12.சேரனின் கோபம்
தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110
கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்
தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் குறைவில்லாத மாடலன் எழுந்து,’மன்னவர் மன்னனே !உன் வெற்றி வாழ்க !’,என்று முதற்கண் சேரனை வாழ்த்திப் போற்றினார்.
குறிப்பு
- தழல்-நெருப்பு
- கோமகன்-அரசன் மகன்
- நகுதல்-சிரித்தல்
- கொற்றம்-வெற்றி
- ஏத்தி-போற்றி
13.சேரனைப் புகழ்ந்த மாடலன்
கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்,
சிறுகுரல் நெய்தல் வியுலூ ரெறிந்தபின் 115
ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று,
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக்,
கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் 120
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்,
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த
அரைச ரேறே யமைகநின் சீற்றம்!
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பெருநை மணலினுஞ் சிறக்க!
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழா தென்சொற் கேட்டல் வேண்டும்
“மிளகுக் கொடிகள் வளர்கின்ற மலையில் கிடந்து உறங்கும் யானையை உடைய,சிறுக் கொத்துக்களாக விளங்கும் நெய்தல் மலர்கள் நிறைந்த வியலூரை அழித்து வெற்றி கொண்டாய்!
பின்னர் ஆத்தி மலர் மாலை சூடியவரான ஒன்பது மன்னர்களை நேரி என்னும் இடத்தின் வாசலில் வென்றாய்!
பெரிய தேர்ப் படையினையுடைய உன் படைகளுடன் இடும்பில் என்னும் ஊரில் பகைவர்கள் புறம் காட்ட செய்தவரே!
கொடும் போர்கள் பலவற்றை வென்றவனே!நீண்டக் கடலில் கலத்தை ஓட்டியவனே!
உன்னை எதிர்த்து நின்ற ஆரிய மன்னர்களை,விரைந்து செல்லும் நீர் உடைய கங்கைப் பேரியாற்றின் கரையில் சென்று வென்றாய்!
நீண்ட மாலை அணிந்தவனே!பெரும் படை உடைய வேந்தனே !உயர்ந்தவர்களுக்கு ஒப்பாக அனைத்தையும் உணர்ந்த மன்னர் மன்னனே! உன் கோபத்தைத் தணிப்பாயாக!
மண்ணை ஆள்கின்ற வேந்தே !உன் வாழ் நாட்கள் குளிர்ச்சியான அருள் நிறைந்த ஆன்பொருநை ஆற்று மண்ணில் நீண்ட நாட்கள் சிறக்க வேண்டும்!
ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்த உலகை ஆள்பவனே!நீ வாழ்க!”,
என சேரனின் புகழைக் கூறி,தன் பேச்சை இகழ்ந்து ஒதுக்காமல் கேட்க வேண்டும் என்று மாடலன் கேட்டுக்கொண்டார்.
குறிப்பு
- கறி-மிளகு
- சிலம்பு-மலை
- துஞ்சும்-உறங்கும்
- குரல்-கொத்து
- ஆர்-ஆத்தி
- தெரியல்-தொங்கும் மாலை
- செரு-போர்
- இறுத்து-தங்கி
- உடன்று-கோபித்து
- கடும் புனல்-விரைவாக செல்லும் நீர் (புனல்-நீர்)
- தார்-கழுத்தில் அணியும் மாலை
- வேய்ந்த-அணிந்த
- புரையோர்-உயர்ந்தவர்கள்,பெரியவர்கள் (புரை-உயர்வு)
- அரைசர்-அரசர்கள்
- ஏறே-தலைவரே
- வாணாட்கள்-வாழும் நாட்கள்
- தண்-குளிர்ச்சி
- ஞாலம்-உலகம்
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in