வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)

kaalkotlogo1கால்கோட்  காதை

22.பேய்கள் மகிழ்ந்தன

தாருந் தாருந் தாமிடை மயங்கத்
தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய 205
சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210

இரண்டு சாரர்களின் முதலாவதாக வந்து போர் புரியும் ‘தார்’ படைகள் தன்னுள் கலந்துப் போர் செய்தார்கள்.

தோள்களும் தலையும் துண்டாக்கப் பட்டு வெவேறாகப் போன,மலைப் போன்ற தோள்களை உடைய வீரர்களின் உடல்கள் குவியல்களாகக் குவிந்துக் கிடந்தன.அதன் மீது ஏறிப்,பிணங்களில் இடறி விழுந்து,உடல் குறைக்கப்பட்ட ‘கவுந்தங்கள்’ எனும் தலையற்ற உடல்கள்,பறை ஒலிகளுடன்,பேய்மக்கள் பாணிக்கு ஏற்றவாறுக் கூத்தாடின.பிணங்களைச் சுமந்துக் கொண்டு,பெருகி ஓடும் இரத்த வெள்ளத்தில்,பெண்பேய்கள் கூட்டம் கூட்டமாக,தங்கள் கூந்தலை அவிழ்த்து,நனைத்து நீராடி மகிழ்ந்து வெறி ஆடின.

குறிப்பு

 1. தார்-தூசிப்படை,முதலாவதாக வந்து சண்டையிடும் படை
 2. சிலைத்தோண்-சிலைத்தோள்-மலைப் போன்ற தோள் (சிலை-மலை)
 3. பொறை-பாரம்
 4. அடுக்கம்-குன்று
 5. எறிபிணம்-வெட்டப்பட்ட பிணம் (எறி-வெட்டு)
 6. கவந்தம்-தலையற்ற உடல்
 7. நிணம்படு-கொழுப்பு பொருந்திய (நிணம்-கொழுப்பு படு-பொருந்திய)
 8. குருதி-ரத்தம்
 9. கணங்கொள்- கூட்டம் கூட்டமாக (கணம்-கூட்டம்)
 10. கதுப்பு-கூந்தல்

23.தும்பை சூடினான்
KAAL13

அடுந்தேர்த் தானை ஆரிய வரசர்
கடும்படை மாக்களைக் கொன்று களங்குவி,த்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியுங் கடுங்களிற் றெருத்தமும்,
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட
எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை 215

ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது
ஆரிய வரசர் அமர்க்களத் தறிய
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய 220

பகைவர்களை அழிக்கும் ஆற்றலுடைய தேர்களைக் கொண்ட படைகள் உடைய ஆரிய அரசர்களின் கொடியப் படை வீரர்கள்,போர்க்களத்தில் கொன்று குவிக்கப்பட்டார்கள்.அவர்களது உயர்ந்தத் தேர்களின் ‘கொடுஞ்சி எனும் இருக்கைகள் அழிக்கப்பட்டன.ஆண் யானைகளின் பிடர்கள் அறுபட்டன.வீரர்களால் செலுத்தப்பட்ட குதிரைகளின் முதுகுகள் பாழாயின.’எருமையாகிய விரைந்து செல்லும் கடாவில் ஊர்பவனான எமன்,உயிர் கூட்டங்களை ஒரு பகலில் உண்ணும் ஆற்றல் படைத்தவன்’,என்பதை ஆரிய அரசர்கள் அந்தப் போர்க்களத்தில் நன்றாக அறிந்து கொண்டார்கள்.

அவ்வாறு,எதிர்ப்படைகளைக் கொன்றுக் குவிக்க வேண்டும் என்று துணிந்து வீரக் கழலணிந்த செங்குட்டுவன்,தங்கள் சேரர்களின் அடையாளப் பூவானப் ‘போந்தை’ எனும் ஆண் பனம் பூ மாலையோடு,தொடுத்த வெற்றி மாலையான தும்பை மாலையையும்,தன் உயர்ந்தப் பெரிய திருமுடியின் மேலாக அணிந்துக் கொண்டான். .

குறிப்பு

 1. அடுந்தேர்-பகைவர்களை அழிக்கும் ஆற்றலுடைய தேர் (அடு-அழி)
 2. தானை-படை
 3. கடும்படை-கொடிய படை
 4. மாக்கள்-மக்கள்
 5. நெடுந் தேர்-உயர்ந்த தேர்
 6. கொடுஞ்சி-தேரில் இருக்கும் இருக்கை
 7. கடுங்களிற்று-கொடிய ஆண் யானை (களிற்று-ஆண் யானை)
 8. எருத்தம்-பிடரி,கழுத்து
 9. விடும்பரி-செலுத்தப்படும் குதிரை (பரி-குதிரை)
 10. வெரிநும்-முதுகு
 11. பாழ்பட-பாழாகுமாறு
 12. கடும்பரி-கடுமையான வேகம் (பரி-வேகம்)
 13. ஊர்வோன்- ஊர்ந்து செல்பவன்
 14. உயிர்த்தொகை-உயிர் கூட்டம்,உயிர்கள்
 15. அமர்-போர்
 16. நூழில்-குவிதல்
 17. சூழ்கழல்-சூழ்ந்த கழல்
 18. போந்தை-ஆண் பனம் பூ
 19. சென்னி-உச்சி
 20. பருவத் தும்பை-வளமையுடைய தும்பைப் பூ,தும்பை போரில் சூடப்படும் வெற்றிப் பூ

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>