புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

4.கவுந்தியடிகளும் புறப்பட்டார்
kouvnthi

உருவும் குலனும்,உயர்ப்பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர்! என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறு?’ என-
‘உரையாட்டு இல்லை! உறு தவத்தீர்! யான் 50

மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்;
‘பாடகச் சீறடி பரல்பகை உழவா,
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ?
‘உரியது அன்று,ஈங்கு ஒழிக’என,ஒழியீர், 55

மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின்’ என்ற, 60

காவுந்தி ஐயையைக் கைதொழுது,ஏத்தி
‘அடிகள் நீரே அருளிதிர் ஆயின்,இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்’என-

‘அழகும்,உயர்குலப் பிறப்பும்,உயர்ந்த ஒழுக்கமும்,அருகதேவன் கூறிய அறிவுரைகளைப் பிறழாமல் கடைப்பிடிக்கும் கொள்கையும் உடையவரே! தீவினை புரிந்தவர் போல,உங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி இங்கே வருவதற்குக் காரணம் என்ன?’,எனக் கவுந்தியடிகள் கேட்டார்.

அதற்குக் கோவலன்,’அருந்தவத்தை உடையவரே!மதுரை நகர் சென்று,வியாபாரம் செய்து பொருள் சேர்க்க விரும்புகிறேன்.இதைத்தவிர,வேறு எதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை’.என்றான்.

‘பாடகம் அணிந்த இவளின் சிறிய பாதங்கள்,பரல் கற்கள் நிறைந்த பாதையில் செல்வதைப் பொறுக்காதே!இடையில் காடுகள் நிறைந்த நாட்டினை நீங்கள் கடப்பதும் கடினம் ஆயிற்றே!நீங்கள் இப்படி வந்தது யாருக்கும் தெரியாதா?இவள் இத்தகைய பயணம் செல்வது சரியல்ல.பயண எண்ணத்தைக் கைவிட்டு,நீங்கள் இங்கே தங்கிவிடுங்கள்’ என்றார்.

அவர்கள் அதற்கு இணங்காதது கண்டு,”உங்கள் எண்ணத்தை நீங்கள் கைவிட மாட்டீர்கள்.குற்றமற்ற சான்றோரின் உரைகளைக் கேட்பதற்காகவும்,அங்கு இருக்கும் அருகதேவனைத் தொழவும்,நானும் தென் தமிழ்நாட்டில் உள்ள,’வினை தீர்க்கும் சிறப்பு’ வாய்ந்த மதுரைச் செல்ல எண்ணியிருந்தேன்.அதனால் உங்களுடன் நானும் மதுரைக்கு வருகிறேன்.புறப்படுங்கள்!’ என்றார் கவுந்தியடிகள்.

அவரைக் கைகளால் வணங்கிய பின்,’அடிகள் நீங்களே எங்களுடன் வர அருள் புரிந்தீர்கள் என்றால்,வளைந்த வளையணிந்த தோள்களையுடைய இவளது துன்பம் எல்லாம் போக்கியவனாவேன்’ என்றான் கோவலன்.

குறிப்பு
—————–

  1. உறுகணாளர்-தீவினை செய்பவர்
  2. அறிகுநர்-அறிந்தவர்
  3. மறவுரை-தீய உபதேசம்
  4. தொடி-வளைவு

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>