புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

3.கவுந்தியடிகளைக் கண்டனர்
tierdlady

கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30

இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து-
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35

காவதம் கடந்து,கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி,ஆங்கண்,
இறும்கொடி நுசுப்போடு இனைந்து,அடி வருந்தி,
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க 40

‘மதுரை மூதூர் யாது?’என வினவ-
ஆறு-ஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
‘நாறைங் கூந்தல்;நணித்து’ என நக்குத்,
தேமொழி தன்னொடும்,சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டு,அடி தொழலும், 45

உருவமில்லாத மன்மதன்,சோழமன்னனுக்குத் தான் செலுத்த வேண்டிய இறையான இளவேனிலையும் தென்றலையும் வழங்கும் இடமான,பலவகை மலர்கள் நிறைந்த நல்லதொரு மரநிழலை உடைய ‘இலவந்திகை’ என்னும் அழகிய சோலையின் மதிற்புறத்தைக் கடந்தனர்.

காவிரிப் பெருங்கரையில் நீராடச் செல்வதற்கென்று தாழ்ந்த சோலைகள் சூழ்ந்த,பெரிய வழி அமைக்கப்பட்டிருந்தது.அந்த வழியில் சென்று,நீராடும் துறையையும் கடந்து சென்றனர்.

பின்னர் மேற்குத் திசை நோக்கி நடக்கத் துவங்கினர்.வளமுடைய காவிரியின் வடகரையில் அமைந்திருந்த மலர் நிறைந்த சோலையினைக் கடந்தனர்.

அங்கிருந்து காத தூரம் நடந்து,பூக்கும் மரங்கள் இருந்த சோலையில் கவுந்தியடிகள் எழுந்தருளிய தவச்சாலையை அடைந்தனர்.அப்போது,நன்மை பொருந்திய ஐந்துவகைக் கூந்தலையும்,முரிந்திவிடுமோ என்று பயப்படும்படி கொடி போன்ற இடையையும்,நடந்து வந்த களைப்பால் மிகவும் வருந்திய பாதங்களையும் கொண்ட கண்ணகி வருந்தி பெருமூச்சு விட்டாள்.முற்றாத மழலை மொழியாலே,தன் முள் போன்ற கூரிய பற்கள் லேசாக வெளியே தெரியுமாறு,’மதுரை என்னும் பழைய ஊர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?’ என்று கோவலனை கேட்டாள்.

‘மணமான ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தலுடையவளே!மதுரை மாநகர் இன்னும் ஆறைந்து (6*5=30முப்பது) காத தூரத்தில் உள்ளது” என்று கூறிச் சிரித்தான்.அதன் பின்னர்,கோவலன் தேன் போன்ற மொழியுடைய கண்ணகியோடு தவச்சாலைக்குச் சென்று,கவுந்தியடிகளின் பாதம் பணிந்து வணங்கினான்.

குறிப்பு
—————–

 1. கலையிலாளன் -(கலை-உடம்பு) உருவம் இல்லாதவன் அநங்கன்,அதாவது மன்மதன்.
 2. இறுத்தல்-செலுத்தல்
 3. பந்தர்-நிழல்
 4. இலவந்திகை-மன்னன் தென்றலில் உலவுவதற்காக அமைக்கப்பட்ட பூங்காப் பந்தல்
 5. எயிற்புறம்-மதில் புறம்
 6. பொழில்-சோலை
 7. தண்பத-நீராட(தண்பதம்-புது புனல்)
 8. கடைமுகம்-இறங்கு துறை
 9. குடதிசை-மேற்கு திசை
 10. நுசுப்பு-இடை
 11. இறும்-முரியும்
 12. நறும்பல் கூந்தல்-நன்மை பொருந்திய ஐந்து வகை கூந்தல்
 13. சிறை-தவச்சாலை
 14. ஐயை-மூத்தோர்
 15. நாறைங் கூந்தல்-மணமான ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தல்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>