வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

vklogoவாழ்த்துக் காதை

9.வஞ்சிமகளிர் சொல்

வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான்
பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்
தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென்
றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த
பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்
பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;

வானவ னெங்கோ மகளென்றாம் வையையார்
கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்-வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்;

“வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெண்களே!வஞ்சிக் கொடி போன்ற இடை உடையவர்களே! வேல் ஏந்திய வீரர்கள் செம்பஞ்சுக் குழம்பு தடவிய அடியை உடைய ஆயர் குலப் பெண்களே!எல்லோரும் வாருங்கள்! தன் மார்பில் எழுந்த தீயால் மதுரை நகரை அழித்து,அந்நகரின் பேரரசனைத் தனது வலிமையான சிலம்பால் வெற்றிக் கொண்டவளைப் பாடுவோம்!அனைவரும் வாருங்கள்! தென்னவனான பாண்டியன் மகளைப் பாடுவோம் நீங்கள் எல்லோரும் வாருங்கள்! பாண்டிய மன்னர் தங்கள் செங்கோல் வளைந்தால் உயிர் வாழ மாட்டார்கள் என்று நமது மன்னனான சேரனின் முறைமை உடைய நாக்கு கூறுமாறு,இந்த நாட்டை அடைந்த பசும் பொன்னால் ஆன வளையல் அணிந்த பொம்மை போன்ற பெண்ணைப் புகழ்ந்துப் பாடுவோம் அனைவரும் வாருங்கள்!பாண்டியன் மகளைப் போற்றிப் பாடுவோம் எல்லோரும் வாருங்கள்!”,என்று கண்ணகியை போற்றிப் பாட வஞ்சி நகரப் பெண்களை அழைத்தார்கள்.

“நாம் அவளை வானவனான நம் சேர மன்னரின் மகள் என்றோம்.அவளோ தான் பாண்டியன் பெற்ற கொடி போன்ற பெண் என்றாள்.நம் அரசனாகிய சேரனை நாம் வாழ்த்துவோமாக! வையை ஆற்றின் அரசனான பாண்டியனை,தெய்வமகளாகிய கண்ணகி வாழ்த்துவாள்!”,என்றும் கூறினார்கள்.

குறிப்பு

 1. வஞ்சியீர்-வஞ்சி நாட்டை சேர்ந்தவர்களே
 2. இடையீர்-இடை உடையவர்கள்
 3. மற(ம்)-வீரம்
 4. வேலான்-வேல் உடையவன்
 5. பஞ்சு-செம்பஞ்சுக் குழம்பு
 6. ஆயத்தீர்-ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள்
 7. எல்லீரும்-எல்லோரும்
 8. வம்-வாருங்கள்
 9. கூடல்-மதுரை
 10. கோவேந்து-பெரிய அரசன் (கோ-பெரிய:வேந்தன்-அரசன்)
 11. செம்-செம்மை,வளமை
 12. தென்னவன்-பாண்டியன்
 13. முறை-முறைமை
 14. இயம்ப-கூற
 15. பைந்தொடி-பசும் பொன்னால் செய்த வளையல் (பைம்-பசும்:தொடி-வளையல்)
 16. பாவை-பொம்மை

10.வாழ்த்து

vk6b

தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை
சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே;

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;

எல்லா நாம்;
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்;

“முன்னர்ச் செய்த வினையால் துன்பத்தால் வருந்திய கண்ணகியின் கண்ணில் இருந்து ஒழுகும் நீர் கொல்வதற்குத் தன் உயிர் கொடுத்த பெரும் அரசன் வாழ்வாராக!பெருகி வரும் நீருடைய வையை ஆறு சூழ்ந்த மதுரை நகரின் அரசனின் தொன்றுத் தொட்டு வரும் குலம் நீடுழி வாழ்க!”,என்று பாண்டியனை வாழ்த்தினார்கள்.

“இமய மலையின் அரசனான இமவான் பெற்ற மடமை பொருந்திய பெண்ணை,நிலத்தை ஆளும் அரசரான தன் நீண்ட முடியின் மேல் ஏற்றிய செங்குட்டுவன் வாழ்க! பெறுகின்ற நீர் உடைய ஆன்பொருநை ஆறு சூழ்ந்த வஞ்சி நகரத் தலைவனின் பழமையான குலம் நீடுழி வாழ வேண்டும்!”,என்று சேரர்களை வாழ்த்தினார்கள்.

“காவிரி சூழ்ந்த நாடைப் புகழ்ந்துப் பாடுவோம்!மலர்கள் விரிந்தக் கூந்தலை உடைய புகார் நகரைப் பாடுவோம் !”,என்று சோழர்களை வாழ்த்தினார்கள்

குறிப்பு

 1. தொல்லை-தொன்மை,பழமை
 2. உழந்தாள்-வருந்தினாள்
 3. கோவேந்து-பெரிய அரசன் (கோ-பெரிய:வேந்தன்-அரசன்)
 4. தொல்குலம்-தொன்மையான குலம்
 5. கோமான்-அரசன்
 6. வருபுனல்-பெருகிவரும் நீர்
 7. மலையரையன்-மலை அரசன் (அரையன்-அரசன்)
 8. நிலவரசர்-நிலத்தை ஆளும் அரசர்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>