வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)

ndkநடுகற் காதை

18.விடுதலை செய்யுங்கள்

ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி
நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்
தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200
மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்

சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை 205
முழங்குநீர் வேலி மூதூர் ஏவி

ஆரிய அரசர்களைத் தன்னுடைய அரிய சிறையில் இருந்து சேரன் செங்குட்டுவன் விடுதலை செய்தார்.பெரும் புகழ் பெற்ற பழைய நகரான வஞ்சி நகரின் வெளியே,ஆழ்ந்த நீரை வேலியாக உடைய குளிர்ந்த பொலிவுடைய பூஞ்சோலையில் உள்ள ‘வேளாவிக்கோ’ என்னும் மாளிகையில் அவர்கள் தங்குமாறு கைக் காட்டினார்.

‘நல்ல பெரிய யாகத்தை முடித்த அடுத்த நாள்,அவர்கள் தங்கள் பெரிய நீண்ட நகரத்திற்குச் செல்லலாம்’ என்று கூறி,’அந்த அரசர்களுக்குத் தேவையானவற்றை நீ செய்’,என்று வில்லவன் கோதையிடம் மகிழ்ச்சியோடு கட்டளையிட்டார்.

‘சிறைக் கோட்டத்தைத் திறந்து விடு!நம் நாட்டிற்கு இறைப்பொருள் கொடுக்காமல் இருக்கின்ற கறைப்பட்ட மக்களை,அவர்களின் கறையைப் பொறுத்து,அந்த இறையைச் செலுத்துவதில் இருந்து விடுதலை செய்யுங்கள்!’,என்று ஆணையிட்டு,தன் ஆயக்கணக்கரை,முழங்கும் நீரை வேலியாக உடைய சிற்றரசர்களின் பழமையான ஊர்கள் எங்கும் செல்லக் கட்டளையிட்டார்.

குறிப்பு

 1. பேர்-பெரிய
 2. இசை-புகழ்
 3. மூதூர்-பழைய ஊர்
 4. புறத்து-வெளியே
 5. தாழ்நீர்-நீர் தங்கிய (தாழ்-தங்கிய,ஆழ்ந்த)
 6. தண்-குளிர்ச்சி
 7. மலர்-பொலிவு
 8. பொழில்-சோலை
 9. நன்பெரு-நல்ல பெரிய
 10. வேள்வி-யாகம்
 11. சீமின்-சிறை பணியாளர்கள்
 12. கறைகெழு-கறைப்பட்ட
 13. செய்ம்-செய்யும்
 14. ஆயக்கணக்கர்-இறைப்பொருள் கணக்கை எழுதுபவர்

19.மூவேந்தர்க்கும் உணர்த்தினாள்
ndk121

அருந்திற லரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி யரசற் களித்துச்
செங்கோல் வளைய வுயிர்வா ழாமை
தென்புலங் காவல் மன்னவற் களித்து
வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை
வடதிசை மருங்கின் மன்னவ ரறியக்
குடதிசை வாழுங் கொற்றவற் களித்து

‘அரிய வலிமை உடைய மன்னர் தனக்கு உரிய நெறிமுறையைச் செய்யவில்லை என்றால்,பெரும் புகழ் உடைய பெண்களுக்குக் கற்பு நெறி சிறப்பாக அமையாது’,என்பது பழங்காலத்துப் பெரியவர்கள் கூறிய இதமான தமிழின் நல்ல உரை.இந்த உலக மக்கள் வணங்கிப் போற்றுகின்ற பத்தினி என்பதால்,ஆத்தி மலரை தன் தலையில் சூடிய சோழ மன்னன் அதை அறியுமாறு செய்தவள்.

‘செங்கோல் வளைந்தால்,உயிர் வாழாமல் இருப்பதே சிறந்தது’,என்பதைத் தென்நாட்டைக் காவல் காக்கும் பாண்டியன் மூலம் உலகிற்குச் சொன்னவள்.

‘மன்னர்கள் தாங்கள் சூளுரைத்தது நிறைவேறும் முன்னர்,தங்கள் கொடிய கோபத்தை விட மாட்டார்கள்’,என்பதை வடநாட்டு மன்னர்களுக்கு உணர்த்தும் பணியை மேற்கு திசை நாட்டில் வாழ்கின்ற மன்னனான சேரன் செங்குட்டுவனுக்கு அளித்தவள்.

குறிப்பு

 1. திறல்-வலிமை
 2. தண்டமிழ்-குளிர்ச்சி தரும் தமிழ் (தண்-குளிர்ச்சி)
 3. சென்னி-தலை,உச்சி
 4. வெஞ்சினம்-கொடிய கோபம்
 5. விளியார்-கெடார்
 6. குடதிசை-மேற்கு திசை
 7. கொற்றவர்-அரசர்

20.கண்ணகி கோயில்
ndk12

மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து
நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப்
பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்பக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.

“மதுரை என்னும் பழம் பெரும் ஊர் அழியுமாறு,தன் கோபத்தைக் கொதிக்கும் நெருப்பாகத் தன் மார்பில் தோன்ற வைத்து,நமது நல்ல நாட்டை அடைந்து,குளிர்ச்சி தரும் அடர்ந்த கிளைகள் உடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற அழகு உடைய புதிய நிழலில் தங்கியவள்.

அவளுக்கு அறக்களத்தில் பணி செய்யும் பிராமணர்,ஆசான்,தலைமை ஜோதிடர்,சிறப்புடைய சிற்பிகளோடு சென்று,தேவர்கள் விரும்பும் நூல் நெறிகள் உணர்ந்த மக்களால்,கூறுபாடுகள் எல்லாம் அமையும்படி வகுக்கப் பட்டது இந்தப் பத்தினிக் கோயில்.

வானவர்கள் இருக்கும் இமய மலைக்குச் சென்று,மலை உச்சியில் இருக்கும் தெய்வத்தை வணங்கிக் கொண்டு வந்த கல்லை,கைதேர்ந்தவர்கள் அவளின் தெய்வச் சிலையாக வடித்திருக்கிறார்கள்.

வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் செய்த அழகுடைய திருத்தமாகச் செய்யப்பட்ட நல்ல நகைள் முழுதையும் சிலையாக இருக்கும் அவளுக்கு அணிவியுங்கள்.

அவளுக்கு மலர்களை பலியாகத் தூவுங்கள்.காவல் தெய்வங்களை கடை வாசலில் நிறுத்தி,யாகமும்,விழாவும் நாள்தோறும் ஒழுங்காக நடைபெறுமாறு செய்து,பத்தினி கடவுள் சிலையில் வீற்றிருக்கும்படி பிரதிட்டை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார் வட நாட்டு மன்னர்களை வணங்கச் செய்த மன்னரான சேரன் செங்குட்டுவன்.

குறிப்பு

 1. அணைந்து-அடைந்து
 2. நளிர்சினை-அடர்ந்த கிளை,குளிர்ச்சியான கிளை
  (நளிர்-குளிர்ச்சி,செறிவு:சினை-மரக்கிளை)
 3. அந்தணர்-பிராமணர்
 4. பெருங்கணி-தலைமை ஜோதிடன் (கணி-ஜோதிடன்)
 5. கம்மியர்-சிற்பிகள்
 6. மேலோர்-தேவர்
 7. விழையும்-விரும்பும்
 8. பால்-பகுதி,கூறுபாடு
 9. கோட்டம்-கோயில்
 10. சிமைய(ம்)-உச்சி,சிகரம்
 11. பரசி-புகழ்ந்து
 12. கைவினை-கைத்தொழில்
 13. படிமம்-உருவம்
 14. வித்தகர்-பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன்
 15. முற்றிழை-முற்றிய(திருத்தமான) வேலைப்பாடு அமைந்த நகைகள் (இழை-அணி,நகை)
 16. பூப்பலி-மலர்களால் அர்ச்சனை
 17. காப்புக் கடை நிறுத்தல்-வாசலில் திசைத் தெய்வங்களைக் காவலாக நிறுத்தி வைப்பது

நடுகற் காதை முடிந்தது

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>