மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

ak
அடைக்கலக் காதை

 


5.தொலையாத செல்வம் உடைய கோவலன்

 

AK5
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக,
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல, 55

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்,
“கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை,
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க”, எனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60
மாட மறுகின் மனைதொறு மறுகிக்,
“கருமக் கழிபலங் கொண்மி னோ” எனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்,
“யாதுநீ யுற்ற இடர்? ஈதுஎன் ?” என,
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி, 65

“இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்,
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைக” என,
“அஞ்சல்! உன்றன் அருந்துயர் களைகேன்;
நெஞ்சுறு துயரம் நீங்குக,” என்றாங்கு,
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்,
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75

“தன் குழந்தையின் நலனுக்காகக் கீரிப்பிள்ளையைக் கொன்றாள் ஒரு பிராமணப் பெண்.அதனால் ஏற்பட்ட பாவம் நீங்க,அவள் கணவன் கங்கையில் நீராடி பரிகாரம் செய்வதற்காக வட திசை நோக்கிச் சென்றான்.செல்லும் முன்,‘உன் கையால் இனி உணவு உண்டு வாழ்வது முறையற்றது!’,என்று கூறி,’இந்த வடமொழி ஏட்டினை,பிறருக்காக என்று வாழும் வாழ்க்கை கொண்ட மனிதன் ஒருவனைச் சந்தித்துக் கொடுப்பயாக’,என்று மனைவியிடம் கூறிச் சென்றான்.

அந்த ஏட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு,’பீடிகைத் தெரு’ என்னும் கடைவீதிகளுக்கும்,வசதி படைத்த வணிகர் வாழும் மாட மாளிகைகள் உள்ள வீதிகளுக்கும் சென்றாள்.போகும் இடங்களில் எல்லாம்,’இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்,என் பாவத்தைப் போக்கி நீங்கள் புண்ணியம் பெறுங்கள்’,என்று கதறினாள்.

அவள் கதறியதைக் கேட்ட நீ,அவளை அழைத்து,”நீ அடைந்த துன்பம் என்ன ?உன் கையில் வைத்திருப்பது என்ன?”,என்று அவளிடம் கேட்டு விசாரித்தாய்.அவளும் நேர்ந்த துன்பத்தை உன்னிடம் சொன்னாள்.“இந்த ஏட்டினை வாங்கிக்கொண்டு,அதன் பொருள் அறிந்து,அதன்படி உங்கள் கையில் இருப்பதைத் தந்து என் கடுமையான துயரத்தை நீக்குங்கள் ” என்று வேண்டினாள். அவளிடம், ‘அஞ்சாதே! உன் கடுமையான துயரத்தை நான் போக்குகிறேன்.உன் மனதில் உள்ள துன்பம் விரைவில் நீங்கும்”,என்று அவளுக்கு நீ ஆறுதல் கூறினாய்.

அப்போதே,வேதம் ஓதும் பிராமணர் எழுதிய அறநூல்களில் கூறியபடி,கொலை செய்த பாவம் நீங்கி,அவள் துயரம் போக்கும் வண்ணம் தானங்கள் பல செய்தாய்.காடு சென்ற அவள் கணவனையும் தேடிப் பிடித்து அவளிடம் சேர்த்து வைத்தாய்.தளராத செல்வமும்,மிகுந்த பொருட்களும் தந்து,அவர்களின் நல்வாழ்க்கைக்கு வழி வகுத்தாய்.அவ்வாறு செய்த நீ,நல்ல வழியில் வந்த தொலையாத செல்வமுடையன் !”,

என்று ஒரு பெண்ணை அவள் கணவனுடன் கோவலன் சேர்த்து வைத்த கதையைச் சொல்லி,அவனைப் புகழ்ந்தார் மாடலன்.

குறிப்பு

 1. நகுலம்-கீரி
 2. கடவது-செய்யவேண்டியது
 3. கைத்து-கைப்பொருள்,கையில் உள்ள
 4. ஊண்-உணவு
 5. பீடிகைத் தெரு-பெரிய கடை வீதி
 6. மறுகு-குறுந்தெரு
 7. மறுகி-சுழன்று
 8. கருமம்-பாவம்
 9. கழிபலம்-பிறருடைய தீவினையை போக்குவதால் ஒருவருக்கு உண்டாகும் பலன்
 10. கொண்மினோ-கொள்ளுங்கள்
 11. மறையாட்டி-பார்ப்பனி,பிராமணப் பெண்
 12. கூஉய்-கூய்,கூவி
 13. இடர்-துன்பம்
 14. வான்-பெரிய
 15. செப்பி-கூறி
 16. இதழ்-ஏடு
 17. அஞ்சல்-பயப்பட வேண்டாம்
 18. உன்றன்-உனது
 19. ஓத்து-மறை,வேதம்
 20. உரைநூல்-விளக்கம் தந்து எழுதப்பட்ட நூல்
 21. கிடக்கை-உள்ளே இருக்கும் பொருள்,விதி
 22. தீத்திறம்-தீயச் செயல்
 23. செய்துயர்-செய்த பாவம்
 24. கானம்-காடு
 25. ஒல்கா(த)-தளராத
 26. உறு-மிக்க

 

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>