புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

15.வம்பரின் கேலி

manmathan1

கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி, 215

மாதரும்,கணவனும்,மாதவத் தாட்டியும்,
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்,
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி-
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர், 220

‘காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்?’எனக் கேட்டு,ஈங்கு அறிகுவம்!’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசிதவத்தீர்!உடன்
‘ஆற்றுவழிப் பட்டோர் ஆர்?’என வினவ-என்
மக்கள் காணீர்,மானிட யாக்கையர் 225

பக்கம் நீங்குமின்,பரிபுலம் பினர்’ என,
‘உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ! கற்றறிந் தீர்எனத்-

பின்னர்,மேகங்கள் சூழ்ந்தச் சோலைகளில் இருந்த காவிரிப் பேரியாற்றின் நீர் நிறைந்த நெடுந்துறையை ஓடத்தால் மூவரும் கடந்து,குறைகள் தீர்க்கவல்ல கோயில்கள் இருந்த காவேரியின் தென்கரையை அடைந்தனர்.அங்கிருந்த மலர்கள் நிறைந்திருந்த பூஞ்சோலையிலே அமர்ந்து இளைப்பாறினர்.அப்போது,பரத்தைத் தொழிலைப் புதிதாக மேற்கொண்ட பரத்தை ஒருத்தியும்,பயனற்ற சொற்கள் பேசும் காமுகன் ஒருவனும்,பூந்தாது மணம் சூழ்ந்தச் சோலையில் புகுந்து,அம்மூவரின் அருகில் வந்தனர்.

கோவலனையும் கண்ணகியையும் பார்த்த அவர்கள்,’மன்மதனும் அவன் தேவி இரதியும் போல இருக்கும் இவர்கள் யார்? எனக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்’ என்று எண்ணியவராகக் கவுந்தியடிகளிடம் சென்றனர்.

‘நோன்புகள் நோற்றுப் பட்டினி கிடந்ததால் உடல் மெலிந்த தவத்தினை உடையவரே!உங்களுடன் வந்துள்ள இவர்கள் யார்?’ எனக் கேட்டனர்.

‘இவர்கள் என் மக்கள்!உங்களைப் போல மானிட உடலுடையவர்கள் தான் அவர்களும்.நெடுந்தூரம் நடந்து வந்ததால்,மிகவும் களைத்துச் சோர்ந்திருக்கின்றனர்.தொந்தரவு செய்யாமல் இவர்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.’, என்றார் கவுந்தியடிகள்.

‘என் மக்கள் என்று சொல்கின்றீரே,ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர்கள்,கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது உண்டா?நீர் கற்ற எந்த நூலிலும் உள்ளதா?’,என்று கேலி பேசினர் அந்தக் காமுகர்கள்.

குறிப்பு
—————–

 1. கிடக்கை-இடம்
 2. நீரணிமாடம்-நீர் மாடம்
 3. நியமம்-கோவில்
 4. வம்பு-புதுமை
 5. வறுமொழி-பயனற்ற சொல்
 6. கொங்கு-மணம்
 7. அலர்-மலர்
 8. குறுகினர்-நெருங்கிச் செல்லுதல்
 9. நொசி-நுண்மை
 10. ஆற்றுவழிப்பட்டோர்-வழியிற் கூடி வந்தோர்
 11. நோற்றுணல்-பட்டினி கிடந்துண்ணல்
 12. யாக்கை-உடல்
 13. பரி-மிகுதி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>