புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

6.வயல் வழி இயல்புகள்
col1

கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல்உழைப் படர்க்குவம் எனினே, ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80

கலங்கலும் உண்டுஇக் காரிகை,ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்,
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு,கொள்ளவும் கூடும், 85

குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை,
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி,
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்!

கயல் போன்ற நீண்டக் கண்களையுடைய கண்ணகியின் காதலனே! வயல் வழியே நாம் மதுரை செல்லலாம்,ஆனால்……

அந்த இடங்களில் உள்ள,மனம் வீசாத மலர்கள் நிறைந்திருக்கும் குளங்களில் செல்லும் கயல் மீன்களை,நீண்ட முதுகையுடைய வாளை மீன்கள் துரத்தும்.அவ்வாளை மீன்களை நீர்நாய்கள் வாயில் கவ்விப் பிடிக்கும்.தப்பிய வாளைமீன்கள்,விலாங்குமீன்கள் மின்னுகின்ற சேற்றுக்குத் துள்ளி தாவும்.இந்தக் காட்சியைக் கண்ணகி கண்டாள்,அவள் அஞ்சி திடுக்கிட நேரிடுமே!

அங்கே,கரும்பு தோட்டங்களில் காணப்படும் தேன்கூடுகள் உடைந்து,அவற்றிலிருந்து ஒழுகும் தேன் அருகிலிருக்கும் வண்டுகள் சூழ்ந்திருக்கும் பொய்கை நீரில் கலந்து விடக்கூடடும்.அடங்காத தாகத்தால் அறிவு மயங்கி,இவள் உள்ளங்கையால் அத்தண்ணீரை முகந்து பருகவும் கூடுமே!

களை பறிப்பவர்கள்,குவளை மலர்ச்செடிகளைப் பறித்து,வரப்பு வழிகளில் போட்டு வைத்திருப்பார்கள்.அதன் மலர்களின் தேனை உண்டு,புள்ளிகளையும் வரிகளையும் தன் உடம்பில் கொண்ட வண்டுகள் மயங்கி கிடக்கும்.நீங்கள் பயணக் களைப்பால் சோர்ந்து,அதன் மேல் பாதங்களை வைக்கவும் கூடுமே!

குறிப்பு
—————–

 1. உழை-பக்கம்
 2. காரிகை-பெண்
 3. இலஞ்சி-ஏரி,நீர் நிலை
 4. மலங்கு-விலாங்கு மீன்
 5. செறு-சேறு
 6. குடங்கை-உள்ளங்கை
 7. குறுநர்-பறிப்போர்
 8. பொறி-புள்ளி
 9. கிடக்கை-இடம்
 10. நெறி-வழி
 11. அஞர்-சோம்பல்

7.வேறு வழியில்லை

vaaikal

எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் 90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது, யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை, 95

நெறிஇருங் குஞ்சி; நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு’ என

ஓங்கி அலை வீசும் நீருடைய வாய்க்கால் வழியாகச் செல்லலாம்.ஆனால்…….

ஆங்கே அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய நண்டுகளும் நத்தைகளும் சிக்கிச் சிதைய நேரிடும்.நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.அப்பாவத்தை நாம் தாங்க முடியாது.

வயல்,சோலை தவிர மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.நெளிந்தக் கரிய தலைமுடியை உடைய கோவலனே!உன்னை நேசிக்கும் மனைவியுடன் செல்லும் போது சந்திக்கக் கூடிய சவால்களைக் குறிப்பால் உணர்ந்து,எந்தத் துயரமும் அவளுக்கு நேராமல் அவளைப் பாதுகாப்பாயாக! என்றார் கவுந்தியடிகள்.

குறிப்பு
—————–

 1. நந்து-நத்தை
 2. வெய்யோள்-விரும்புபவள்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>