வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

vklogoவாழ்த்துக் காதை

11.புகார் நகரைப் புகழ்தல்

vk7

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை
ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை
சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;

புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த
கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை
காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;

கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங்
குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்கா னம்மானை
கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;

அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்
தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை
தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன்
கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை
கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன்
அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;

மிகுந்த நீர் உடைய கடலை வேலியாகக் கொண்ட உலகை ஆட்சி செய்து,தேவர்களின் அரசனான இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்த வலிமையானவன் யார் தாயே?

உயர்ந்த மதிலைக் காத்த வீரன்,உயர்ந்த வானித்தில் அசைகின்ற மூன்று மதிலை அழித்த சோழன் தான் பார் அம்மா!அத்தகைய சோழனின் புகார் நகரத்தைப் புகழ்ந்துப் பாடுவோம் அம்மா!

தேவலோகம் போற்றுமாறு,ஒரு புறாவிற்காக அதன் எடைக்குச் சமமாக,குறையில்லாத தன் உடம்பை அரிந்த மன்னன் யார் அம்மா?

குறை இல்லாத தன் உடம்பை அரிந்த மன்னவன்,தன் வாசலின் முன் வந்து முறையிட்ட பசுவிற்கு நீதி வழங்கிய காவலன் தான் தாயே!அத்தகைய மன்னனின் பொலிவு பெற்ற புகார் நகரைப் போற்றிப் பாடுவோம் அம்மா!

திசை யானைகள் எட்டும் கண் இமைக்காமல் காணுமாறு,வடக்கில் உள்ள இமயமலையின் நெற்றியில் வாள் போன்ற வரிகள் கொண்ட புலிச் சின்னத்தைப் பதித்தவன் யார் அம்மா?

வடக்கில் உள்ள இமயமலையில் வாள் போன்ற வரிகள் கொண்ட புலிச் சின்னத்தைப் பதித்தவன்,எட்டுத் திசைகளையும் தன் குடை நிழலில் வைத்துக் காத்த மன்னன் தான் தாயே!அத்தகைய மன்னனின் பொலிவுடைய புகார் நகரைப் புகழ்ந்துப் பாடுவோம் அம்மா!

அம்மனை விளையாடும் போது,காய்களைத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு,அழகான அணிகலன்கள் உடைய பெண்கள் தங்கள் வீடுகளில் பாடுவது இயல்பானதா அம்மா?

அவர்கள் அப்படி வீட்டில் பாடுவது,தார் மாலை அணிந்த சோழ மன்னன் வந்து தங்களது திரண்ட தொய்யில் உடைய மார்பில் கூடுதற்குத் தான் அம்மா.அப்படி அவன் அவர்களின் திரண்ட மார்பைக் கூடினால் குல மன்னனின் அழகிய புகார் நகரரின் புகழைப் பாடுவோம் அம்மா!

குறிப்பு

 1. வீங்குநீர்-மிகுந்த நீர் உடைய கடல் (வீங்கு-மிகுந்த)
 2. விண்ணவர்கோன்-தேவர்களின் அரசனான இந்திரன் (விண்ணவர்-தேவர்:கோன்-அரசன்)
 3. ஓங்கு-உயர்ந்த
 4. அரணம்-கோட்டை மதில்
 5. உரவோன்-உறுதி உடையவன் (உரம்-உறுதி)
 6. அம்மானை-தாய்
 7. விசும்பில்-வானத்தில்
 8. தூங்கு-தொங்கு
 9. எயில்-மதில்
 10. பாடேலோர்-பாடி,ஏற்று அறிந்து கொள் (பாடு+ஏல்(ஏற்றுக் கொள்) +ஓர்(ஆராய்ந்து அறிந்து கொள்))
 11. புறவு-புறா
 12. நிறை-அளவு,எடை
 13. புக்கு-புகுந்து
 14. ஏத்த-போற்ற
 15. பொன்னுலகம்-தேவலோகம்
 16. இல்-இல்லாத
 17. கொற்றவன்-வெற்றி பொருந்திய அரசன் (கொற்றம்-வெற்றி)
 18. கறவை-பால் கறக்கும் பசு
 19. பூம்-பொலிவு
 20. கடவரை-யானை
 21. வடவரை-வடக்கில் உள்ள மலை (வரை-மலை)
 22. வாள் வேங்கை-வாள் போன்ற கோடு உடைய புலி (வேங்கை-புலி)
 23. ஒற்றினன்-பதித்து வைத்தவன் (ஒற்றி-பதித்து)
 24. திக்கு-திசை
 25. அம்மனை-விளையாட்டு
 26. அணியிழையார்-அழகிய அணிகலன்கள் உடையவர்கள் (அணி-அழகு:இழை-அணிகலன்)
 27. தகை-தகுதி,இயல்பு
 28. தார்வேந்தன்-தார் என்னும் மலை அணிந்த மன்னன் (தார்-மாலை:வேந்தன்-மன்னன்)
 29. கொம்மை-வட்டம்,பருமன்
 30. அம்-அழகு

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>