வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

vklogoவாழ்த்துக் காதை

13.சேரர் வாழ்க!
vk9

வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை
உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக்
கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக்
குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல்
கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்;

ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்;

வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்
மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி
மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல்;

‘வடம்’ என்னும் கயிறு கொண்ட அழகிய ஊஞ்சல் மேல் வைத்து,ஐயை உடன் நின்றவர்களில் ஒருவர் கையை நிமிர்த்தி ஒருபக்கமாக மேல் நோக்கி அசைக்க,பகைவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை வேரோடு வீழ்த்திய சேர மன்னனைப் புகழ்ந்துப் பாடி,உள்ளங்கைப் போன்ற நீண்ட கண்கள் கலங்க நாம் ஊஞ்சல் ஆடுவோமா?சேரரின் வளைந்த வில் சின்னத்தைப் பாடி ஊஞ்சல் ஆடுவோமா?

பாண்டவர் ஐவரும்,கௌரவர் நூறு பேரும் கோபித்து எழுந்த போரில்,பொருளைப் போற்றிக் காக்க வேண்டும் என்று எண்ணாமல் பெரும் அளவில் உணவு வழங்கிய ‘சேரன்,பொறையன்,மலையன்’ என்று அழைக்கப்டும் சேர மன்னன் இயல்பைப் புகழ்ந்துக்,கரியமேகத்தை போன்ற கூந்தல் அசைந்தாடும்படி ஊஞ்சல் ஆடுவோமா?பகைவரின் கடம்ப மரத்தை வெட்டி எறிந்த சேரனின் புகழைப் பாடி ஊஞ்சல் ஆடுவோமா?

கொடிய சொல் உடைய யவனரின் வளமையான நாட்டையும்,வலிமையான பெரிய மலையான இமயமலையையும்,தெற்கில் உள்ள குமாரியையும் ஆண்ட,போருக்கு உரிய வில்,கயல்,புலி ஆகிய சின்னங்களை உடைய குடிமக்களைக் காக்கும் கோமானான சேர மன்னனின் பண்புகளைப் புகழ்ந்து, மின்னல் போன்ற இடை அசைய ஊஞ்சல் ஆடுவோமா?சேரனின் வெற்றி பொருந்திய வில் சின்னத்தைப் புகழ்ந்துப் பாடி ஊஞ்சல் ஆடுவோமா?

இவ்வாறு சேரனைப் புகழ்ந்து ஊஞ்சல் ஆடினார்கள்.

குறிப்பு

 1. வடம்-ஊஞ்சலின் கயிறு
 2. மணி-அழகு
 3. ஊசல்-ஊஞ்சல்
 4. இரீஇ-இருத்தி,வைத்து
 5. உடங்கு-உடன்
 6. ஊக்க-அசைக்க
 7. தடிந்த-குறைத்த
 8. குடங்கை-உள்ளங்கை
 9. பிறழ-மாற,கலங்க
 10. கொடு-வளைந்த
 11. பொறி-இலச்சினை,சின்னம்
 12. ஓரைவர்-ஐந்து
 13. ஈரைம்பதின்மர்-2*5*10=100 நூறு பேர் (ஈர்-இரண்டு(2):ஐம்-ஐந்து(5):பதின்மர்-பத்து(10))
 14. உடன்று-கோபித்து
 15. கார்-மேகம்
 16. குழல்-கூந்தல்
 17. வன்சொல்-கொடிய சொல் (வன்-கொடிய)
 18. வன்பெருங்கல்-வலிமையான பெரிய மலை (வன்-வலிமை)
 19. செரு-போர்
 20. மன்பதை-மக்கள் கூட்டம் (மன்-மாந்தன்:பதை-பதைப்பு கூட்டம்)
 21. நுடங்க-அசைய
 22. விறல்-வெற்றி,வீரம்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>