வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

vtklogo வரந்தரு காதை

15.உலக நியதி

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை

ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்
செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்
கையகத் தனபோற் கண்டனை யன்றே
ஊழிதோ றூழி யுலகங் காத்து

நீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற
மாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து

‘நல்ல செயல்களைச் செய்தவர்கள் பொன்னுலகம் அடைவதும்,உள்ளத்தில் ஒருவர் பால் அன்பு மிகுந்தவர்கள் பற்றின் காரணமாகப் பிரிவதும்,ஒருவர் செய்த அறத்தின் நல்ல பயன் அவருக்குக் கிடைப்பதும்,பாவத்தின் தீயப் பயன் உண்டாவதும்,இந்த உலகத்தில் பிறந்தவர்கள் இறப்பதும்,இறந்தவர்கள் பிறப்பதும்,புதுமையானது அல்ல.அதுவே தொன்றுதொட்டு நிகழும் வாழ்க்கை நியதி ஆகும்.

ஆண் ஏற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் அருளால் தோன்றிய இந்தப் பெரிய உலகை விளக்கமுறச் செய்த மன்னன் நீ என்பதால்,செய்த தவத்தின் பயன்களையும்,சிறந்தவர்களின் வடிவத்தையும் உன் கையில் உள்ளது போலத் தெளிவாக அறிந்தாய்.குணத்தில் சிறந்தவரே! நீண்ட காலமாக உலகைக் காத்து நீடுழி வாழ வேண்டும்!’,

இவ்வாறு,மாடல மறையோன் நியதியை விளக்கி,செங்குட்டுவனை வாழ்த்த,செங்குட்டுவனும் மனம் மகிழ்ந்தான்.

குறிப்பு

 1. நற்றிறம்-நல்ல திறமை (திறம்-திறமை)
 2. அற்பு-அன்பு
 3. உளம்-உள்ளம்
 4. மறம்-தீமை
 5. படிவம்-வடிவம்
 6. ஊழி-நீண்ட காலப்பகுதி
 7. நெடுந்தகை-குணத்தில் பெரிய மனிதர் (தகை-குணம்)
 8. மறையோன்-பிராமணர்

16.கண்ணகி கோயில் பராமரிப்பு
vtk8

பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்
கலிகெழு கூடல் கதழெரி மண்ட
முலைமுகந் திருகிய மூவா மேனிப்

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந் திகையைச் செய்கென் றருளி
வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி

‘பாடலால் சிறப்பு மிகுந்த பாண்டி நாட்டின் பலவகை ஒலிப் பொருந்திய ‘கூடல்’ என்னும் மதுரையில் விரைந்து பற்றி எரியும் தீ பரவ,தனது மார்பைத் திருகி எறிந்த முதிராத மேனி உடைய கற்புத் தெய்வமான கண்ணகியின் கோயிலுக்கு அர்ச்சனை,அலங்காரம் என அனைத்து நாள்களிலும் விழா நடக்க வேண்டும்!’,என்று செங்குட்டுவன் கட்டையிட்டார்.

மேலும்,’கண்ணகிக் கோயிலில் பூக்கள்,புகை,அனைவரும் விரும்பும் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் செலுத்தும் தொண்டை நீ செய்!’, என்று கண்ணகியின் தோழியான தேவந்தி செய்ய வழி செய்தார்.

பின்,கண்ணகிக் கோயிலை மூன்று முறை வலமாக வந்து வணங்கி நின்றார் செங்குட்டுவன்.
குறிப்பு

 1. சால்-மிகுந்த
 2. கலி-ஒலி
 3. கெழு-பொருந்திய
 4. கதழ்-விரைந்து
 5. மூவா-முதிராத
 6. படிப்புறம்-அர்ச்சனை
 7. நித்தல்-எந்நாளும்
 8. மேவிய-விரும்பிய
 9. விரை-வாசனை

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>