புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

5.சோலை வழியின் இயல்புகள்
solaivazhi

கோவலன், காணாய்! கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல,கேண்மோ: 65

வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். 75

வெயிலின் சூட்டைக் கூடப் பொறுக்காத மென்மையான இயல்புடையவள் கண்ணகி.அத்தகையவளை அழைத்துக் கொண்டு,அடர்ந்த பூஞ்சோலை வழியில் செல்லலாம்.ஆனால்………..

அங்கே நிலம் பிளக்கும்படி பெரிதாக வளர்ந்த வள்ளிக் கிழங்குகளைத் தோண்டி எடுத்த குழிகள் தென்படும்.அக்குழிகளை,செண்பக மரத்தின் தாதுக்களுடன் கலந்து பழம் பூக்கள் நிரப்பி வைக்கும்.இதை அறியாது,நாம் அவற்றின்மீது கால்வைத்தால்,குழிகளில் தவறி விழுந்து மீள முடியாத துன்பத்துக்கு உள்ளாவோம்.உதிர்ந்த பழைய பூக்களால் மூடிய குழிகளைவிட்டு ஒதுங்கிச் சென்றாலோ,தேனொழுகத் தொங்குகின்ற முதிர்ந்து பலாப்பழங்கள்,பகைவர் போல நம் தலையில் வந்து முட்டும்.மஞ்சள் செடியும் இஞ்சிச் செடியும் பின்னிப்பிணைந்து கிடக்கின்ற தோட்டங்களிலே,சிவந்த பலாமரத்தின் பலாச்சுளைகளில் இருந்து விழுந்த பலாக்கொட்டைகள் நம் காலை உறுத்தி வருந்த வைக்கும்.

குறிப்பு
—————–

 1. ஏதம்-துன்பம்
 2. நிறம்-தன்மை
 3. பயில்-மிக்க
 4. தண்டலை -சோலை
 5. படர்குவம்-செல்வோம்(படர்-செல்)
 6. அகழ் -தோண்டு
 7. பொங்கர்–பழைய பூ
 8. பொய்யறை-பொய்க் குழி
 9. கையறு துன்பம்-மீள முடியாத துன்பம்
 10. செம்மல்-பழைய பூ
 11. தேம்-தேன்
 12. அரில்-பின்னல்
 13. வலையம்-தோட்டம்,பாத்தி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , , , . Bookmark the permalink.

Comments are closed.