வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

vtklogo வரந்தரு காதை

13.செங்குட்டுவனின் ஐயம்

தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்
மாடல மறையோன் றன்முக நோக்க
மன்னர் கோவே வாழ்கென் றேத்தி
முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன்

முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய செங்குட்டுவன் கேட்டார்.உடனே வேதம் அறிந்த பிராமணரான மாடலனின் முகத்தைப் பார்த்தார்.பூணூல் அணிந்த மார்பை உடைய மாடலன்,’அரசர்களுக்கு எல்லாம் அரசே வாழ்க!’,என்று செங்குட்டுவனைப் போற்றி,அவர் கருதியதைக் கூறத் தொடங்கினார்.

குறிப்பு

 1. தோடு-இதழ்
 2. அலர்-விரிந்த
 3. போந்தை-ஆண் பனம் பூ
 4. கழல்-வீரர்கள் அணியும் காலணி
 5. மறையோன்-வேதம் அறிந்த பிராமணன் (மறை-வேதம்)
 6. ஏத்தி-போற்றி
 7. முந்நூல்-பூணூல்
 8. முன்னியது-கருதியது
 9. கோ-அரசன்

14.பிறவியின் காரணம்
vtk7

மறையோன் உற்ற வான்துயர் நீங்க
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்தில ரதனால்
அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி
மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின்
உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர்

ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்
போய பிறப்பிற் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்

‘பிராமணன் அடைந்த பெரும் துன்பம் விலக,மதம் சொரியும் உள்வாய் உடைய யானையின் கையில் நுழைந்தவன் கோவலன்.அதனால் அவன் தேவர்களின் வடிவம் பெற்றான்.அவன் மனைவியான கண்ணகியின் மீது இந்த மூவரும் அன்பு உடையவர்கள் என்பதால் கோவலனுடன் சொர்க்கத்திற்குச் செல்லும் கெடுதல் இல்லாத நல்ல அறத்தைச் செய்யும் புண்ணியம் பெற்றார்கள்.

அதனால்,அழகிய நேர்மையான சாயல் உடைய கண்ணகி,சிறிதும் அஞ்சாமல் அடைந்த பழைய ஊராகிய வஞ்சி நகரத்தில்,கண்ணகியிடம் மேல் கொண்ட காதலால்,உள்ளத்தில் மிகுந்த அன்போடு,அந்த இடத்தில் அரட்டன் செட்டியின் மனைவியின் உள்ளம் மகிழும் சிறப்புடன்,இரட்டை குழந்தைகளாகக் கண்ணகியின் தாயும்,அவள் மாமியாரும் ஒன்றாகப் பிறந்தார்கள்.

இடையர் குலத்து முதியவளான மாதரி கண்ணகியின் மீது முன் பிறவியில் கொண்ட அன்பினால்,தான் ஆடிய குரவையின் காரணமாக,பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட திருமாலுக்குத் தொண்டு செய்யும் குடும்பத் தலைவனின் சிறு மகளாக வந்து பிறந்தாள்’,என்று மாடலன் மூன்று சிறுமிகளின் இந்தப் பிறவியின் காரணத்தை செங்குட்டுவனிடம் கூறினார்.

குறிப்பு

 1. வான்-பெரிய
 2. உறைகவுள்-மதம் சிந்தும் உள்வாய் (உறைத்தல்-சிந்துதல்:கவுள்-யானையின் உள்வாய்)
 3. வேழ(ம்)-யானை
 4. வானோர்-வானத்தில் உள்ளவர்கள்
 5. தாவா-தடை
 6. அம்-அழகிய
 7. செம்-வளமை,சிவந்த தன்மை
 8. மருங்கு-பக்கம்
 9. அற்பு-அன்பு
 10. உளம்-உள்ளம்
 11. மடமொழி-மென்மையான சொற்கள் (மட-மென்மை)
 12. ஒருங்கு-முழுமை
 13. ஆயர்-இடையர்கள்
 14. முது மகள்-வயதான பெண்
 15. ஆயிழை-தேர்ந்தெடுத்த அணிகலன் (ஆய்-தெரிந்தெடு: இழை-அணிகலன்)
 16. போய-போன
 17. அரவணை-
 18. சேட(ன்)-அடியவன்
 19. குடும்பி-குடும்பத்தலைவன்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>