மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

ak
அடைக்கலக் காதை

 

7.கோவலன் புகாரை விட்டு வந்த காரணம்


ak7

“இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்கொல்,ஒருதனி யுழந்து,இத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்தகோ பால! நீ”, என வினவக்

கோவலன் கூறும்:”ஓர் குறுமகன்-தன்னால் 95
காவல் வேந்தன் கடிநகர்- தன்னில்,
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்,
அணித்தகு புரிகுழல் ஆய்-இழை தன்னொடும்
பிணிப் அறுத் தோர்-தம் பெற்றி யெய்தவும்,100

மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து,
காமக் கடவுள் கையற் றேங்க,
அணிதிகழ் போதி அறவோன்-தன்முன்,
மணிமேகலையை மாதவி யளிப்பவும்,
நனவுபோல நள்ளிருள் யாமத்துக் 105
கனவு கண்டேன்; கடிதீங் குறும்” என

மாடலனின் கேள்வி:

“எனக்குத் தெரிந்தவரை இந்தப் பிறவியில் நீ நல்லதையே செய்திருக்கிறாய் ! தனியாக மாணிக்கத் தளிர்போன்ற கண்ணகியுடன் மிகுந்த வருத்தத்துடன் இங்கே வந்திருப்பதற்குக் காரணம்,நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக இருக்குமோ?”,என்று கோவலனிடம் வருத்தத்துடன் கேட்டான் மாடலன்.

கோவலன் பதில்:

“கீழ்த்தரமான ஒருவன் செய்த சூழ்ச்சியால்,காவல் காப்பதில் வல்லவனான பாண்டியனின் மதுரை நகரில்,ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட மணம் கமழும் கூந்தலையுடைய கண்ணகி நடுங்கும் வண்ணம் துயரடைந்தாள்.நான் உடுத்திருந்த ஆடை பிறரால் பறித்துக்கொள்ளப்பட்டுக் கொம்புகள் உடைய எருமையின் மீது ஏறி ஊர்ந்து சென்றேன்.அதன் பின்,அழகான சுருண்ட கூந்தலையும்,ஆராய்ந்த நகைகளையும் உடைய கண்ணகியும்,நானும் பற்றுகளைத் துறந்த சான்றோர் பெரும் பேற்றினைப் பெற்றோம்.

தன் மலரம்புகளை வறண்ட நிலத்தில் வீசி எறிந்துவிட்டு,மன்மதன் செயலற்று ஏங்கி அழுமாறு,மாதவி அழகுமிக்க மணிமேகலையைப் போதி மரத்தின் அடியில் உள்ள புத்தர் முன் துறவியாக்கினாள்.நள்ளிரவான யாமத்தில்,உண்மையில் நடப்பதுப் போலத் தோன்றும் இப்படியொருக் கனவைக் கண்டேன்.அதனால்,கெடுதல் ஏதாவது வரும் என பயந்து புகாரை விட்டுவிட்டு இங்கே அவசரமாக வந்து சேர்ந்தேன் “,

என்று மாடலனுக்குப் பதில் கூறினான் கோவலன்.

குறிப்பு

 1. இம்மை-இந்தப் பிறவி
 2. உம்மை-முற் பிறவி
 3. உழந்து-வருந்தி
 4. கொழுந்து-தளிர்
 5. மாமணி – முழு மாணிக்கம்
 6. விருத்தம்-அறிவு
 7. கோபால-கோவல (கோபாலன்-கோவலன்)
 8. குறு(மை)-கீழ்மை
 9. கடிநகர் -காவல் உள்ள நகரம்(கடி-காவல்)
 10. நாறு(ம்)-வீசும்,மணக்கும்
 11. கோட்டு மா – எருமைக்கடா
 12. கூறை-ஆடை
 13. கோள்பட்டு-பிடிக்கப்பட்டு
 14. அணித்தகு-அழகு உடைய(அணி-அழகு தகு-தகுந்த)
 15. புரிகுழல்-சுருண்ட கூந்தல்
 16. ஆயிழை-ஆராய்ந்த அணிகலன்கள்( ஆய்-ஆராய்ந்த இழை-நகை,அணிகலன்)
 17. பிணிப்பு-பற்று
 18. பெற்றி-பேறு,பெருமை
 19. வறுநிலம்-வெறுமையான நிலம்,(வறு-வெற்று)
 20. வாளி-அம்பு
 21. கையற்று -செயலற்று
 22. போதி-போதி மரம்
 23. அறவோன்-புத்தரை குறிக்கும்
 24. நனவு-நினைவு,விழிப்பு
 25. யாமம்-நள்ளிரவு
 26. கடிது-கடினமானது
 27. உறும்-சேரும்

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>