வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

kaalkotlogo1கால்கோட்  காதை

12.வானத்து முனிவர்களின் வாழ்த்து
kaal7

இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப,
விசும்பியங்கு முனிவர்,வியன்நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குது மென்றே,
அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து, 95
மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்,
மலயத் தேகுதும்,வான்பே ரிமய 100
நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின்,
அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல்நின் கடனென்று,
ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர்

படைகள் இயங்கியதற்கு காரணமான பெரும் ஒலி அங்கு எழுந்தது.வானத்தில் செல்லும் சக்தி வாய்ந்த முனிவர்கள் சிலர் அந்த ஒலியைக் கேட்டார்கள்.கேட்டதும்,’இந்தப் பெரிய நிலத்தை ஆளும் இந்திரனைப் போன்ற செல்வத்தை உடையவனை நாமும் சென்று காண்போம்’,என விரும்பி,வானத்தில் இருந்து அவன் இருக்குமிடம் நோக்கி இறங்கி வந்தார்கள்.அரசன் வீற்றிருக்கும் அவையில்,மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளியை உடையவராக,அவர்கள் சென்று தோன்றினார்கள்.மன்னன் அவர்களைக் கண்டவுடன்,தன் இருக்கையிலிருந்து எழுந்துச் சென்று வணங்கி நின்றான்.

அப்போது அவர்கள் அவனை நோக்கி,’சிவந்த சடை உடைய சிவபெருமானின் திருவருளினால் புகழ் விளங்குமாறு வஞ்சியில் தோன்றிய சேரனே !கேள் ! நாங்கள் பொதிய மலைக்குச் செல்கிறோம்.மிகப் பெரிய இமயத்துக்குச் செல்வது உன் விருப்பம்,ஆனால்,அரிய வேதங்களை அறிந்த பிராமணர்கள் பலர் அங்கேயும் வாழ்ந்து வருகிறார்கள்.பெரிய நிலத்தின் மன்னனே !அவர்களையும் பேணிக் காப்பது உன் கடமையாகும்’,என்றார்கள்.

இவ்வாறு மன்னனை வேண்டிய பின்,அந்த இடத்தில் அவனை வாழ்த்தி,அவர்கள் தங்கள் வழியில் மீண்டும் சென்றார்கள்.

குறிப்பு

 1. அரவம்-முழக்கம்
 2. ஈண்ட-கூடிய
 3. இசைப்ப-இசைக்க
 4. விசும்பு-வானம்
 5. வியன்-அகன்ற
 6. திருவனை-செல்வம் பெற்ற (திரு-செல்வம்)
 7. காண்குதும்-காண்போம்
 8. இழிந்தாங்கு-இறங்கி அங்கு (இழி-இறங்கு)
 9. அவையத்து-அவையில்
 10. செஞ்சடை-சிவந்த சடை
 11. ஏகுதும்-செல்கிறோம் (ஏகு-செல்)
 12. வான்பேர்-உயர்ந்த பெரிய (வான்-உயர்ந்த)
 13. ஆகலின்-ஆதலால்
 14. அருமறை-அரிய வேதம் (மறை-வேதம்)
 15. அந்தணர்-பிராமணர்
 16. போந்ததன்-போனதன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>