வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

vtklogo வரந்தரு காதை

17.பிற அரசர்களின் வேண்டுதல்

Image result for செங்குட்டுவன்

உலக மன்னவ நின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்

உலக மன்னனான செங்குட்டுவன் முன்னர்,அப்பொழுது அரிய சிறையில் இருந்து விடுதலை ஆன ஆரிய நாட்டு அரசர்களும்,பெரிய சிறைக் கோட்டத்தில் இருந்து விடுதலை ஆன மற்ற மன்னர்களும்,குடக நாட்டுக் கொங்கரும்,மாளுவ நாட்டு மன்னரும்,கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான கயவாகுவும்,’எங்கள் நாட்டில் இமய மலையை எல்லையாகக் கொண்டதால் ‘இமயவரம்பன்’ என அழைக்கப்படும் செங்குட்டுவன் பிறந்த நல்ல நாளில் செய்யும் விசேஷ யாகத்தில் வந்து தோன்ற வேண்டும்’, என்று கண்ணகியை வணங்கி வேண்டினார்கள்.

குறிப்பு

  1. இமயவரம்பன்-இமய மலையை எல்லையாகக் கொண்ட செங்குட்டுவன்
  2. நாளணி-சிறப்பான நாள்களில் செய்யப்படும் அலங்காரம்
  3. வேள்வி-யாகம்

18.வரம் தந்தாள்

தந்தேன் வரமென் றேழுந்த தொருகுரல்
ஆங்கது கேட்ட அரசனு மரசரும்
ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த
வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய
மாடல மறையோன் றன்னொடுங் கூடித்
தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்

அப்போது ‘தந்தேன் வரம்!’,என்று ஒரு குரல் கேட்டது.அந்த இடத்தில் அந்தக் குரலைக் கேட்ட செங்குட்டுவனும்,மற்ற அரசர்களும்,மிகப் பெரிய படைகளும், கண்ணகியின் புகழ் கூறிப் போற்றினார்கள்.முத்திடைந்தவர்கள் போல மகிழ்ந்து,உண்மை நெறியை விரும்பிய மாடலனோடு சேர்ந்து,பகைவர்கள் வந்து வணங்கும் வீரக் கழல் உடைய அரசர்கள் தன்னுடைய அடிகளைப் போற்ற,செங்குட்டுவன் யாகசாலைக்குள் புகுந்தார்.

குறிப்பு

  1. உரை-புகழ்
  2. தானை-படை
  3. ஏத்த-போற்ற
  4. தாழ்கழல்-பகைவர்கள் வந்து வணங்கும் கழல் (கழல்-வீரர்கள் அணியும் காலணி)
  5. வீடு-முத்தி
  6. வேள்விச் சாலை-யாகச் சாலை

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>