மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு,
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன்கொல்?உரைசால் சிறப்பின் 70
வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்
வலம்படு தானை மன்னவன் றன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்,
தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து,
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75
அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென,
இடையிருள் யாமத் தெரியகம் புக்கதும்
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் 80
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி,
என்னோ டிவர்வினை உருத்த தோவென,
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்
பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு 85
என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச்
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க
பெருந்தவ முனிவரான அகத்தியர் வாழ்கின்ற பொதிய மலையை வலம் செய்து விட்டு,குமரி என்னும் அழகிய பெருந்துறையில் நீராடிவிட்டு,நான் திரும்பி கொண்டிருந்தேன்.நான் முன் செய்த பாவம் என நினைக்கிறேன்,புகழ் வாய்ந்த சிறப்பை பெற்ற,வெற்றி வாள் உடைய பாண்டிய மன்னனின் மதுரை நகரத்திற்கு சென்றிருந்தேன்.
‘வெற்றிப் படையைக் கொண்டப் பாண்டிய மன்னனை,ஒரு சிலம்பினால் பெருமை வாய்ந்த ஆபரணங்கள் உடைய பெண்ணான கண்ணகி வென்றாள்’,என்ற செய்தியை அங்கே நான் கேட்டறிந்தேன்.
பூந்தாதுகளாகிய எருப்பொருந்திய மன்றத்தில்,மாதரி எழுந்து,’கோவலன் கெட்டவன் இல்லை !தவறு செய்தவன் அரசன் தான்!இடையர் குல மக்களே !நான் ஒழுங்காக அவர்களைக் காக்க தவறிவிட்டேன்.நம் அரசனின் குடையும் செங்கோலும் இப்படித் தவறு செய்து விட்டதே!’,என்று வாய் விட்டுக் கதறியவாறு,இருள் நிறைந்த இரவின் நடுச் சாம வேளையில்,மதுரை நெருப்புக்குள் புகுந்து இறந்தாள்.
தவவாழ்வு என்னும் சிறப்புடைய கவுந்தியடிகள் மிகவும் கோபம் கொண்டாள்.மிகவும் உயர்ந்த சிறப்பை உடைய செங்கோலைக் கொண்ட,பெருநில மன்னனின் உயிர் அவனை விட்டுப் போகும் விதமாக,பொறுமை மிகுந்த என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு,இவர்கள் முன் செய்த தீவினை உருவம் கொண்டு வந்து தீமை விளைத்ததோ?’,என்று எண்ணி,உண்ணாமல் நோன்பு இருந்து,அவரும் தன் உயிரைத் தன் உடலில் இருந்து நீக்கிக் கொண்டார்.
அழகிய தேரைக் கொண்ட வெற்றி வேல் நெடுஞ்செழியனின் மதுரை மாநகருக்கு நடந்த அனைத்தையும் தெரிந்துக் கொண்டேன்.இவற்றால் என் உள்ளத்தில் எழுந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டு,என் ஊர் நோக்கி மீண்டும் சென்றேன்.
சென்றவுடன்,சோழனின் பழைய ஊரான புகாருக்கு சென்று அங்குக் கண்ணகி,கோவலன் ஆகியோருக்கு சிறந்தவர்களான அவர்களின் பெற்றோருக்கும் மற்ற அனைவருக்கும்,மதுரையில் நான் தெரிந்துக் கொண்ட அனைத்தையும் கூறினேன்.
குறிப்பு
- ஊழ்வினை-முன்பு செய்த வினை
- உரைசால்-புகழ் மிகுந்த (உரை-புகழ்;சால்-மிகுந்த)
- வாய்வாள்-வெற்றி வாய்ந்த வாள்,குறிதப்பாத வாள்
- தென்னவன்-பாண்டியன்
- வலம்படு-வெற்றி பெறுதல்(வலம்-வெற்றி)
- தானை-படை,சேனை
- சேயிழை-சிறந்த ஆபரணங்கள் அணிந்த பெண் (சேய்-சிவப்பு,பெருமை:இழை-ஆபரணம்)
- தாதெரு- பொடியாகிக் கிடக்கும் எரு (தாது-பொடி)
- தீதிலன்-குற்றம் அற்றவன்
- கோமகன்-அரசன்
- மாக்காள்-மக்கள்
- இடையிருள்-நடு இரவு
- எரியகம்-நெருப்புக்குள்
- புக்கு-நுழைந்து
- தவந்தரு-தவம் தருகின்ற
- நிவந்து-மிகுந்து
- நீணிலவேந்தன்-நீண்ட நிலத்தை ஆள்கின்ற வேந்தன்
- தாங்க(தாங்கல்) – ஈண்டுத் தணித்தல்
- பொறைசா லாட்டி-பொறுமை மிகுந்தவள் (பொறை-பொறுமை)
- பதி-ஊர்
- செழியன்-பாண்டியன் நெடுஞ்செழியன்
- ஒழிவு-மறைதல்
- செம்பியன்-சோழர்
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in