புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை -(எளிய விளக்கம்:பகுதி 1)

அரங்கேற்று காதை

****************************************

 

1.மாதவி நாட்டியம் பயின்றால்

(மாதவியின் பிறப்பு,சிறப்பு,நடன பயிற்சி பற்றி விவரித்தல்.)

bharathanatyam

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பு-அருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி-தன்னை-
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்,
ஏழாண்டு இயற்றி,ஓர் ஈராறு ஆண்டில் 10
சூழ்கடன் மன்னற்குக் காட்டல் வேண்டி,

தெய்வ மலையான பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவர் சாபமேற்று,விண்ணுலகை விடுத்து மண்ணுலகில் பிறந்தனர்,இந்திரன் மகன் சயந்தனும்,ஊர்வசியும்.மாதவியாக மண்ணுலகில் பிறந்த ஊர்வசி,தன் நடனத் திறமையை அரங்கேற்றி,’தலைக்கோல்’ பட்டம் பெற்றால்.வேணுவாக பிறந்த சயந்தனும் அவளுக்கு துணை நின்றான்.அந்த நடன அரங்கிலே அகத்தியர்,அவர்களுக்குச் சாபம் நீங்க செய்தார்.

நாடகத் தொழிலில் மாறுபாடுகள் இல்லாத சிறப்பினை உடையவர்,மாதவியாக பிறந்த ஊர்வசி போன்ற வானமகளிராகிய நடன மாதர்.அவர்ப் போல குன்றாத தொழில் சிறப்போடு் பிறந்தவள் இந்த ‘மாதவி’!

சித்திராபதியின் மகளாக பிறந்த இவள்,அழகிய பெரிய தோள்களை உடையவள்;அந்த மாதவியான ஊர்வசின் மரபினிலே வந்து பிறந்தவள்;தாது அவிழ்கின்ற மலர்கள் சூடிய,சுருள் கூந்தல் உடையவள்.

‘கூத்து’,'பாட்டு’,'ஒப்பனை’ என்று நாடக மகளிர்க்கு உரிமையாக சொல்லப்படும் மூன்றினுள் ஒன்றினும் குறைவில்லாமல் ஏழாண்டுக்காலம் மாதவி இவற்றில் முறையாக பயிற்சி பெற்றால்.தாம் பயின்ற நடன கலையை அரங்கேற்ற நினைத்து,தம் பன்னிரண்டாவது வயதில்,வீரர் படை சூழ்ந்த,கழலணிந்த சோழமன்னன் அவைக்கு செல்ல விரும்பினால்.

குறிப்பு
—————–

1.தலைக்கோல்-நடனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு அரசன் வழங்கிய பட்டம்.

மேலும் விவரங்களுக்கு

2.நாட்டிய ஆசான்
(மாதவியின் ஆடல் ஆசான் பெருமை)

nattuvangam

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்,
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு.. 15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்,
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்-
பிண்டியும்,பிணையலும்,எழிற்கையும்,தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து,கூத்துவரு காலைக்-
கூடை செய்தகை வாரத்துக் களைதலும் 20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்,
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்,
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும்- 25

மாதவியின் ஆடல் ஆசான்,’அகக்கூத்து’,'புறக்கூத்து’,என்ற இருவகைக் கூத்தின் இலக்கணமும் நன்றாக அறிந்தவன் ஆவான்.அவற்றின் பல்வகைப் பகுதிகளான கூத்துக்களையும்,விலக்கு உறுப்புக்களுடன் இணைந்தப் பதினொரு வகையான ஆடல்களும்,அவற்றிகிசைந்த பாடல்களும்,கொட்டும்,இவற்றின் கூறுகளையும் விதிக்கப்பட்ட மரபுகளின்படி விளக்கமாக அறிந்தவனாக இருந்தான்.

ஆடலும்,பாடலும்,தாளங்களும்,தூக்கும் ஒன்றாக முறையே நெறிப்பட அமைய செய்வதில்,அவன் வல்லவன்!

அவ்வாறு செய்யும் போது,பிண்டி,பிணையல்,எழிற்கை,தொழிற்கை என்று சொல்லப்படும் அபிநய வகைகளை அறிந்து கூத்து நிகழும் இடத்திலே,கூடை என்னும் ஒன்றைக் கைத் தொழில் செய்யும் போது,வாரம் என்னும் இரட்டை கைத் தொழில் புகாமலும்,அதுப்போல வாரம் செய்த கை கூடையிற் புகாமலும்;ஆடலும்,அபிநயமும் தம்முள் ஒன்றுடன் ஒன்று கலவாமல் பார்த்து கொள்ளவும் தெரிந்தவன்.

குரவைக்கூத்தும்,வரிக்கூத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்திடாது,பயிற்றுபவர் ஆடுமாறு கற்பிக்கக் கூடியவன்.

இவ்வாறு ஆடலுக்கு ஏற்ற எல்லா தகுதிகளையும் உடையவனாகிய மாதவியின் ஆடல் ஆசானும்,சோழன் அரங்கிற்கு வந்தான்.

குறிப்பு
—————–

1.இருவகைக் கூத்து-கூத்து ‘அகக்கூத்து’,'புறக்கூத்து’ என இருவகைப்படும்.

2.பல்வகைக் கூத்து-சாந்திக்கூத்து,வினோதக்கூத்து முதலியன.

3.விலக்கு-பதினான்கு வகைப்படும்:

 • பொருள்
 • யோனி
 • விருத்தி
 • சத்தி
 • சுவை
 • நாடகம்
 • குறிப்பு
 • சத்துவம்
 • அவிநயம்
 • சொல்
 • சொல்வகைகள்
 • சந்தப்பாட்டு
 • இசைப்பாட்டு
 • சேதம்

4.பதினொரு ஆடல் வகைகள் -

 • மாயவன் ஆடும் அல்லி
 • விடையோன் ஆடும் கொட்டி
 • ஆறுமுகன் ஆடும் குடை
 • குன்றெடுத்தோன் ஆடும் குடம்
 • முக்கண்ணான் ஆடும் பாண்டரங்கம்
 • நெடியோன் ஆடும் மல்லாடல்
 • வேல்முருகன் ஆடும் துடியாடல்
 • அயிராணியாடும் கடையம்
 • காமன் ஆடும் பேடு
 • துர்க்கை ஆடும் மரக்கால்
 • திருமகள் ஆடும் பாவைக் கூத்து

5.கொட்டு-கொட்டப்படும் வாத்தியங்கள்.

6.பாணி -தாளம்.கொட்டு,அசை,தூக்கு,அளவு என நாள் வகைப்படும்.

7.தூக்கு-தூக்கு ஏழுவகைப்படும்:

 • செந்தூக்கு
 • முதலை
 • துணிபு
 • கோயில்
 • நிவப்பு
 • கழால்
 • நெடுந்தூக்கு

8.பிண்டி-ஒற்றைக்கை அபிநயம்.இவை முப்பத்து மூன்று வகைப்படும்

9.பிணையல் -இரட்டைக் கையால் காட்டும் அபிநயக் குறிகள்.இவை பதினைந்து வகைப்படும்.

10.எழில் கை-அழகாகக் காட்ட முயலும் கை முத்திரை

11.தொழிற்கை-ஒரு தொழிலுக்காக,அர்த்தமுடன் காட்டும் கை முத்திரை.

12.கூடை-குவிந்த ஒற்றைக் கை முத்திரை

13.வாரம்-இரெட்டைக் கைத் தொழில்கள்

14.குரவை -குரவைக்கூத்து,பலர் ஆடுவது

15.வரி -வரிக்கூத்து.இது கதை தலைவன் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல் ஆகும். செய்யுள் வரியின்படி இவ்வாறு நடிப்பர்.இது எட்டு வகைப்படும் :

 • காணல் வரி
 • உள்வரி
 • பறவரி
 • கிளர்வரி
 • தேர்ச்சி வரி
 • காட்சி வரி
 • எடுத்துக்கோள் வரி
 • வேட்டுவ வரி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரத்தில் நடனம், சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை -(எளிய விளக்கம்:பகுதி 1)

 1. கூத்து என்பது நாடகம் என்ற பொருள்தானே! அகக் கூத்து என்பதற்கும் புறக்கூத்து என்பதற்கும் பொருள் விளக்கமாக சொல்லுங்கள். என்னுடைய மொழி பெயர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 2. manojkumar says:

  sirappu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>