வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

nklogo   நீர்ப்படைக் காதை

24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல்

nk14b

வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்.
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
கழங்காடு மகளி ரோதை யாயத்து 245
வழங்குதொடி முன்கை மலர ஏந்தி,
வானவன் வந்தான் வளரிள வனமுலை
தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும்
அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் 250

வெண்மையான அலைகள் மோதி,கொண்டு வந்து குவித்த வெண் மணலை உடைய ஆழமான கடல் நீர் வந்து அடையும் கரையில்,பெரிய புன்னை மரங்கள் வளர்ந்து குவிந்திருந்தன.புன்னை மரங்களின் நிழலில்,வலம்புரிச் சங்குகள் தந்த நலம் செய்யும் முத்துக்களைக் கொண்டு,பெண்கள் ஆரவாரமாக கழங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அந்த ஆரவாரத்திற்கு இடையில் அவர்கள் தங்கள் அசைந்தாடும் வளையல் அணிந்த முன்கைகள் மலருமாறு ஏந்தி,’மடம் உடையவர்களே!உயர்ந்தவரான நம் சேரர் வந்து விட்டார்.அரசியின் வளர்ச்சி உடைய இளைய அழகிய மார்புகள்,இனி அவருடைய தோளின் நலத்தைக் உண்டு மகிழும்.அதனால்,அவர் முடித்த தும்பை,போந்தையோடு வஞ்சியையும் போற்றிப் பாடுவோம்’,என்று அழகான சொற்கள் பேசும் அந்தப் பெண்கள்,அழகாக இனிய நெய்தல் பாடல்களைப் பாடினார்கள்.

குறிப்பு

 1. வெண்டிரை-வெள்ளைத் திரை உடைய கடல்
 2. பொருத-மோதிய
 3. வேலை-கடற்கரை
 4. வாலுகம்-மணல்
 5. குண்டு-ஆழம்
 6. அடைகரை-அடையும் கரை
 7. குவையிரும்-திரண்ட பெரிய (குவை-திரண்ட:இரும்-பெரிய)
 8. நலம்புரி-நலம் செய்யும்
 9. முத்தம்-முத்து
 10. ஓதை-ஆரவாரம்
 11. ஆயம்-கூட்டம்
 12. வழங்கு தொடி-அசைகின்ற வளையல் (தொடி-வளையல்)
 13. வன(ப்பு)-அழகு
 14. வானவன்-உயர்ந்தவன்
 15. உணீஇய-உண்ணுவதை
 16. மடவீர்-மடம் உடையவர்கள்
 17. அஞ்சொல்-அழகிய சொல் (அம்-அழகு)
 18. கிளவியர்-சொற்களை பேசுபவர் (கிளவி-சொல்)
 19. அம்-அழகிய
 20. தீம்-இனிய

25.செங்குட்டுவன் வஞ்சி நகரத்தை அடைந்தார்

ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய,வலம்புரி வலனெழ,
மாலைவெண் குடைக்கீழ்,வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள, 255
வஞ்சியுட் புகுந்தனன், செங்குட் டுவனென்.

தன் கணவனான சேரன் செங்குட்டுவனின் வெற்றியைப் போற்றி நான்கு நில மக்கள் பாடிய பாடல்களைக் காதால் கேட்டு ஆராய்ந்த கோப்பெருந்தேவியின் வெண்மையான வளையல்கள் மேலும் மகிழ்ச்சியில் நிறைந்தது.வலம்புரிச் சங்குகள் சேரனின் வெற்றி குரலாக முழங்கின.

மாலை அணிந்த வெண்கொற்றக் குடையின் கீழ்,வாகை சூடிய சிறப்பு உடைய சென்னியான சேரன் செங்குட்டுவன் வேகமாகச் செல்லும் பட்டத்து யானையின் மேல் அழகாக அமர்ந்தபடி வந்துக் கொண்டிருந்தார்.யானைக் கூட்டத்துடன்,சேரனின் நகர மக்கள் எல்லாரும் சென்று,அவரை எதிர்கொண்டு வரவேற்றார்கள்.இவ்வாறு செங்குட்டுவனும்,வட நாட்டில் அடைந்த வெற்றிச் சிறப்புடன்,தன்னுடைய வஞ்சி நகருக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்பு

 1. ஓர்த்து-ஆராய்ந்து
 2. வால்-வெண்மை
 3. வளை-வளையல்
 4. செறிய-நிறைய
 5. வலன்-வெற்றி
 6. சென்னியன்-தலை உடையவன்,சிறந்தவன் (சென்னி-சிறப்பு,தலை,உச்சி)
 7. மீமிசை-மேலே
 8. குஞ்சர(ம்)-யானை
 9. ஒழுகை-அணி
 10. கோநகர்-மன்னரின் நகர் (கோ-மன்னன்)
 11. எதிர்கொள-எதிர்கொண்ட

நீர்ப்படைக் காதை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>