வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

vtklogo வரந்தரு காதை

vtk6
9.கண்ணகியின் தாய் கூறியது

ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்
புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக்
காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்
யான்பெறு மகளே என்றுணைத் தோழீ
வான்றுயர் நீக்கும் மாதே வாராய்

மாடலன் தெளித்த நீரால் மூன்று சிறுமிகளுக்கும் தங்களின் முன் பிறவி உணர்வு வந்தது.

“நீ புகழ்ந்த உன் கணவனின் போற்றப்படாத ஒழுக்கத்தை எண்ணி இகழ்ந்து,அதற்காக வருந்தும் என்னையும் நீ பொருட்படுத்தவில்லை.அன்னிய நாட்டுக்கு யார் துணையும் இல்லாமல்,ஒற்றைத் தனி ஆளாக உன் கணவனோடு சென்று மிகுந்த துன்பம் அடைந்தாய்!நான் பெற்ற மகளே!எனக்குத் துணையாக ஒரு தோழி போல் இருந்தவளே!நான் அடைந்த பெரும் துன்பத்தைப் போக்கக்கூடிய பெண்ணே!வா!”,என்று முன் பிறவியில் கண்ணகியின் தாயாக இருந்த சிறுமி கண்ணகியைப் பார்த்துக் கூறினாள்.

குறிப்பு

 1. ஏதில்-அன்னியம்
 2. வான்துயர்-மிகுந்த துயர்

10.கோவலனின் தாய் கூறியது

என்னோ டிருந்த இலங்கிழை நங்கை
தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து
போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம்
யானது பொறேஎன் என்மகன் வாராய்

“பிரகாசமான நகைகள் அணிந்து என்னுடன் இருந்த கண்ணகியோடு,நடு இருளில் பிறர் அடையாத துன்பத்தை அடைந்து,வருந்தி நாட்டை விட்டு நீ சென்றாய்.அதை எண்ணி இரங்கி என் நெஞ்சம் புலம்பியது.உனக்கு நடந்ததை என்னால் பொறுக்க முடியாது.என் மகனே வா!”,என்றாள் கோவலனின் தாயாக முன் பிறவியில் இருந்த சிறுமி.

குறிப்பு

 1. இலங்கு-விளங்கு
 2. இழை-அணிகலன்
 3. உழந்து-வருந்தி
 4. பொறேஎன்-பொறுக்கமாட்டேன்
 5. புலம்புறும்-புலம்புவதற்கு உரிய

11.மாதரி கூறியது

வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தோன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன்
எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ

“இடைவிடாமல் வரும் நீரை உடைய வையை ஆற்றின் பெரிய துறையில் இருந்து வந்த நான்,அழகான பழமையான ஊரான மதுரையில் இளையவர்கள் செய்த செயலைக் கேள்விபட்டு வந்தேன்,ஆனால் உன்னை என் வீட்டில் காணவில்லை.என் தாயைப் போன்றவளே! இளம் பருவமுடையாய்!எங்கு சென்று ஒளிந்தாய்?”,என்று முன் பிறவியில் மாதரியாக இருந்த சிறுமி,கண்ணகியைப் பார்த்துக் கூறினாள்.

குறிப்பு

 1. வருபுனல்-இடைவிடாமல் வரும் நீர் (புனல்-நீர்)
 2. வான்-பெரிய
 3. உருகெழு-அழகு பொருந்திய (உரு-அழகு:கெழு-பொருந்திய)
 4. மூதூர்-பழைய ஊர்
 5. குறு மாக்கள்-சிறிய மக்கள்,இளையவர்கள்
 6. இளையாய்-இளையவர்

12.புலம்பினார்கள்

என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப்
பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்
குதலைச் செய்வாய்க் குறுந்தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்றழத்

இவ்வாறு அங்கு மூன்று சிறுமிகளும் கூறிப் புலம்பி வருந்தி ஏங்கினார்கள்.

திருமகள் தங்கும் மார்பை உடைய,போரை விரும்புவானான செங்குட்டுவன் முன்,மழலை மொழி பேசும் சிவந்த வாயையும்,சிறிய வளையளையும் உடைய சிறுமிகள் பெரியவர்கள் பேசும் சொற்களைப் பேசியபடி,கோயிலின் முன் வாசலில் நின்று அழுதுக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பு

 1. அரற்றி-புலம்பி
 2. அகலம்-மார்பு
 3. வெய்யோன்-விரும்புபவன்
 4. குதலை-மழலை மொழி
 5. குறுந்தொடி-சிறிய வளையல் (தொடி-வளையல்)
 6. முன்றில்-வீட்டின் முன்பகுதி (இல்-இல்லம்)

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>