மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப,
ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த
வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்,
மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும்,
வெண்கால் அமளியும் விதானவே திகைகளும்,
தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப்
ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் வீற்றிருந்தான்.விரும்பும் மலர் படுக்கையும்,சுண்ணாம்பு பூசிய அரங்கமும்,மலர் படர்ந்த அழகான பந்தலும்,யானைத் தந்தங்களால் செய்த வெள்ளை நிறக் கால்கள் உடைய கட்டில்களும்,மேற்கூரை உடைய மேடைகளும் உடைய அந்த இடத்திற்கு,குளிர்ந்த கதிர்களுடைய சந்திரன் ஒளியைத் தர வந்து சேர்ந்தது.
குறிப்பு
- வழிமொழி-எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லும் மொழி
- கணை-அம்பு
- நெடுவேள் அரசு-நீண்ட வேல் உடைய அரசன் (அரசு-அரசன்)
- முன்றில்-வீட்டின் முன் பகுதி (முன்+இல்(இல்லம்)),முற்றம்
- வீழ்பூஞ் சேக்கை-விரும்பும் மலர் படுக்கை (வீழ்-விரும்பும்:சேக்கை-படுக்கை)
- மண்ணீட்டரங்கம்-சுண்ணாம்பு தீட்டிய அரங்கம்,மண் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம்
- பூம்-பொலிவு,அழகு
- பந்தர்-பந்தல்
- வெண்கால்-வெள்ளை கால் (இங்கு யானை தந்தத்தால் செய்த கால்)
- அமளி-கட்டில்
- விதானம்-மேற்கூரை
- வேதிகை-மேடை
- தண்கதிர்-குளிர்ச்சியான கதிர் (தண்-குளிர்ச்சி)
- கடி-விளக்கம்,ஒளி
7.நிலவின் அழகைக் காண வந்த வேண்மாள்
படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்
திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்
கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின் 50
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணங் காணிய வருவழி
அலைகள் உடைய கடல் சூழ்ந்த,பயன்கள் நிறைந்த இந்தப் பெரிய நிலத்தின் நடுவில் நின்று,உயர்ந்த நீண்ட மலை உச்சியை உடையது மேரு மலை.மேரு மலைலைப் போல கொடி பறக்கும் உயர்ந்தக் கோட்டை மதில்கள் சூழ்ந்தது பழைய நகரமான வஞ்சி நகரம்.
வஞ்சி நகரின் நடுவில் உயர்ந்து நின்ற பொன் மாளிகையில்,மணிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலா முற்றத்தில்,செங்குட்டுவனை மணந்த மங்களம் பொருந்திய வேண்மாள்,சந்திரனின் அழகைக் காண வந்து கொண்டிருந்தாள்.
குறிப்பு
- படுதிரை-அலை உடைய கடல் (திரை-அலை)
- பயங்கெழு-பயன் பொருந்திய (கெழு-பொருந்திய)
- மூதூர்-பழமையான ஊர்
- தமனியம்-பொன்
- புனைமணி-அலங்காரம் செய்த மணி (புனை-அலங்காரம்)
- வதுவை-கல்யாணம்,மணமகள்
- மங்கல மடந்தை-மங்கலம் பொருந்திய பெண்
- வண்ணம்-அழகு
- காணிய-கண்டு
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in