டுவனின் பழைய வெற்றிகளை எடுத்துக் கூறினான்.

மேலும்,”முழங்கும் கடலை வேலியாகக் கொண்ட இந்த பெரிய பாரத நாட்டை,முழுதும் தமிழ்நாடக்கிய நீ இப்படிக் கருதினால்,உன்னை எதிர்ப்பவர் பழைய நீருடைய கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுதிலும் யாரும் இல்லை”,எனச் சேரனைப் புகழ்ந்தான்.

“இமய மலை வரை எங்கள் மன்னன் செல்வது கடவுள் வடிக்க ஒரு கல்லை பெறவே என்பதால்,வடதிசையில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் சேர,பாண்டிய,சோழர்களின் முத்திரைகளான வில்,கயல்,புலி ஆகியவை அடங்கிய ஓலையை இப்போதே எழுத வேண்டும்”,என்றும் கூறினான்.

குறிப்பு

 1. பல்-பல
 2. கொற்றம்-வெற்றி
 3. வில்லவன் கோதை-செங்குட்டுவனின் அமைச்சர்
 4. செங்களம்-குருதியால் சிவந்த களம்
 5. இகலி-மாறுபடு
 6. கொடுவரி-வளைந்த வரிகள் உடைய புலியைக் குறிக்கும்
 7. கயற்கொடி-மீன் கொடி(கயல்-மீன்)
 8. பகைபுறத்து-பகை களத்தில்
 9. திகை-திசை
 10. வேழம்-யானை
 11. செவியகம்-செவிக்குள் (அகம்-உள்)
 12. புக்கன-புகுந்தன
 13. கருநாடர்-கன்னடநாட்டார்
 14. பங்களர்-வங்களர்
 15. வண்தமிழ்- வளவிய ,வலிமையான தமிழ் (வண்-வலிமை,வளவிய)
 16. கடமலை-யானை
 17. வேட்டம்-வேட்டை
 18. கட்புலம்-கண் பார்வை
 19. பேர்யாற்று-பெரிய ஆறு (பேர்-பெரிய)
 20. கடும்புனல்-கடுமையான நீர்
 21. நீத்தம்-வெள்ளம்,நீர் பெருக்கம்
 22. ஆட்டிய-நீராட்டிய
 23. ஈரைஞ்ஞூற்றுவர்-ஆயிரம் பேர் (2 x5 x 100 = 1000)
 24. செரு-போர்க்களம்
 25. வெங்கோலம்-வெம்மையான கோலம் ,அதாவது போர்க்கோலம்
 26. கடுங்கண்-அஞ்சாமை
 27. கூற்றம்-எமன்
 28. இமிழ்-முழங்கு
 29. கருதினை-கருதினால்
 30. முதுநீர்-பழைய நீருடைய கடல்
 31. மால்-மலை
 32. கோன்-மன்னன்
 33. மருங்கின்-பக்கத்தில்
 34. செழு-வளமையான
 35. மண்டலை-மண்தலை,முத்திரை,இலச்சினை மண்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>