வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

vklogoவாழ்த்துக் காதை

4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள்
vk2

அலம் வந்த
மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய
கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன்
வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன்
றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன்
னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை
மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப்
பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந்
துன்பமெய்திக் காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுட்
சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயி
ழையைக் காண்டுமென்று மதுரைமாநகர் புகுந்து முதிரா
முலைப் பூசல்கேட்டு ஆங்கடைக்கலமிழந் துயிரிழந்த
இடைக்குல மகளிடமெய்தி ஐயையவள் மகளோடும்
வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக்
கோமகடன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த
செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்;

துன்பம் வந்தடைந்த நிலா போன்ற முகத்தில்,இரண்டு சிவந்த கயல் மீன்கள் போன்ற சிவந்த கண்களில் நீரைச் சிந்தப்,புழுதி படிந்த கரிய மேகம் போன்ற கூந்தல் தனது முதுகை மறைக்க,அறநெறியைப் பழித்துக் கோவலனின் முன்வினை வந்து பயன் அளிக்க தோன்றியதால்,அவன் கீழ்த்தரமான ஒருவனால் கொலை செய்யப்பட்டான். அதனால் கண்ணகி பாண்டிய மன்னனிடம் போய் முறையிட்டாள்.கண்ணகியின் கண்ணீரைக் கண்டு,மன்னர்களுள் சிறந்த குடியில் தோன்றிய பாண்டிய மன்னன் மனதில் ஈரம் அற்றுப்போனதால்,உயிர் இழந்தான்.

இதை எல்லாம் சிறந்த பிராமணரான மாடலன் கூறக் கேட்டு,கோவலனின் தந்தையான மாசாத்துவான் துறவி ஆகிவிட்டார்.அவர் மனைவியான கோவலனின் தாய் உயிர் இழந்தாள்.மிகுந்த பெருந் துன்பம் அடைந்த காவற்பெண்டும்,அடித்தோழியும்,கடவுளாகிய சாத்தனை மணந்து அவனுடன் வாழ்ந்த கண்ணகியின் தோழியான தேவந்தியும்,ஒன்றாகச் சென்று கண்ணகியைக் காண மதுரை என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள்.

கண்ணகி தன் இளைய மார்பால் செய்த சண்டையைக் கேள்விப்பட்டார்கள்.அந்த இடத்தில் தங்களுக்கு அடைக்கலம் இல்லாமல் போனதால்,உயிர் இழந்த இடையர் குலப் பெண்ணான மாதரியின் வீட்டிற்குச் சென்றார்கள்.மாதரியின் மகளான ஐயையோடு,வையை ஆற்றுக் கரை வழியாகச் சென்று மலையின்(திருச்செங்குன்று என்கிறார்கள்) மீது ஏறிக் கண்ணகி கோயிலை அடைந்து,கண்ணகிக்கு விழாக் கொண்டாடிக்கொண்டிருந்த செங்குட்டுவனுக்குத் தங்களைப் பற்றி கூறினார்கள்.

குறிப்பு

 1. அலம்-துன்பம்
 2. செங்கயல்-சிவந்த கயல் மீன்
 3. முகில்-மேகம்
 4. புதைப்ப-மறைக்க
 5. குறுமகன்-கீழோன்
 6. பெருந்தோன்றல்-சிறந்த குடியில் தோன்றல்
 7. உள்நீர்-உள்ளத்தில் நீர்,மனதில் ஈரம்
 8. அற்று-அறுத்து
 9. மாமறையோன்-சிறந்த வேதம் ஓதும் பிராமணர்
  (மா-பெரிய,சிறந்த :மறையோன்-வேதம் ஓதும் பிராமணர்(மறை-வேதம்))
 10. காவற்பெண்டு-ஒரு வகையான செவிலித்தாய்
 11. அடித்தோழி-தலைவியின் கருத்துக்கு அடிப்பணிந்து நடப்பவள்,செவிலியின் மகள்
 12. சேயிழை-செழிப்பான ஆபரணங்கள் உடையவர்
  (சேய்(செம்மை)+இழை(ஆபரணம்))
 13. மீமிசை-உச்சி மேல் (மீ-மேலிடம்:மிசை-உச்சி)
 14. புக்கு-புகுந்து
 15. கோமகள்-அரசி,தலைவி
 16. அயர்ந்த-செலுத்திய
 17. திறம்-திறமை

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>