வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

kaalkotlogo1கால்கோட்  காதை

26.கல் கொண்டான்

KAAL15

முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்,
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்

சிறப்பூண் கடியினஞ்,செங்கோற் கொற்றத்து 245
அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன்,
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை,

காற்றூ தாளரைப் போற்றிக் காமினென, 250
வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.

மன்னர்களின் முடி சூடிய தலைகளால் ஆன அடுப்பு.அதன் மேல்,யானையின் பிடரோடு இருந்த தலையை ‘தாழி’ எனும் சமைக்கும் பானையாக வைத்து,வீரர்களின் தொடி எனும் வளை அணிந்தக் கைகளைக் கரண்டியாகக் கொண்டு துழாவிச் சமைத்த ‘ஊண்சோறு’ எனப்படும் மாமிச உணவை,மறம் பொருந்தியப் பேயான ‘வாலுவன்’ எனும் சமையல்காரன் பதமறிந்து சமைத்து வைத்தது.

அந்தச் சிறப்பான உணவை ‘கடியினம்’ எனும் பேய் இனத்தவர் அனைவரும் உண்டார்கள்.உண்டபின்,”நல்லாட்சி தந்த வெற்றியால்,வீரம் பொருந்திய மறக்களமான போர்க்களத்தில் எங்களுக்கு உணவு அளித்து அதை அறக்களமாக்கிய செங்குட்டுவன் ஊழிதோறும் வாழ்க’,என,அவை வாழ்த்தின.

இவ்வாறு,தப்பாத வெற்றி தரும் வாளுடைய செங்குட்டுவன்,போரை செவ்வனே செய்து,வெற்றியோடு முடித்தான்.

‘வடதிசையில் வேதங்களை ஓதி பாதுகாக்கும் அந்தணர்களின் ஓமகுண்டத்தின் முத்தீ அவிந்து போகாதவாறு பேணும் பெரிய அருள்வாழ்க்கையைக் குறிப்பாகக் கொண்டு காப்பாத்துங்கள்’,என்று மன்னன்,தன் செய்தியை அறிவிப்போரின் மூலம்,தன் படைகளுக்கு எல்லாம் அறிவித்தான்.

வில்லவன் கோதை எனும் படைத் தலைவனுடன்,தன் செயலை நன்றாக முடித்த வேலேந்திய படை வீரர் பலரையும் ஏவிப்,பொன்மயமான இமயத்தில்,ஒப்பற்ற பத்தினியானக் கண்ணகிக்குச் சிலை செய்வதற்குத் தேவையான கல்லைத் தோண்டி எடுத்துக் கொண்டான் காவலனான செங்குட்டுவன்.

குறிப்பு

 1. முடித்தலை-முடி சூடிய தலை
 2. பிடர்த்தலை-யானையின் பின் கழுத்து
 3. தாழி-வாயகன்ற மண் பானை
 4. தொடித்தோள்-தொடியணிந்த தோள் (தொடி-வளையல்)
 5. துழைஇய-துழாவி
 6. ஊன்சோறு-இறைச்சி கலந்த சோறு (ஊன்-மாமிசம்)
 7. வாலுவன்-மடையன்,சமையல் காரன்,தன் கையை கருவியாகக் கொண்டு சமைப்பவன்
 8. மடை-உணவு
 9. வயின்-பக்குவம்
 10. சிறப்பூண்-சிறந்த உணவு
 11. கடியினம்-பேய் இனம் (கடி-பேய்)
 12. செங்கோன்மை-நல்லாட்சி
 13. கொற்றம்-வெற்றி
 14. ஊழி-நீண்டதொரு காலப்பகுதி
 15. மறக்களம்-போர்க்களம் (மறம்-வீரம்)
 16. வாய்வாள்-தப்பாத வாள்,வாய்த்த வாள்
 17. குட்டுவன்-செங்குட்டுவன்
 18. மருங்கின்-பக்கத்தில்
 19. மறை-வேதம்
 20. ஓம்புநர்-பாதுகாப்பவர்
 21. தடவு-ஓமகுண்டம்
 22. தண்-அருள்
 23. காற்றூதாளர்-காலாள்,கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்;காலாட்படை வீரன்
 24. காமின்-காத்திருங்கள்
 25. கால்கொண்ட னன்-தொடங்கினான்
 26. பொருவறு-உவமை இல்லாத (பொரு-உவமை)

கால்கோட் காதை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>