மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

purancheri

புறஞ்சேரி இறுத்த காதை

 

 

3.கதிரவன் வருகை

PK3
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக், 30
‘கொடுவரி மறுகும்,குடிஞை கூப்பிடும்,
இடிதரும் உளியமும்,இனையாது ஏகு’ எனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி,
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங்கு,ஆரிடை-கழிந்து 35
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப,
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து-
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் 40
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி

நீண்ட தூரம் நடந்து வந்ததால் சோர்ந்திருக்கும் கண்ணகியை நோக்கி கோவலன்,“இந்த வழியில் கொடிய புலிகள் திரியும்,ஆந்தைகள் அலறும்,இடி போல ஓங்கி கரடி சத்தம் போடும்.நீ இதற்கெல்லாம் அஞ்சாமல் செல்ல வேண்டும்” என்று தைரியம் கூறினான்.மேலும்,வளைந்த வளையலை அணிந்த அவளின் சிவந்த கை பற்றிக்கொள்ள ஆதரவாகத் தன் தோளை கொடுத்தான்.

தீய உபதேசங்கள் இல்லாத,குற்றமற்ற அறிவினை மற்றவர்களிடம் இருந்து கேட்டறிந்தவர் கவுந்தியடிகள்.வழி முழுதும் அறத்தை போதிக்கும் இவரின் பேச்சை கேட்டவாறு,பல கடினமான இடங்களைக் கடந்துச் சென்றனர்.

அதிக வெப்பம் நிலவிய காலத்தில்,மூங்கில்கள் வெப்பத்தால் கரிந்து கிடக்கும் காட்டில் இருந்த காட்டுக்கோழிகள் கதிரவனின் வரவை கூவி அறிவித்தன.வேதத்தை ஓதுவதற்குப் பதிலாக ‘வரிப்பாடல்’ என்னும் இசையைப் பாடி தொழில் செய்த,பூணூலை மார்பில் அணிந்த அந்தணர்கள் வாழ்ந்துவந்த குடியிருப்பை அவர்கள் மூவரும் சென்று சேர்ந்தனர்.

அந்த அதிகாலை வேளையில்,கண்ணகியுடன் கவுந்தியடிகளையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கோவலன் அமரச் செய்தான்.

குறிப்பு

 1. ஆரிடை-அரிதான வழி
 2. உழந்த-வருந்த
 3. கொடுவரி-வளைந்த வரிகளுடைய புலியைக் குறிக்கும்
 4. மறுகும்-திரியும்
 5. குடிஞை-ஆந்தை
 6. உளியம்-கரடி
 7. ஏகு-செல்
 8. தொடி-வளைவு
 9. மறவுரை-தீய உபதேசம்
 10. வேனல்-வெப்பம்
 11. வேய்கரி-வெந்து கரிந்து
 12. வாரணம்-கோழி
 13. இயம்ப-ஒலிக்க
 14. நவில்-பேசு,கூறு
 15. புரிநூல்-முப்புரிநூல்,பூணூல்
 16. உறைபதி-உறைவிடம்
 17. சிறையகம்-சுற்றும் வேலியிட்ட காவலான இடம்

- மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>