புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.தம்பதியரின் தெய்வ வழிபாடு
ss

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, 10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ்  நீழல் அறவோன் திருமொழி
அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திரவிகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து,பொய்யா விரதத்து, 15

அவலம் நீத்து,அறிந்து அடங்கிய கொள்கை,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து,தலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் ,20

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்,
நீர்அணி விழவினும்,நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுது,வலம் கொண்டு, 25

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,

(திருமால்)

வீட்டை விட்டு வெளியேறிய கண்ணகியும் கோவலனும்,அழகிய ஆதிசேடனாகிய பாம்பணையின் மேல் உறங்கும்,நீலமணி போன்ற நிறமுடைய திருமாலின் கோயிலை வலம் வந்தனர்.

(புத்தர்)

உயர்ந்த ஐந்து பெரிய கிளைகளையும்,பசுமையான இலைகளையும் உடைய சிறப்புப் பொருந்திய அரசமரத்தின் அழகிய நிழலில் அமர்ந்து புத்தர் அறமொழிகளைக் கூறினார்.வானில் சஞ்சரிக்கும் சிறு தெய்வங்கள் அந்த அறமொழிகளை அனைவர்க்கும் எடுத்துரைக்கின்றனர்.அவ்வாறு அவர்கள் கூறும் இடங்கள் இந்திரவிகாரங்கள் என்று அழைக்கப்பட்டன.திருமால் கோயிலைக் கடந்த பின் கோவலனும் கண்ணகியும்,அப்படிப்பட்ட இந்திர விகாரங்கள் ஏழினையும் தரிசித்துச் சென்றனர்.

(அருகர்)

அசைவ உணவைத் துறந்து,பொய்வார்த்தைகள் கூறாத விரதத்தை மேற்கொண்டு,பொறாமை,ஆசை போன்ற அவலம் தரும் எண்ணங்களைக் கைவிட்டு,ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் கொள்கை உடையவராக,உண்மைத் திறனை அறிந்த சிறப்புடையவர் சமணர்.

அவர்கள் கூடும் அருகன் கோயிலில்,பஞ்சபரமேட்டிகள் தங்குகின்ற ஐந்து சந்திகள் ஒன்றாகக் கூடுகின்ற இடத்தில் இருந்த பெரிய மன்றத்தில்,பொன்னிறப் மலர்களுடன் பூத்திருந்த அழகு ததும்பும் அசோக மரம் இருந்தது.அந்த மரத்தின் செழுமையான நிழலில்,திருமஞ்சன நீராட்டு விழா அன்றும்,தேர்த்திருவிழாவின் போதும்,ஆகாயத்திலிருந்து சிறு தெய்வங்கள் வரக்கூடும் என்று கருதி,சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தாராகிய சாவகர் கூடி நிற்பர்.அவர்கள் பலரும் கூடிநின்ற ஒளிபொருந்தியக் கல்லால் செய்த ஆசன மேடையைக் கோவலனும் கண்ணகியும் வலம் வந்து வணங்கினர்.

அதன் பின்,
மலையிலிருந்து புறப்பட்டுப் பாய்ந்து வரும் பேராறு போல,உலகோர் வந்து போவதற்கு ஏற்ப அமைந்திருந்த புகாரின் நகர வாயிலைக் கடந்து,அந்த வழியில் செல்லும் மக்களுடன் சேர்ந்து புகார் நகரை விட்டுச் சென்றனர்.

குறிப்பு
—————–

 1. பணை-கிளை
 2. பாசிலை-பசுமையான இலை
 3. போதி-அரசமரம்
 4. அந்தரசாரி-வானில் உலவும் சாரணர்(சிறு தெய்வங்கள்)
 5. விழுமியோர்-சிறந்தோர்
 6. பஞ்ச பரமேட்டிகள்-சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களை பரமேட்டிகள் என்றனர்.
  அருகர்,சித்தர்,ஆசாசார்யர்,உபாத்யாயர்,சாதுக்கள் ஆகியோரை பஞ்ச பரமேட்டிகள் என்று வழங்கினர்.
 7. பொலம்-பொன்
 8. பிண்டி-அசோகமரம்
 9. கொழு(விய)-செழுமையான
 10. நலம்-அழகு
 11. கிளர்(தல்)-மிகு(தல்)
 12. சிலாதலம்-கல்லால் செய்த ஆசன மேடை
 13. இடைகழி-வெளிவாயில்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>