புகாரில் ஒரு நாள்

காவிரிப்பூம் பட்டினத்துக்
கடற்கரையில் அன்றொருநாள்
பூவிரியும் சோலைகளின்
புதுமணத்தை அள்ளியுண்டு
மாலை பொழுதினிலே
மணற்பரப்பின் மேலமர்ந்து
தாலை அசைத்தொரு
தமிழ்ப்பாட்டு பாடலற்றேன்
பாட்டின் சுவையாலோ
பைந்தமிழின் திறத்தாலோ
கூட்டும் எழிலெல்லாம்
கொண்டவிளம் பெண்ணொருத்தி
இளநகை காட்டியென்றன்
எதிரிலே வந்துற்றாள்!
குளக்கமல முகமலரக்
கொவ்வை இதழ்துடிக்க
வணக்கம் எனவுரைத்து
வளர்க்காந்தன் கரங்குவித்தாள்!
இணக்கமுறும் அவளழகில்
ஈடுபட்டுப் பேசலுற்றேன்;
“பெண்ணரசே!பேரெழிலே!
பேசும்பொற் சித்திரமே!
விண்ணர மகளேநீ?
விளங்க வுரை” யென்றேன்.
“பூம்புகார் மங்கையான்
பொய்யுரையேன் உமக்கிந்தப்
பூம்புகார்ச் சிறப்பெல்லாம்
புலப்படுத்த வந்தேனால்!”
“நல்லதம்மா நானுமொரு
நற்றுனணயை நாடித்தான்
மெல்ல இவணிருந்தேன்
மெல்லிழையே நன்றி” யென்றேன்!
“வீண்பேச் சினியதெற்கு?
விண்டுரைக்க மாட்டாத
மாணுயர்ந்த பூம்புகார்
மாண்புகளைக் காட்டிடுவேன்;
பட்டிணம் என்றாலே
பூம்புகார்ப் பட்டினந்தான்!
தட்டில்லை!தடையில்லை!
தவறில்லை!ஆதலினால்,
இந்நகரார் வாழ்வதற்க்காய்
எவ்வூரும் புகாரே!
என்பதன்றோ இவ்வூருக்
கேற்ற பெயராகும்!
எழிலின் திருவுருவாய்
ஏழிசைக்கு நாயகியாய்
அழிவறு கூத்தியலின்
ஆரணங்காய் அரங்கேறிப்
பண்ணான்கும் கூத்துப்
பதினொன்றும் திறங்காட்டிக்
கண்டார்கள் உள்ளமெல்லாம்
கவர்ந்த கலையரசி
கானல் வரிபாடிக்
காதலனைத் தானிழந்தாள்
தானோர் பிழையறியாள்
தகவுடைய மாதரசி
மாதவியாள் நடமிட்ட
மாமலர்ப்பூஞ் சோலையிது!
காதம் பலகடந்து
காலங்கள் பலவந்து
நிற்கும் துரைபாரீர்!
நெடுங்கலங்கள் கொண்டுவந்த
முத்தும் பிரபொருளும்
மொய்த்துள்ள திறம்காணீர்!
கொண்டுவந்த பொருள்மீது
குத்துகிறார் புலிச்சின்னம்
பண்டங்கள் கொண்டுசெலும்
பரந்த கலமிவையாம்!
ஆங்கொருபால்,
காவிரிப்பெண் தன்கணவன்
கடலோடு கலப்பதுவும்
மேவுகடல் அலைக்கரத்தால்
மெல்ல அணைப்பதுவும்
கண்டீரோ?” என்றென்னைக்
கடைக்கண்ணால் தான்காண்டாள்!
“கண்டேன்” என்றவள்
கண்களையே நான்கண்டேன்!
“இருபத்தொரு நாட்கள்
இந்திர விழாநிகழும்
பெருநகரை இருபிரிவாய்ப்
பேசுதலும் அறியீரோ?
மருவூர்நற் பாக்கமிது
மாநகரின் ஒருபிரிவு;
பெருநிலா முற்றமொடு
பேசுமெழில் மாளிகைகள்,
பயன்தொலை வறியாத
பல்யவனர் இருப்பிடங்கள்,
நயத்தபல நாட்டினார்கள்
நன்குசெறி கரையிருப்பு!
சுண்ணமும் சாந்ததுவும்
சூழ்புகையும் பூவுடனே
வண்ணமும் விற்போர்கள்
வந்தலவும் பெருந்தெருக்கள்!
பட்(டு), எலி மயிராடை
பருத்தியுடை நெய்வார்கள்;
இட்ட்முறு பொன்னும்
எடுத்தபிற மணிவகையும்
சந்தனமும் அகிலுமெனச்
சார்ந்த வளப்பொருள்கள்
இந்த அளவினதென்
றெண்ணரிய மறுகுகளும்
எண்வகைக் கூலங்கள்
இனிதுவிற்கும் அங்காடி
இன்னபிற சூழ்ந்துள்ள
இப்பகுதி நீங்கிடுவோம்!
அப்பாலே,
பட்டிப் பாக்கமுண்டு
பார்த்திடுவோம் வாரீரோ?
கட்டிடம் பலசார்ந்த
கடிநகர்ப் பகுதியது
அரசப் பெருந்தெருக்கள்,
அருமறையோர் உறைவிடங்கள்,
பரசும் பெருவணிகர்
பல்குமெழில் மாளிகைகள்,
தேரோடும் வீதிகளும்
திருமணிகள் குயிற்றுநரும்
பார்காக்கும் உழவினரும்
பல்பிணியும் தீர்ப்பவரும்
நேருறவே சோதிடங்கள்
நிலைமொழியால் கூறுநரும்
எருறவே சித்திரங்கள்
இனித்தமுடைச் சிற்பங்கள்
வல்ல பெருங்கலைஞர்
வாழ்கின்ற வளமனைகள்
பல்கியுள வீதிகளும்
பார்த்து மகிழ்ந்திடுவீர்!
இவ்விரண்டு பாக்கங்கள்
இடைப்பட்ட் பெருநிலத்தில்
செவ்வியநா ளங்காடி
திகழும் வகை காணீர்!
அல்லங் காடியென
அமைந்த இராக்கடைகள்
பல்பொருளும் கொண்டுதிகழ்
பான்மையினைக் காண்பீரே!
அங்காடி வாயிலுற்ற
அழகார் திரைச்சீலை
இங்கிந்தப் பொருளுண்டென்
றியம்பும் திறமென்னே!
இவையன்றி,
முத்துநற் பந்தரொடு
பட்டியுரை மண்டபமும்
வாயிலின் தோரணமும்
வரிப்பொருளாய்க் கரிகாலன்
பெற்றுவந்த புகழக்குரிய
பீடுகெழு சின்னங்கள்
உற்றிங்கே திகழ்கின்ற
உயர்வுதனை என்சொல்வேன்?
கல்வோரைப் பிடித்தவர்
கழுத்தில் சுமையேற்றும்
வெள்ளிடை மன்றமெனும்
வியப்புடை மன்றமுண்டு!
கூனர் தொழுநோயர்
குளத்தில் மூழ்கிவந்தால்
ஈனம் தனையொழிக்கும்
இன்னிலஞ்சி மறைமுண்டு!
நஞ்சுண்டார் பேயுற்றார்
நாடி வலம்வந்தால்
விஞ்சு துயர்நீக்கும்
நீநெடுங்கால் மன்றமுண்டு!
பொய்த்தவ வஞ்சரையும்,
பொய்யொழுக்க்ப் பெண்டிரையும்
பொய்க்கரி புகல்வரையும்,
பிறர்மனை நயப்புரையும்
துணிவுடனே வஞ்சிக்கும்
தூய்மையிலா அமைச்சரையும்
பிணித்துக் குரலெழுப்பும்
பெரும்பூதச் சதுக்கமுண்டு!
அரைசுநெறி தான்தவறின்,
அறம்கூறும் அவையத்தார்
உரைசிறிதும் கோடினும்,
உள்ளம் மிகவருந்திக்
கண்ணீரைச் சிந்தித்தன்
கருத்தைப் புலப்படுத்தும்
பண்பில் திரியாத
பாவைமன்ற மிங்குண்டு!
நாமினிமேல்,
மக்கள் பலர்வாழும்
மருகுகளைச் சென்றடையவோம்;
தக்கநற் பட்டாடை
தமைக்களைந்து பருத்தியுடை
பூண்ட இவரெல்லாம்
பொங்கும் நிலாவழகில்
தூண்டும் மகிழ்வினராய்
சிவல்,கடாமோதவிட்டும்
மற்போரில் ஈடு’பட்டும்
மனந்துள்ளக் கடல்படிந்தும்
உற்சாக முடன்வழும்
ஒப்பரிய காட்சியதே
என்றுரைக்க நானுந்தான்
“ஏந்திழையே நீயெனக்கே
என்றுந் துணையாவாய்
என்றுசொல்லி அணைத்திட்டேன்,
‘ஒன்றுமில்லை’- வெறுந்தரையில்
உருண்டு கிடந்தேனால்!
கண்டதெல்லாம் கனவென்று
கருத மனமழிந்தேன்!
பூஞ்சோலை தானில்லை;
பொட்டல் மணல்வெளிதான்!
மாஞ்சோலை மாளிகைகள்
மாடங்கள் எவையுமில்லை!
விண்ணை மறைப்பதற்கோர்
மேற்கூரை யில்லாது
கண்ணகி சிலையொன்று
கவினிழந்து நிற்பதுவும்
சீர்நகரம் இன்றோர்
சிற்றுராய் நிற்பதுவும்
யாரிடத்துச் சொல்லிடுவேன்
யான்!


-கவிக்கோ ஞானசெல்வன்

கவிக்கோ ஞானசெல்வன்

நற்றமிழறிஞர் கவிக்கோ திரு.ஞானசெல்வதிற்கு,1968 ஜனவரி திங்கள் சென்னையில் நிகழ்ந்த இரெண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கவிதைப் போட்டியில் இரெண்டாவது பரிசு(பொற்பதக்கம்) ஈட்டித் தந்த கவிதை இது.எம்.ஜி.ராமச்சந்திரன்,ம.பொ.சி ஆகியோர் முன்னிலையில்,அறிஞர் அண்ணாவின் கரங்களால் கவிக்கோ.ஞானசெல்வன் இப்பரிசினை பெற்றார்.

கவிக்கோ திரு ஞானசெல்வன் கவிஞர்,சிறந்த தமிழ் அறிஞர்,நல்ல இலக்கிய பேச்சாளர்,தமிழ் கற்றுக் கொடுக்கும் பேராசான் .சிலப்பதிகாரத்தின் மீது பெரும் மதிப்பும்,புலமையும் கொன்டவர்.

சிலம்பு செல்வரின் சிலப்பதிகார சொற்பொழிவுகளால் கவரப்பட்டு,சிலம்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு ‘சிலப்பதிகாரச் சிறப்பு’,'சிலம்பின் பரல்கள்’ என்னும் நூல்கள் எழுதியுள்ளார்.

This entry was posted in சிலப்பதிகார கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>