மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

vettuvavari

வேட்டுவ வரி

11.வேட்டுவரின் கொடை

vvblog10

இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர்
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்;
கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14

முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர்
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்;
கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன்,
புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15

கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர்
அயலூர் அலற,எறிந்தநல் ஆனிரைகள்;
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர்,எயிற்றியர்,முன்றில் நிறைந்தன! 16

“இளமையான மாந்தளிர் நிறமுடைய வேட்டுவ மகளே!இவற்றைப் பார் !

உன் மூத்தோர் முன்பொரு நாள்,பகைவர்களை வென்று பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வந்தனர்.இன்று அவை கொல்லன், துடி கொட்டும் துடியன்,பாடல்களைப் பண்ணுடன் சேர்த்து இசைக்க வல்ல நல்ல யாழ்ப்பாணன் ஆகியோர் வீட்டின் முன்வாசலில் நிறைந்து நிற்கின்றன.

மயிலிறகின் அடிப் பகுதியை ஒத்த இளமையான புன்னகையை உடையவளே!

உன் முன்னோர் முன்பு மாடு மேய்ப்பவர் அலறஅலற பசுக்களைக் கவர்ந்து வந்தனர்.இன்று அவை கள்விற்பவள்,நன்றாக உளவறியும் வேட்டுவன்,பறவையின் ஒலியின் மூலம் சகுனப்பொருத்தம் கூறும் சோதிடன் ஆகியோர் வீட்டின்முன் நிறைந்துள்ளன.அதனையும் காண்பாயாக !

பெரிய மலர் போன்ற கண்களை உடையவளே!

உன் முன்னோர் முன்பு பகைவர் ஊரே வருந்தி கூச்சலிடும் வண்ணம் அவர்களின் நல்ல பசுக் கூடங்களை வென்று வந்தனர்.இன்று அவை கொடிய சொற்களும்,நரைத்த முதிர்ந்த தாடியும் உடைய முதிய மறவர் மறத்தியர் வீட்டு முன்வாசலில் நிறைந்து நிற்கின்றன.அதனையும் காணாய் !”

என்று பகைவரிடம் கவர்ந்து வந்த பசுக் கூட்டம் என்னும் செல்வத்தை,தங்கள் முன்னோர்கள் பிறர்க்குக் கொடையாக அளித்த பெருமையைக் கூறினார்கள்,கூடியிருந்த வேட்டுவர்கள்.

குறிப்பு

 1. எயிற்றி-வேட்டுவ மகள்
 2. இளமா-இளமையான மாந்தளிர் நிறம்
 3. ஐயர்-முன்னோர்
 4. தலைநாள்-முந்திய நாள்
 5. ஆனிரைகள்-பசுக் கூட்டம்
 6. வேட்டம்-வேட்டை
 7. கொல்லன்-இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்
 8. துடியன்-துடிக் கொட்டுபவன்(துடி-தோலிசைக் கருவி,உடுக்கை)
 9. முன்றில்-முன்வாசல்
 10. கொளைபுணர்-பண்ணுடன் சேர்த்து (கொளை-பண்,புணர்-சேர்த்தல்)
 11. முருந்து-மயில் இறகின் அடிப்பகுதி
 12. கரந்தையார்-பசுக் கூட்டத்தை மேய்ப்பவர்.
 13. விலையாட்டி-விற்பவள்
 14. வேய்-ஒற்று
 15. கானவன்-மறவன்,வேட்டுவன்
 16. புள் வாய்ப்பு-ஒலியின் மூலம் நிமித்தம்(குறி) கூறுதல்
 17. கணி-ஜோதிடன்
 18. கயமலர்-பெரிய மலர்(கய-பெரிய)
 19. அயலூர்-பகைவரின் ஊர்

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>