புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

pugark

கட்டுரை

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும்,அவர்-தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும்,விண்ணவர் வரவும், 5

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும்,அவர்-தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்,புதுப்புனல் பொழிதலும்,
அரங்கும்,ஆடலும்,தூக்கும்,வரியும், 10

பரந்துஇசை எய்திய பாரதி-விருத்தியும்,
திணைநிலை வரியும்,இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்.
ஈர்-ஏழ் சகோடமும்,இடநிலைப் பாலையும்,
தாரத்து ஆக்கமும்,தான்தெரி பண்ணும், 15

ஊரகத் தேரும்,ஒளியுடைப் பாணியும்,
என்று இவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்,
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று. 20

முடியுடைய மன்னர் மூவருள்,வீரவளை அணிந்த பெரிய கைகளுடையவர்கள் சோழர் குலத்தில் பிறந்தவர்கள்.அவர்களின் அறம்,மறம்,ஆற்றல்,அவர்களின் பழம்பெரும் நகரமாகிய புகார் தன் பண்புகளால் ஏனைய நகரங்களைக் காட்டிலும் மேம்பட்டு திகழ்வதும்,விழாக்கள் மிகுந்திருந்த சிறப்பும்,தேவர்களின் வரவும்,குறையாத இன்பத்துடன் வாழும் குடிமக்களும்,விளையும் உணவுப்பொருள் பெருக்கமும்,கடவுளை ஒத்த காவிரி நீரின் தீமை நீக்கும் சிறப்பும்,பொய்க்காத வானமும்,அவ்வானம் புதிய நீரை மழையாகப் பொழியும் சிறப்பும்,ஆடல் அரங்கமும்,ஆடலும்,தூக்கும்,வரியும்,உலகப் புகழ் எய்திய பாரதி விருத்தி என்னும் பதினோரு வகை ஆடல்களும்,திணைநிலை வரியும்,இணைநிலை வரியும்,இவற்றில் பொருந்திய யாழின் தன்மையும்,அவற்றுள் சிறந்த பதினான்கு வகை இசைக்கோவையாகிய யாழின் சிறப்பும்,இடைநிலைப் பாலையும்,தாரம் என்னும் இசையினால் ஆக்கிக் கொள்ளும் பாலைப் பண்களின் இயல்பும்,அதன் வழித் தோன்றுகின்ற பெரும் பண்களின் தன்மையும்,புகார் நகரத்தின் அழகும்,உழத்தியர் பாடும் ஒளியுடைய பாணியும்,ஆகிய இவை அனைத்தும்,மேலும் இங்குச் சொல்லப்படாத இன்னும் பல சிறப்புகளுடன் ஒருமித்துப் பொருந்தி விளங்கும் புகார்க் காண்டம் முற்றிற்று.

குறிப்பு
—————–

  1. தடக்கை-பெரிய கை
  2. விறல்-பெருமை
  3. விழவு-விழா
  4. ஒடியாத-குறையாத,கெடாத
  5. கூழி-உணவு
  6. தேர்-அழகு,பொலிவு

வெண்பா

காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும்போல் வாழியரோ – வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

கடலாகிய அகழோடு அமைந்த உலகிற்கு,மாலை என்னும் புகழுடன் விளங்கும் காவிரிப்பூம்பட்டினம்,

காலையிலே உதித்து ஒளிபரப்பும் சூரியனையும்,மாலையிலே எழுந்து வளரும் இயல்புடைய திங்களையும் போல என்றும் நிலைத்து வாழ்வாங்கு வாழ்வதாக!

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>