வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

vtklogo வரந்தரு காதை

7.தேவந்தி வரலாறு

மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்
தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து
கேளிது மன்னா கெடுகநின் தீயது

மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்

கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி
ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்
பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்
காசில் குழவி யதன்வடி வாகி
வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னோடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து
நாலீ ராண்டு நடந்ததற் பின்னர்

மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன்

கண்ணகியின் தோழியான தேவந்தி மேல் வந்த பாசண்டச் சாத்தன் தெய்வம் கூரியத்தைக் கேட்டு வியப்படைந்த செங்குட்டுவன் மாடலனின் முகத்தைப் பார்த்தார்.மாடலன் மிகுந்த மகிழ்ச்சியுடன்,’இதனைக் கேள் மன்னா!உன் தீவினை எல்லாம் அழிந்து விடும்!’,என்றார்.

‘ஒரு சமயம் மாலதி என்னும் பெண் தன் மாற்றாளுடைய குழந்தைக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள்.அந்த நேரம் தன் பழைய வினை உருவம் அடைந்து தோன்றியதால்,குழந்தையின் உயிரை எமன் கொண்டு சென்றான்.இறந்த குழந்தையை நினைத்து வருந்திய மாலதி,அதனைப் பொறுக்க முடியாமல் மிகுந்த துன்பம் அடைந்துப் பாசண்டச்சாத்தனிடம் போய் வரம் வேண்டினாள்.குற்றமற்ற குழந்தையின் வடிவில் பாசண்டச் சாத்தன் அவள் முன் தோன்றி,’அன்னையே!உன் பெரும் துன்பம் அழியட்டும்!’,என்று வரம் தந்தார்.

அருளை விரும்பிய சாத்தன் அவள் துன்பத்தைப் போக்கி,பார்ப்பனியான மாலதியோடும் அவள் மாற்றாளாகிய பழைய தாயிடமும் காப்பியக் குடி என்னும் பழைய குடியில் அழகுடன் வளர்ந்தார்.தீயை வலம் வந்து இந்தத் தேவந்தியை மணந்தார்.திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னர்,என்றும் அழியாத தன் இளமையின் அழகைக் காட்டி என் கோயிலுக்கு நீ வர வேண்டும் என்று சொல்லி இவளை விட்டு பிரிந்துச் சென்றார்’,என்று தேவந்தியின் வரலாறை செங்குட்டுவனிடம் எடுத்துரைத்தார் மாடலன்.

குறிப்பு

 1. விம்மிதம்-வியப்பு
 2. நனி-மிகுதி
 3. குழவி-குழந்தை
 4. பழவினை-பழைய வினை
 5. உருத்து-உருவம் கொண்டு
 6. கூற்று-எமன்
 7. ஆரஞர்-பெரும் துன்பம் (அஞர்-துன்பம்)
 8. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல்
 9. ஆசுஇல்-குற்றமற்ற (ஆசு-குற்றம்)
 10. வான் துயர்-பெரும் துயர்
 11. செந்திறம்-அருள்
 12. கவின்-அழகு
 13. நால் ஈராண்டு-4(நால்)*2( ஈராண்டு) = 8 ஆண்டு
 14. கோட்டம்-கோயில்
 15. மூவா-முதுமை அடையாத

8.பாசண்டச் சாத்தன் தந்த கமண்டலம்
vtk5

மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
அங்குறை மறையோ னாகத் தோன்றி
உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து
குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்
ஆங்கது கொண்டு போந்தே னாதலின்
ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி
அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்
மன்னர் கோவே மடந்தையர் தம்மேல்
தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப

‘அந்தப் பாசண்டச் சாத்தானே மங்கலா தேவியான கண்ணகியின் கோயிலில் வாழும் பிராமணன் போலத் தோன்றினார்.உறியிலே தங்கிய கமண்டலத்தை என்னிடம் கொடுத்து,அதைப் பற்றிய சில குறிக்கோள்களைக் கூறிச் சென்றவர்,மீண்டும் வரவில்லை.அதனால் அங்கிருந்து அதை எடுத்துக்கொண்டு நானும் இங்கு வந்துவிட்டேன்.இப்பொழுது என்னை அறிந்தச் சாத்தானே,பிராமணப் பெண்ணான தேவந்தி மேல் தோன்றி,’அந்த நீரைத் தெளி!’,என்று கூறினார்.மன்னர் மன்னனே!இந்தப் பெண்கள் மேல் நீரைத் தெளித்து,நாமும் உண்மை அறிவோம்’,என்று கூறி மாடலன் நீரைத் தெளித்தார்.

குறிப்பு

 1. மங்கல மடந்தை-மங்கலாதேவி
 2. கோட்டம்-கோயில்
 3. மறையோன்-பிராமணன்
 4. கரகம்-கமண்டலம்
 5. போந்தேன்-வந்தேன்
 6. கோ-மன்னன்
 7. மறையோள்-பிராமணப் பெண்
 8. மடந்தையர்-பெண்கள்
 9. அறிகுவம்-அறிவோம்
 10. தெளிப்ப-தெளிக்க

படத்தின் மூலம்: http://yourshot.nationalgeographic.com/tags/kamandalam/
dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>