16.யாகம் செய்க
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவது மில்லை
வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித்,
தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற,
ஊழியோ டூழி யுலகங் காத்து, 185
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று,
மறையோன் மறைநா வுழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
“தேவர்கள் போற்றும் வழியை உனக்கு அளிக்கும்,நான்கு வேதங்களில் கூறப்படும் யாகங்களைச் செய்யும் பிராமணர்களின் அரிய வேதங்களில் மன்னர்களுக்கு உரிய உயர்ந்த பெரிய நன்மை தரும் யாகங்களை நீ செய்ய வேண்டும்.நாளை அறம் செய்வோம் என்று நாம் கருதினால்,இன்றைய தினமே யாகத்தின் அளவிலான நல்ல உயிர் விலகினாலும் விலகும்.தம் வாழ்நாட்களின் அளவை அறிந்தவர்கள் பழைய நீருடைய கடலால் சூழப்பட்ட உலகில் எங்கும் இல்லை.
திருமணம் என்னும் வேள்வியில் உனக்கு உரிமையான வேண்மாளுடன் கலந்து,பாதத்தில் ‘கழல்’ அணிந்த மன்னர்கள் உன் அடிப் போற்ற,பண்புகளில் சிறந்தவரே! ஊழிதோறும் இந்த உலகைக் காத்து நீ நீண்ட காலம் வாழ்வாயாக”,என தன் நாவு என்னும் ஏரால் உழுது,சிறந்த செல்வத்தின் விதையை,மன்னனின் செவியை வயலாக நினைத்து விதைத்தார்,பிராமணரான மாடலன்.
குறிப்பு
- வானவர்-தேவர்கள்
- நான் மறை-நான்கு வேதங்கள் (மறை-வேதம்)
- வேள்வி-யாகம்
- அரு-அரிய
- ஓங்கிய-உயர்ந்த
- செய்குவம்-செய்வோம்
- முதுநீர்-பழைய நீருடைய கடல்
- கிழத்தி-உரிமையுடையவள்
- தாழ்-தாள்(பாதம்),தங்கும்
- கழல்-வீரர்கள் பாதத்தில் அணியும் நகை
- ஊழி-நீண்டதொரு காலப்பகுதி
- நெடுந்தகை-பண்புகளில் சிறந்தவர் (தகை-பண்பு)
- வான்பொருள்-சிறந்த செல்வம்
- இறையோன்-மன்னன்
- செறு-வயல்
- வித்தல்-விதைத்தல்
17.வேள்விக்கு அனுமதி
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் 190
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
மாடலன் பக்குவமாக விதைத்த பெரும் உணவு,மிகுதியான பயனைத் தந்தது.அந்த உணவின் பயனை உண்ண வேண்டும் என்ற விருப்பம் காலில் ‘கழல்’ அணிந்த சேரன் செங்குட்டுவனுக்கும் எழுந்தது.
நான்கு வேதங்களை முறையாக,திறமையாக ஆராய்ந்து கூறும் நாவினை உடைய,பலவகை யாகங்களை முடித்த யாகங்கள் செய்பவர்களான பிராமண மக்களை,மாடலன் என்னும் பிராமணர் சொல்லியபடி,வேள்வி சாந்தி விழாவைச் செய்யக் கட்டளையிட்டார் சேரன் செங்குட்டுவன்.
குறிப்பு
- வித்திய-விதைத்த
- பெரும்பதம்-பெரும் பொருள்,பெரும் உணவு (பதம்-பொருள்,உணவு )
- பதம்-பக்குவம்
- மிகுத்து-மிகுதியாக
- துய்த்தல்-உண்ணுதல்
- வேட்கை-விருப்பம்
- கழல்-வீரர்கள் பாதத்தில் அணியும் நகை
- நயம்-இன்பம்
- தெரி-ஆராய்ந்து
- மாக்கள்-மக்கள்
- கொள-கொள்ள
- ஏவி-கட்டளையிட்டு
- மீனாட்சி தேவராஜ்
meenbas16@yahoo.co.in