5.மாடல மறையோன் வருகை
மாடல மறையோன்,வந்து தோன்றி
வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம் 50
முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம்
அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப்
பகைபுலத் தரசர் பலரீங் கறியா
நகைத்திறங் கூறினை,நான்மறை யாள!
யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்
சேரன் வென்ற மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில்,அந்த இடத்திற்கு மாடல மறையோன் வந்து தோன்றினான்.’என் மன்னன் வாழ்க !பெண்ணான மாதவியின் கானல் வரிப் பாடல்,கனகன் விசயன் ஆகியோரின் முடி சூடியத் தலைகளை நெரித்து விட்டது!பழைய நீருடைய கடல் சூழ்ந்த இந்த நிலத்தை எல்லாம் உனக்கு கீழ்படியச் செய்து,வெற்றியுடன் ஆள்கின்ற அரசே!நீ வாழ்க!’,என்று வாழ்த்தினான்.
‘இங்கே கூடியிருக்கும் பகை நாட்டு அரசர்களான பலரும் அறியாத நகைப்புக்குரிய ஒன்றை இந்த இடத்தில் கூறினாய்,நான்கு வேதங்களையும் அறிந்த பிராமணரே !இந்த இடத்தில் நீ கூறிய சொற்களின் விளக்கம் தான் என்ன?’என்று கேட்டான் செங்குட்டுவன்.மாடலனும் அரசனுக்கு அதை விளக்கிக் கூறினான்.
குறிப்பு
- கோ-மன்னன்
- கானற்பாணி-கானல்வரிப் பாட்டு
- முடித்தலை-முடியணிந்த தலை
- முதுநீர்-பழைய நீர் உடைய கடல்
- ஞாலம்-உலகம்
- அடிப்படுத்து-கீழ்ப்படிந்து
- பகைப்புலம்-பகைவர் நாடு (புலம்-நிலம்)
- நான்மறை யாள-நான்கு வேதங்களை அறிந்த பிராமணர்
கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்
மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு
ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் 60
மாட மூதூர் மதுரை புக்காங்கு,
இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே நின்னாடு புகுந்து
வடதிசை மன்னர் மணிமுடி யேறினள்,
இன்னுங் கேட்டருள்,இகல்வேற் றடக்கை
மன்னர் கோவே யான்வருங் காரணம்
கானல் சோலை சூழ்ந்த குளிர்ந்த துறை உடைய கடற்கரையில்,கோவலனுடன் கடல் விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த பொழுது,பெண்ணான மாதவி பாடிய வரிப்பாடலால்,அவன் அவளோடு ஊடல் கொண்டான்.அப்போது அவன் முன் செய்த பாவம்,அவன் உள்ளத்தில் எண்ணம் என்னும் உருவம் கொண்டு தோன்றியதன் விளைவாக அவன் மாதவியுடன் சேராமல் அவளை விட்டுப் பிரிந்தான்.பின்,தன் குலக்கொடியான கண்ணகியுடன்,மாடங்கள் நிறைந்த பழைய நகரான மதுரைக்குச் சென்றான்.
மதுரையில்,இலைகள் நிறைந்த வேப்பம் மாலையை அணியும் அரசனான நெடுஞ்செழியனை,அழகிய வான் உலகத்தை அடையச் செய்த கோவலனின் மனைவி,குடநாட்டு மக்களின் அரசனான உன் நாட்டுக்குள் வந்து புகுந்தாள்.அவளே,இப்போது வடதிசை மன்னர்களான கனகன் விசயன் என்னும் மன்னர்களின் மணிமுடி மீதும் கல்லாக ஏறி இருக்கிறாள்.
பகைவரோடு எதிர்க்கும் வேலை ஏந்திய பெரிய கையுடைய மன்னர் மன்னனே!நான் வந்ததன் காரணம் என்ன என்பதை இனி கூறுகிறேன் கேளுங்கள்..
குறிப்பு
- கானல்-கடற்கரைச் சோலை,மணல் பரந்த இடம்
- அம்-அழகிய
- தண்-குளிர்ந்த
- நவில்-பேச்சு
- பாணி-பாட்டு
- ஊழ்வினை-முன்வினை
- உருத்து-உருவம் கொண்டு
- மூதூர்-பழைய ஊர்
- புக்கு-அடைந்து
- இலைத்தார்-இலைகள் உடைய மாலை (தார்-மாலை)
- எழில்-அழகு
- குடவர்-குடநாட்டு மக்கள்
- கோ-அரசன்
- இகல்வேல்-எதிர்க்கும் வேல் (இகல்-முரண்)
- தடக்கை-பெரிய கை
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in