மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

ak
அடைக்கலக் காதை

 

9.அடைக்கலம் தரும் பொறுப்பைத் தந்தார்

AK9
“ஆகாத் தோம்பி,ஆப்பயன் அளிக்கும் 120
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை;
தீதிலள்,முதுமகள்,செவ்வியள்,அளியள்,
மாதரி- தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி,
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் 125

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்,
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் 130

“பசுக்களை நோய்கள் அண்டாது பாதுகாத்து,’ஆப்பயன்’ என்னும் அவை தரும் பயன்களான பால் முதலியவற்றை அனைவருக்கும் அளிக்கின்ற இடையரின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது இல்லை.இவளோ குற்றமற்றமில்லாத பண்பு உடையவள்.இந்த வயது முதிர்ந்த பெண்,நேரான குணமுடையவள்,இரக்கத்துடன் பிறர்க்கு உதவுபவள்.எனவே இந்த மாதிரியின் அடைக்கலத்தில் மடந்தையான கண்ணகி இருப்பது பொருத்தமாக இருக்கும்”,என்று எண்ணினார் கவுந்தியடிகள்.

“மாதரி கேள்! இந்தப் பெண்ணின் தந்தை,மாமனாரின் பெயரைக் கேட்டால்,அவர் குலத்தைச் சேர்ந்த இந்நகரில் வாழும் பெருவணிகர் எல்லோரும் தாங்கள் பெறுதற்கு அரிய செல்வத்தைப் பெற்றோம் என்று எண்ணி அவர்களை வரவேற்று விருந்தினராக்கி உபசரிப்பார்கள்.இந்தப்பெண்னை,காவல் உடைய தங்களது பெரிய மாளிகையில் தங்க வைப்பார்கள்.அப்படி பெரிய செல்வந்தர்களின் வீட்டில் அவள் அடைக்கலம் புகும் வரை,இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு அவளை பாதுகாக்கும் பொறுப்பைத் தருகிறேன் “,என்று மாதரியை நோக்கி கூறினார் கவுந்தியடிகள்.

குறிப்பு

 1. ஆ-பசு
 2. ஓம்பி-பேணி,பாதுகாத்து
 3. கோவலர் -இடையர்,ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்
 4. கொடும்பாடு-கொடிய துன்பம்
 5. தீதிலள்-குற்றம் இல்லாதவள்(இலள்-இல்லாதவள்)
 6. முதுமகள்-வயது முதிர்ந்த பெண்
 7. செவ்வியள்-நேர்மையானவள்
 8. அளியள்-இரக்கம் உடையவள்
 9. அளியள் -இரக்கத்துடன் அளிக்கத் தக்கவள்
 10. ஆப்பயன்-பசுவினால் அடையக்கூடியப் பயன்கள்
 11. மடந்தை-பெண்,14 முதல் 19 வரை வயதுள்ள பெண்
 12. ஏதம்-குற்றம்
 13. தாதை-தந்தை
 14. குலவாணர்-ஒரு குலத்தில் பிறந்து வாழ்பவர்( வாணர்-வாழ்பவர் )
 15. கருந்தடங் கண்ணி-கரிய பெரிய கண்கள்(தடம்-பெரிய)
 16. கடிமனை-காவலுடைய இடம்(கடி-காவல் )
 17. இடைக்குல -இடையர் குலம்

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>