18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார்
திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும்,
பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய
வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195
குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக்
குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்
வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
தன்னை சுற்றி இருக்கும் எல்லா இடங்களிலும் பரந்த நீரை உடையது கங்கை நதி.அதைச் சூழ்ந்த வயல்களில்,பசுமையான இலைகளுடன் நெருங்கி,புதிதாகப் பூத்த தாமரைப் பூக்களில் பல வகை வண்டுகள் காணப்பட்டன.அவை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாத நேரத்தில்,யாழ் போன்ற இனிய இசையை இசைத்துக் கொண்டிருந்தன.
ஒளி வீசும் கதிரவனாகிய இளம் சூரியன்,தன் விரிந்தக் கதிர்களைப் பரப்பி,கிழக்குத் திசை மலையின் உச்சி மீது எழுந்து தோன்றினான்.
விடியலின் இந்த அறிகுறிகள் தெரியும் இந்த நேரத்தில்,தெற்குத் திசைக்குப் புறப்படுகின்ற தன் வெற்றிப் படை வீரர்களுடன்,சேரன் செங்குட்டுவன் தன் சேரநாடு நோக்கிப் புறப்பட்டார்.அப்போது,மேற்குத் திசை நாட்டை ஆள்கின்ற வெற்றி வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன்,வடதிசை நோக்கிச் சென்று போர் செய்து,ஆரிய அரசர்களை வீழ்த்திய வெற்றியை குறிக்கும் விதமாக,தும்பை மலரை வாகை மாலையுடன் சூடியிருந்தார்.
குறிப்பு
- துயில்-உறக்கம்
- அளவை-அளவு எடுக்கும் முறை
- யாங்கணும்-எல்லா இடத்திலும்
- பரம்பு நீர்-பரந்த நீர்
- பழனம்-வயல்,விளைநிலம்
- பாசடை-பசிய இலை (பாசு(பசுமை)+அடை(இலை)
- பயில்-நெருங்கிய
- பல்-பல
- குணதிசை-கிழக்கு,கீழ்த்திசை
- உயர்மிசை-உச்சிமீது (மிசை-மீது)
- குடதிசை-மேற்கு,மேல்திசை,மேற்கு திசை
- குன்றம்-மலை
- கொற்றவேந்தன்-வெற்றி வேந்தன் (கொற்றம்-வெற்றி)
- வென்றி-வெற்றி
- தானை-படை
19.வேண்மாளின் துன்பம்
நிதிதுஞ்சு வியன்நகர்,நீடுநிலை நிவந்து 200
கதிர்செல வொழித்த கனக மாளிகை,
முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை,
இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த
விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய 205
மடையமை செறிவின்,வான்பொற் கட்டில்,
புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை
இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த
துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
செல்வம் நிலையாகத் தங்கும் சேரர்களின் பெரு நகரில்,உயர்ந்த மாடங்களுடன் வான் உயர்ந்து,சூரியனின் போக்கைத் தடுப்பது போல அமைந்திருந்தது செங்குட்டுவனின் பொன் மாளிகை.
அறை எங்கும் முத்துக்கள் வரிசையாகக் கோத்த கொடித் தொடர்கள் தொங்கின.ஓவியங்களுடன் காணப்பட்ட மேற்கூரையில்,கையால் செய்த பூ வேலைப்பாடுகள் இருந்தன.
ஒளிசெய்யும் மணிகளை வரிசையாக இடையிடையே வைத்து இழைத்து,வயிரத்துடன் தங்க தகடு வேய்ந்த,மூட்டுவாய் நன்கு பொருந்திய,வலிமையான திரண்ட பொன் கால்கள் உடைய உயரமானப் பொன் கட்டில் இருந்தது.அன்னப்பறவைகள் தங்கள் துணையோடு பிரியாமல் கூடியிருக்கும் போது உதிர்த்த மென்மையான மயிர் அதில் நெருக்கமாகத் தூவப்பட்டிருந்தது.
துணையுடன் உறங்கும் அந்தப் படுக்கையின் மீது,உறக்கம் வராமல்,தன் கணவனான செங்குட்டுவனைப் பிரிந்த துன்பத்தைப் போக்க வேண்மாள் முயன்றுக் கொண்டிருந்தாள்.
குறிப்பு
- நிதிதுஞ்சு-பொருள் குவியல் (துஞ்சுதல்-தங்குதல்)
- வியன்-அகன்ற
- நகர்-கோயில்
- நீடுநிலை-நீண்ட நிலை
- நிவந்து-உயர்ந்து
- செலவு-வேகம்
- கனகமாளிகை-பொன் மாளிகை
- நிரை-வரிசை
- வளைஇய-வளைந்த
- சித்திர விதானம்-ஓவியங்கள் அமைந்த மேற்கூரை (விதானம்-மேற்கூரை)
- கைவினை-கை வேலை (வினை-செயல்)
- இலங்கு-விளங்க
- விலங்கொளி-ஒளி வீசும்
- பொலந்தகடு-பொன் தகடு (பொலம்-பொன்,தங்கம்)
- போகிய-இல்லாத
- மடையமை-மூட்டுவாய் (மடை-மூட்டு)
- செறிவின்-நெருங்கும்படி (செறிவு-நெருக்கம்)
- வான்-சிறந்த
- புடைதிரள்-பக்கம் திரண்ட (புடை-பக்கம்)
- தமனியம்-பொன்,தங்கம்
- அமளிமிசை-படுக்கை மீது (அமளி-படுக்கை:மிசை-மீது)
- இணைபுணர்-ஜோடியுடன் சேர்ந்த (இணை-ஜோடி:புணர்-சேர்க்கை)
- எகினம்-அன்னம்
- செறித்த-அடர்ந்த
- ஆற்றுப்படுத்து-தணித்து,போக்கி
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in