புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

16.கவுந்தியடிகள் இட்ட சாபம்

fox

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230

‘எள்ளுநர் போலும் இவர்,என்பூங் கோதையை,
முள்உடைக் காட்டின் முதுநரி ஆக’ எனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்,
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்,
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,

நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்,
அறியா மைஎன்று அறியல் வேண்டும்,
செய்தவத் தீர்!நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோ?என, 240
‘அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுக,ஈங்கு இவர்’எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின் 245
காவுந்தி ஐயையும்,தேவியும்,கணவனும்,
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என்.

வம்பரின் தீய வார்த்தைகளைக் கேட்ட கண்ணகி,தன் காதுகளை மூடிக் கொண்டு,தன் கணவன் முன்னே நடுநடுங்கி நின்றாள்.அதைப் பார்த்து,’பூமாலை போன்ற என் கண்ணகியை இவர்கள் கேலி பேசுகிறார்களே ! இவர்கள் முள் நிறைந்த காட்டில் வயதான நரிகளாகத் திரிந்து அலைவார்களாக’, எனச் சாபமிட்டார் கவுந்தியடிகள்.

தவத்தின் பயனாய் விளைந்த சாபம் என்பதால்,அப்போதே அது பலித்தது.சபிக்கப்பட்ட இருவரும் என்ன என்று உணரும் முன்னே முதுநரிகளாக மாறினர்.அவர்கள் பெரிய குரலில் ஊளையிட்டதால்,அந்தச் சத்தம் கேட்டு நறுமலர் அணிந்த கண்ணகியும்,கோவலனும் நடுங்கினர்.’அறநெறியிலிருந்து விலகிச் சென்ற இவர்கள் இப்படிப் பேசுவதற்குக் காரணம் அவர்களின் அறியாமைதான்.சிறந்த தவம் செய்தவரே! இச்சாபம் நீங்கி வாழும் கால எல்லையையும் நீங்கள் தயவுசெய்து கூறவேண்டும்’, என்று கவுந்தியடிகளிடம் வேண்டினர்.

‘தமது அறியாமையால் இந்த இழிவான பிறப்பை அடைந்த இவர்கள்,உறையூர் மதிற்புறத்தில் காவற்காட்டில் ஒளிந்து,பன்னிரு மாதங்கள் துன்புற்று வருந்திய பின்னர்,தங்களுடைய பழைய உருவம் பெறுவார்களாக’,என்று கவுந்தியடிகள் சாபவிமோசனம் தந்தார்.

பின்,தவத்தில் சிறந்த கவுந்தியடிகள்,கோவலன்,கண்ணகியோடு அங்கிருந்து கிளம்பினார்.முன்னர் ஒரு சமயம்,சோழமன்னனின் முறம் போன்ற காதுடைய யானை உறையூரை அடைந்தபோது,சிறகுடைய கோழி ஒன்று,அந்த யானையை எதிர்த்து போர் செய்து வென்றது.இதனால் சோழமன்னன் அந்நிலத்தைத் தலைநகராக்கி,’கோழி’ என்று பெயர் சூட்டினார்.இத்தகையச் சிறப்பு வாய்ந்த உறையூருக்குள் மூவரும் சென்றனர்.

குறிப்பு
—————–

  1. படர்நோய்-நினைப்பால் வருத்தம் தரும் துன்பம்.
  2. கூவிளி-ஊளையிடுதல்
  3. மதியம்-திங்கள்,மாதம்
  4. நொச்சி-மதில் புறம்
  5. புடை-பக்கம்
  6. முறம்செவி வாரணம்-முறம் போன்ற செவியுடைய யானை
  7. புறஞ்சிறை வாரணம்-புறத்தே சிறகுடைய கோழி

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>