மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

uklogo
ஊர்காண் காதை

17.அங்காடித் தெரு

uk14

வையமும்,பாண்டிலும்,மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும்,வீழ்மணித் தோட்டியும்,
அதள்புனை அரணமும்,அரியா யோகமும்,170
வளைதரு குழியமும்,வால்வெண் கவரியும்,
ஏனப் படமும்,கிடுகின் படமும்,
கானப் படமும் காழூன்று கடிகையும்,
செம்பிற் செய்நவும்,கஞ்சத் தொழிலவும்,
வம்பின் முடிநவும்,மாலையிற் புனைநவும், 175
வேதினத் துப்பவும்,கோடுகடை தொழிலவும்,
புகையவும்,சாந்தவும்,பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய,
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்

‘வையம்’ என்னும் மூடு வண்டிகள்,’பாண்டில்’ என்னும் இரட்டை உருளைகளின் மேல் செல்லும் வண்டிகள்,அழகிய தேர் நிற்கும் ‘கொடிஞ்சி’,உடலுக்குத் தேவையான கவசம்,அனைவராலும் விரும்பப்படும் மணிகள் பதிக்கப்பெற்ற ‘தோட்டி’ என்னும் அங்குசங்கள்,தோலால் செய்யப்பட்ட கைகளுக்கான உறைகள்,இடுப்பில் அணியும் ‘அரைப்பட்டிகை’,வளைதடிகள்,வெண் சாமரங்கள்,பன்றிமுகக் கேடயங்கள்,சிறிய கடுகளவு உள்ள கேடயங்கள்,காட்டின் உருவம் பொறித்த படங்கள்,முத்துப் பதித்த குத்தும் கோல்கள்,செம்பு மற்றும் வெண்கலப் பொருட்களால் செய்தவை,கயிற்றால் முடிந்த பொருட்கள்,மாலையாகக் கோர்த்துக் கட்டினவை,ஈர்வாள் முதலிய கருவிகள்,தந்தத்தைக் கடைந்து செய்த வேலைப்பாடுகள்,வாசம் மிகுந்த புகைக்கான பொருட்கள்,பல வகைச் சாந்துகள்,பூவால் கட்டப்பட்ட மாலைகள் முதலியவை வகைவகையாகக் குவிந்து,இனந்தெரியாதபடி வளம் செறிந்துக் கிடக்கும்,வேற்றரசுகளும் விரும்பும் செல்வத்தைப் பெற்றிருந்தன மதுரையின் அங்காடித் தெருக்கள்.

இந்த வீதிகளைப் பார்த்துக் கொண்டே கோவலன் சென்றான்.

குறிப்பு

 1. வையம்-மூடு வண்டிகள்
 2. பாண்டில்-சக்கரம்
 3. கொடிஞ்சி-தேரில் அமருமிடம்
 4. வீழ்-விரும்பும்
 5. தோட்டி-அங்குசம்
 6. அதள்-தோல்
 7. அரணம்-கைத்தளம்,கையுறை
 8. அரியா யோகம்-அரைப்பட்டிகை,பெண்கள் இடுப்பில் அணிவது
 9. குழியம்-தடி
 10. வெண்கவரி-வெண்சாமரை
 11. ஏனம்-பன்றி
 12. கிடுகின்படம்-தோல் கடகு
 13. கானம்-காடு
 14. கஞ்சம்-வெண்கலம்
 15. வம்பு-கயிறு
 16. வேதினம்-ஈர்வாள்,ஈர்க்கும் வாள்
 17. துப்பு-கருவி
 18. கோடு-தந்தம்
 19. விழை-விருப்பம்

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>