புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

5.தேவந்தியின் துயர்

couple

- தூய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித் 30
துறைபோய்,அவர்முடிந்த பின்னர்,இறையோனும்

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத்,தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து,மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி,அவளுக்குப்
‘பூ வந்த உண்கண் பொறுக்க,என்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டி,’எம் கோட்டத்து 35

நீ வா’ என உரைத்து, நீங்குதலும்-

குழந்தையாய் வந்த சாத்தான்,குற்றமில்லா மறையோனின் வாரிசாக வளர்ந்து வந்தான்.சிறந்த கல்விகேள்விகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றான்.பெற்றோர்கள் இறந்தபின்,அவர்களுக்குச் செய்ய வேண்டிய எல்லா ஈமக்கடன்களையும் செய்து முடித்தான்.உறவுமுறை பங்காளியரிடம் சொத்து உரிமைக்காக வழக்குத் தொடுத்து வென்றான்.தேவந்தி என்பவளை மணந்து,இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தான்.அப்படி இன்பமாக வாழ்ந்து வந்த ஒரு நாளில்,அவன் அவளைக் கட்டித் தழுவி,“நான் தீர்த்தமாடப் போகிறேன்,பூவையொத்த உன் கண்கள்,என் பிரிவைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி,முதுமை எய்தாத தன் அழகிய இளைய தோற்றத்தை அவளுக்குக் காட்டினான்.பின்னர்,’என் கோயிலுக்கு நீ தினம் வர வேண்டும்’ எனக்கூறி அவளைத் தனியே விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான்.

குறிப்பு
—————–

  1. தாயத்தார்-ஞாதி,பங்காளி
  2. மேவி-தழுவி
  3. மூவா-முதுமை எய்தாத
  4. இளநலம்-இளமையின் அழகு
  5. மாணி-பிரமச்சாரி,பிராமணர்

6.தேவந்தியின் வேண்டுதல்

-தூமொழி
‘ஆர்த்த கணவன் அகன்றனன்,போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன் என்று!’அவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய்’ எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்-

மாசில்லாத சொற்களையே பேசும் குணமுடையவள் தேவந்தி.’என் நெஞ்சைக் கவர்ந்த என் கணவன் திர்த்தத்துறைகளில் நீராடி வரச் சென்றிருக்கிறார்,அவரை மறுபடியும் இங்கு கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பாயாக’ என்று சாத்தனை வேண்டுவதற்காக,நாள்தோறும் ஒரு காரணத்தைச் சொல்லி அவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தாள்.

குறிப்பு
—————–

  1. ஆர்த்த கணவன்-நெஞ்சில் பிணைந்த கணவன்
  2. ஒன்றன் மேலிட்டு-ஒரு காரணத்தை சொல்லி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>