வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

ndkநடுகற் காதை

10.கொடுகொட்டிக் கூத்து

ndk6

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்,
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்,
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்,
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70

பாடகம் பதையாது,சூடகந் துளங்காது,
மேகலை ஒலியாது,மென்முலை அசையாது,

வார்குழை ஆடாது,மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75
பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்
ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்

உயர்ந்த இமையவனான சிவபெருமான்,மேன்மை நிலை அடைந்த தன் சிவந்த பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க,பெருமை வாய்ந்த சிவந்த கையில் இருக்கும் பறை முழங்க,செங்கண்கள் மேன்மைப் பொருந்திய குறிப்புகளை அருள,செஞ்சடை சென்று எட்டுத் திக்குகளிலும் துழாவ,உமையவளான பார்வதியை தன் இடப்பக்கத்தில் வைத்துக் கொண்டு ‘கொடு கொட்டி’ ஆடுவார்.அப்படி ஆடும் போது,பார்வதி தேவி காலில் அணிந்த பாடகம் அசையாமல்,கையில் அணிந்த சூடகம் குலுங்காமல்,இடையில் அணிந்த மேகலை ஒலி செய்யாமல்,மென்மையான மார்புகள் அசையாமல்,காதில் இருக்கும் நீண்ட ‘குழை’ ஆடாமல்,மணிபோன்ற கருமையான கூந்தல் அவிழாமல் இருக்கும் வண்ணம் ஆடுவார்.

அவர் ஆடிய இந்த ‘கொட்டிச் சேதம்’ எனும் ஆட்டத்தைப்,பகுத்து அறியும் அறிவு உடைய நான்கு வகையான வேதங்களை உணர்ந்த அந்தணர்கள் வாழும் பறையூர் என்னும் ஊரிலிருந்து வந்த கூத்தச் சாக்கையன்,செங்குட்டுவனின் முன்னர் ஆடினான்.அதனைக் கண்டு மகிழ்ந்தான் மன்னன்.அவன் மன்னனைப் போற்றி,அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்ற பின்னர்,பெரிய நிலப்பகுதியை ஆள்பவனான செங்குட்டுவன்,தன் அரசபை இயங்கும் மண்டபத்திற்கு சென்று அமர்ந்தான்.

குறிப்பு

 1. திருநிலை-நிலையான செல்வம்
 2. சேவடி-சிவந்த அடி
 3. பரிதரு-பெருமை தரும் (பரி-பெருமை)
 4. படுபறை-தாங்கிய பறை
 5. ஆர்ப்ப-முழங்க
 6. திருக்குறிப்பு-மேன்மையான குறிப்பு
 7. பாடகம்-பெண்கள் காலில் அணியும் நகை
 8. சூடகம்-வளையல்
 9. மேகலை-இடுப்பில் அணியும் நகை
 10. வார்குழை-நீண்ட காதணி(வார்-நீண்ட,குழை-காதணி)
 11. குழல்-கூந்தல்
 12. உமையவள்-பார்வதி
 13. ஓங்கிய-உயர்ந்த
 14. இமையவன்-சிவபெருமான்
 15. கொட்டிச் சேதம்-கூத்து வகை.கொடு கொட்டி என்றும் கூறுவார்கள்
 16. பாத்தரு-பகுத்துத் தருகின்ற (பார்த்தல்-பகுத்தல்)
 17. மறையோர்-அந்தணர்,பிராமணர்
 18. கூத்தச் சாக்கையன்-கூத்து நிகழ்த்தும் சாக்கையன்
 19. ஏத்தி-போற்றி
 20. இருநிலம்-பெரிய நிலம் (இரு-பெரிய)
 21. வேத்தியன்-அரசர் இயங்குகின்ற (வேத்து-வேந்து,அரசர்)
 22. மேவிய-அடைந்த

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>