வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

vtklogo வரந்தரு காதை

4.புலம்பியதற்கு காரணம்

vtk3

ஆங்கது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர்

தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்
செம்மொழி மாதவர் சேயிழை நங்கை
தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே
அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்
பருவ மன்றியும் பைந்தொடி நங்கை

திருவிழை கோலம் நீங்கின ளாதலின்
அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்

‘துறவறம் பூண்டதை அறிந்த அரசனும்,நகர மக்களும்,உயர்ந்த நல்ல மாணிக்கத்தைப் பெரிய கடலில் போட்டவர்கள் போல பெரும் துன்பம் அடைந்தார்கள்.வளமான சொற்களை உடைய மாதவம் புரிந்தவர்கள்,”சிறந்த ஆபரணங்கள் அணிந்த மணிமேகலை தான் துறவறம் பூண்டச் செய்தியை எங்களுக்கு அறிவித்தாள்”,என்று அன்பு மிகுந்த நல்ல மொழிகளை அருளோடு கூறினார்கள்.

துறவி ஆகும் பருவம் மணிமேகலைக்கு இல்லை என்றாலும்,பசுமையான பொன் வளையல்கள் அணிந்த மணிமேகலை,திருமகளும் விரும்பும் தன் அழகிய அலங்காரத்தை நீக்கினாள்,அதை நினைத்து வாய்விட்டுப் புலம்பினேன்’,என்று தேவந்தி செங்குட்டுவனிடம் கூறினாள்.

குறிப்பு

 1. நன்-நல்ல
 2. உறுகடல்-பெரிய கடல் (உறு-பெரிய)
 3. நனி-மிகுதி
 4. எய்த-அடைய
 5. செம்மொழி-வளமான மொழி
 6. மாதவர்-மாதவம் புரிந்தவர்கள்
 7. சேயிழை-சிறந்த ஆபரணம் (சேய்-சிறந்த:இழை-ஆபரணம்)
 8. உறு-மிகுதி
 9. பைந்தொடி-பசும் பொன்னால் செய்த வளையல் (பைம்-பசுமை:தொடி-வளையல்)
 10. திருவிழை-திருமகள் விரும்பும் (திரு-திருமகள்:விழை-விரும்பும் )
 11. அரற்றினென்-வாய்விட்டு புலம்பினேன்

5.தெய்வம் உற்றாள்

குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்
துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்
மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள்

திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்
கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள் உயர்மொழி கூறிக்
தெய்வமுற் றெழுந்த தேவந்திகைதான்

இவ்வாறு செங்குட்டுவனிடம் மணிமேகலையைப் பற்றித் தேவந்தி கூறிக் கொண்டிருக்கும்போது…

கொத்தாக முடிந்தக் கூந்தல் அவிழ்ந்து அவள் முதுகில் விழுந்தது.புருவங்கள் துடிதுடித்தன.அவளின் சிவந்த வாயில்,பவளம் போன்ற உதடுகளை மடித்துச் சிரித்தாள்.அவள் வாயில் இருந்து வரும் சொற்கள் தெளிவின்றி மயங்கியது.அழகிய முகம் வியர்த்தது.சிவந்த கண்கள் மேலும் சிவந்தது.கையை வீசி உயர்த்தினாள்.கால்கள் தங்கள் நின்ற நிலையில் இருந்து நீங்கின.பலரும் அறியாத தெளிவும் மயக்கமும் உடையவள் ஆனாள்.அவளின் நாக்கு காய்ந்தது.மேலான சொற்களைக் கூறி தெய்வம் தன் மீது ஏறியவளாகத் தோன்றினாள் தேவந்தி.

குறிப்பு

 1. குரல்-கொத்து
 2. துவர்-சிவப்பு,பவளம்
 3. வருமொழி-தானே வரும் மொழி
 4. திரு-அழகு
 5. வியர்த்தனள்-வியர்வை அடைந்தாள்
 6. ஓச்சினள்-உயர்த்தினாள்
 7. தெருட்சியள்-தெளிவு உடையவள்  (தெருட்சி-தெளிவு)
 8. மருட்சியள்-மயக்கம் உடையவள்  (மருட்சி-மயக்கம்)
 9. உலறிய-உலர்ந்த

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>